சென்னை, மே 18 இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான 5-ஆம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் (AMCA) ‘விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மய்யம்’ தமிழ்நாட்டிற்கு வராமல், அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ₹15,000 கோடி மதிப்பிலான இந்த மெகா பாதுகாப்புத் திட்டம், ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு ஆகியோர் இணைந்து நடத்தியுள்ளனர்.
ஓசூர் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? – டி.ஆர்.பி.ராஜா ஆதங்கம்
இந்த இடமாற்றம் குறித்து திமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
“நாம் பயந்ததுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது! தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழ்நாடு வழங்க முன்வந்த போதிலும், அதிநவீன போர் விமான சோதனை மையத் திட்டத்தை தமிழ்நாடு இழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.”என்று டி ஆர் பி ராஜா கூறியுள்ளார்
கடந்த 3 ஆண்டுகால உழைப்பு வீண்
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசு, இந்தத் திட்டத்தை ஓசூரில் அமைப்பதற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
தமிழ்நாடு அரசு முன்வைத்த சலுகைகள்
இத்திட்டத்திற்காக 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்தது.பெங்களூருவில் உள்ள ஏடிஏ (ADA) தலைமையகத்திற்கு மிக அருகில் அமையும் வகையில், ஓசூர் விமான நிலையத்திற்குள் 3.5 கி.மீ நீள ஓடுதளத்தையும் (Runway) அமைத்துத் தர முன்மொழிந்தது.
“இந்த ஒரு திட்டத்திற்காக நான் பல கூட்டங்களை நடத்தினேன். எங்கள் குழுவினர் கடுமையாக உழைத்தனர். ஆனால், தற்போது இவ்வளவு முக்கியமான திட்டம் மாற்றப்பட்டிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
“கூட்டாட்சித் தத்துவத்திற்கு
இழைக்கப்பட்ட அநீதி”
இழைக்கப்பட்ட அநீதி”
ஒன்றிய அரசின் இந்த முடிவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என சாடியுள்ள அவர், “நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு உத்தேச முதலீடுகள் எவ்வாறு அரசியல் அடிப் படையில் தீர்மானிக்கப்பட முடியும்? தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஆந்திராவின் புட்டபர்த்தி தளம், நாம் தமிழ்நாட்டில் வழங்க முன்வந்த இடத்தை விட தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது அல்ல! இந்த இடமாற்றம் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்; அதோடு கூட்டாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையைக் கடுமையாகச் சிதைப்பதாகும். இதற்கு ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அவசரக் கோரிக்கை!
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைக் குறிப்பிட்டுப் பேசிய டி.ஆர்.பி.ராஜா, கொள்கைத் தொடர்ச்சிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் இத்தகைய முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மவுனம் கலைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். “இத்தகைய உத்தேச முதலீடுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து பாதுகாப்பதற்கு, மாநிலத்திற்கு உடனடியாக ஒரு சுறுசுறுப்பான மற்றும் திறமையான தொழில்துறை அமைச்சர் தேவை. தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். நமது நில அமைப்பு, மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு மேன்மைகளை விளக்கி, பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் அவசரமாகக் கடிதம் எழுத வேண்டும். நமக்கே உரித்தான ஒவ்வொரு உத்தேச முதலீட்டிற்காகவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என டி.ஆர்.பி.ராஜா தனது பதிவில் பதிவிட்டுள்ளார். பல ஆயிரம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்த ₹15,000 கோடி மதிப்பிலான அதிநவீனப் பாதுகாப்புத் திட்டம் அண்டை மாநிலத்திற்குச் சென்றுள்ளது, புதிய அரசுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.
