ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்!

கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பாக கியூட் தேர்வு எழுதவேண்டும்!
பிறகு எதற்கு பிளஸ் டூ படிப்பு? மேல்நிலைப் பள்ளிகள் எதற்காக? உயர்நிலைப் பள்ளிகள் எதற்காக?
சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, மே 17 கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பாக கியூட் தேர்வு எழுதவேண்டும். பிறகு எதற்கு பிளஸ் டூ படிப்பு?  மேல்நிலை பள்ளிகள் எதற்காக? உயர்நிலை பள்ளிகள் எதற்காக? இது அத்தனையும் அறிவார்ந்த கேள்விகள். ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பாக கியூட் தேர்வு எழுதவேண்டும்! பிறகு எதற்கு பிளஸ் டூ படிப்பு? மேல்நிலைப் பள்ளிகள் எதற்காக? உயர்நிலைப் பள்ளிகள் எதற்காக? சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரைதிராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!தமிழர் தலைவர் ஆசிரியர் உரைகுலதர்மக் கல்வியை இடம்பெறாமல் தடுத்த மண், பெரியார் மண்ணான தமிழ் மண்!இந்தியா முழுவதும் சமூகநீதி பரவியது!திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றதுஉங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!விஷமத்தனமான ஒரு தவறான கொள்கையை, பரப்பினார்கள்!முழுக்க முழுக்க மீண்டும் மனுதர்ம ஆட்சியை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான்!மீண்டும் மோடி ஆட்சியின் மூலமாக ஆர்எஸ்எஸ் செய்ய முனைகிறது!

திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

‘‘இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ஒழிக்க’’ வலியுறுத்தி நேற்று (16.5.2026) தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில்  மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நேற்று (16.5.2026) காலை 10 மணியளவில்,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினர்  திரளாகப் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

இம்மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  ஆற்றிய உரை வருமாறு:

மிகக் குறுகிய காலத்தில் அறிவித்திருந்தாலும், நீட் ஒரு நீண்ட நோய். தமிழ்நாட்டினுடைய கல்வியை மட்டு மல்ல, இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்களின் கல்வியைப் பறிப்பது உள்பட, அதாவது உயர்ஜாதிக்காரர்கள் மட்டுமே பயன்படக் கூடிய, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு கல்வி முறை மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்றுதான், நீட் தேர்வாகும்.

குலதர்மக் கல்வியை இடம்பெறாமல் தடுத்த மண், பெரியார் மண்ணான தமிழ் மண்!

மருத்துவக் கல்வியில், தொழிற் கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. அது இந்தியாவிலேயே வியப்பபைத் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது. திராவிடம் அதனைச் செய்து வருகிறது; ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்னும் வேகமாக அதனை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றி ருக்கிறது என்பதையெல்லாம் கண்டு, பொறுக்க முடியாதவர்கள் – தந்தை பெரியார் மண்ணிலே மனுதர்மத்திற்கு இடமில்லை; இங்குக் குலதர்மக் கல்வியை இடம்பெறாமல் தடுத்த மண், இந்த மண் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் என்ற ஒரு கண்ணிவெடியைப் புதைத்து, நம்முடைய இளம் பிள்ளைகளுடைய கனவுகளையெல்லாம் தகர்த்து வரக்கூடியதை எதிர்த்து, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா முழுவதும் சமூகநீதி பரவியது!

இது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல, இதுதான் சரித்திரத்தின் திருப்பு மய்யமும்கூட. தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரை தோற்றதாக வரலாறே கிடையாது.  1952 இல், வகுப்புவாரி உரிமையை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கொடுத்த பிறகும்கூட, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா போன்றவர்களும்,  தனித்து திராவிட இயக்கமும்தான் நின்று,  களத்தில் போராடிய காரணத்தினால்தான், அதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த சமூகநீதி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிற்குப் பரவலான பலன்  கிடைத்தது.

இங்கே அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், கொள்கைக் கூட்டணி என்பதுதான் மிக முக்கியம். கொள்கைக்காகத்தான் கூட்டணியே தவிர, பதவிக்காக கூட்டணி அல்ல என்பதை உணர்ந்து, திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்த நிலையில், மிகக்குறுகிய காலத்தில் நடைபெறுகின்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் பங்கேற்று இருக்கின்றார்கள்.

திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றது

இவ்வார்ப்பாட்டம் சென்னை தலைநகரிலே மட்டும் நடைபெறவில்லை தோழர்களே, தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றது.

இங்கே எத்தனைக் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திலும் தோழர்கள் பங்கேற்று, இப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்றோடு இந்தப் போராட்டம் முற்றுப் பெறக்கூடிய போராட்டமா? என்றால், இல்லை, இந்தப் போராட்டம் ஒரு தொடக்கமே தவிர, இது முடிவல்ல. இனிமேல், இந்தப் போராட்டம் எவ்வளவு வேகமெடுக்கவேண்டும் என்பதை கொள்கை எதிரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு  சூழலை உணர்ந்து, திரா விட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள் இப்போராட்டத்திற்குச் சிறப்பான ஆதரவினைக் கொடுத்தார்கள். அதேபோல, ம.தி.மு.க. பொதுச்செய லாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள், ஓர் அறிக்கையைக் கொடுத்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள தி.மு.க.வின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவராகவும், சீரிய கொள்கை வீரராகவும் இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அரசியல் ஆய்வு செயலாளர் தோழர் ஆவடி அந்திரிதாஸ் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் தோழர் எஸ்.கே.சிவா அவர்களே,  சிபிஎம் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய தோழர் ஜி.செல்வா அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் கே.எம்.நிஜாமுதீன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின்  துணைப் பொதுச்செயலாளர் தோழர் யாகூப் அவர்களே, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன் அவர்களே, எஸ்டிபிபிஅய் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரியம் அவர்களே,

உங்கள் அனைவருக்கும்
என்னுடைய அன்பான வணக்கம்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் உமா அவர்களே, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களே, சிறப்பாக அனைவரையும் வரவேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி அவர்களே, இப்போராட்டத்தில், தொடக்க உரையாற்றிய கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, மற்றும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்கின்ற அருமைத் தோழர்களே, போராட்ட வீரர்களே, கட்சிக ளுக்கு அப்பாற்பட்டு இவ்வளவு சிறப்பாக வந்து குழுமி இருக்கக்கூடிய ஊடக நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

இப்போராட்டத்திற்காக நாம் வேண்டுகோள் விடுத்த உடனே  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரில் இருந்து, அத்துணைக் கட்சித் தலைவர்களுக்கும் திரா விடர் கழகம் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மாதிரி போராட்டம் என்று சொன்னால், தீப் பிடித்து எரியும் நேரத்தில், வேக வேகமாக வந்து, அந்தத் தீயை அணைக்க வேண்டும் என்கிற கடமை உணர்வோடு எப்படி வருவார்களோ, அதுபோல இத்தனைக்  கட்சிகளுடைய ஆதரவோடு, அமைப்புகளும் ஏராளமாக கலந்து கொள்கின்றன. தந்தை பெரியார் அவர்களுடைய மூச்சு பேச்சு – அந்தக் கொள்கையினுடைய முக்கிய அடிநாதமே சமூக நீதி  என்பதை காப்பதற்காக, கட்டியிருக்கின்ற ஒற்றுமைக் களம் இதிலே தெளிவாக இருக்கிறது. ஆகவே, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வந்திருக்கின்ற அத்தனைப் பேருக்கும் திராவிடர் கழகம் என்ற இந்தச் சமுதாய இயக்கத்தின் சார்பாக,தோழர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

அடுத்து என்னுடைய உரையில், சில குறிப்பிட்ட கருத்துகள் என்பன மிக முக்கியமானவை. இங்கே பேசிய நண்பர்கள் சொன்ன கருத்துகளையே நான் திரும்பச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விஷமத்தனமான ஒரு தவறான கொள்கையை, பரப்பினார்கள்!

முதலில் என்ன சொல்லி இந்த நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது? அதனுடைய நோக்கம் என்ன?  உள்நோக்கம் வேறு. ஆனால், வெளியிலே அவர்கள் சொன்ன கருத்து என்னவென்றால், மருத்துவப் படிப்பில்  ஊழல் நடக்கிறது. அதுமட்டுமல்ல, வெளிப்படைத் தன்மை இல்லை. தகுதி, திறமை உள்ள  அதிக மதிப்பெண்கள் வாங்கிய பிள்ளைகளையே மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும். ‘‘நான் என்னுடைய பிள்ளையை குறைந்த தகுதியுடைய மருத்துவக் கல்வியில் போய் டாக்டர் ஆக்குவேனா?’’ என்றெல்லாம் விஷமத்தனமான ஒரு தவறான கொள்கையை, அவர்கள் பரப்பினார்கள்.

நம்முடைய சில அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள் பாருங்கள்; அவர்கள் கூட, ‘‘ஏன் சார்? அது ரொம்ப நல்லதுதானே சார், நல்ல படிப்புதானே சார்!’’ என்று வழக்கம் போல, தங்களுடைய நுனிப்புல் மேய்கின்ற புத்தியைக் காட்டினார்கள்.

ஆனால், முதலில் ஒன்றை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

வள்ளுவர் சொன்னதைப்போல, ‘‘நோய் நாடி நோய் முதல் நாடவேண்டும்’’ – நீட் தேர்வு என்பது வெறும் மருத்துவக் கல்விக்காகக் கொண்டு வரப்பட்டது அல்ல. மருத்துவக் கல்விக்காகக் கொண்டு வரப்பட்டது என்று சொல்வது அதனுடைய புறத்தோற்றம், அது வெளிப்படையானதல்ல.

முழுக்க முழுக்க மீண்டும் மனுதர்ம ஆட்சியை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான்!

அடிப்படை என்னவென்றால், தோழர் செல்வா போன்றவர்கள், அந்திரிதாஸ் சொன்னதைப்போல,
எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் சுட்டிக்காட்டியதைப்போல, இது முழுக்க முழுக்க மீண்டும் மனுதர்ம ஆட்சியை உருவாக்கவேண்டும் என்பதற்காக எடுக்கின்ற முயற்சி யினுடைய முன்னெடுப்பு – ஒரு வடிவம், ஒரு முகம்.

1938 ஆம் ஆண்டு, இராஜகோபாலாச்சாரியார் ஆட்சிக்கு வந்து, லயோலா கல்லூரியில் உரை யாற்றும்போது என்ன சொன்னார்? ‘‘நாங்கள் ஹிந்தியைக் கட்டாயப்படுத்துகிறோம் என்றால், அது ஹிந்திக்காக அல்ல; அடுத்து சமஸ்கிருதத்தைக் கொண்டு வர வேண்டும். அதற்கு வசதியாகத்தான், இப்போது ஹிந்தியைக் கொண்டு வருகிறோம்’’ என்றார்.

அதுபோன்று, நீட் தேர்வு, மருத்துவக் கல்விக்காக மட்டுமல்ல; இதைக் கொண்டு வரும்போது சொன்னார்கள், மருத்துவக் கல்விக்காக என்று. ஆனால், அடுத்து அடுத்துப் பார்த்தீர்களேயானால் நண்பர்களே, ஆக்டோபஸ் என்ற எட்டுக்கால் பிராணி எப்படி, தான் பற்றியதை  அழுத்திப்  பற்றிக் கொள்கிறதோ, அதேபோலத்தான், மருத்துவக் கல்வியில் நீட்டைக் கொண்டு ஆக்கினார்கள் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.

பாலாஜி அவர்கள் உரையாற்றும்போது மிக அழகாகச் சொன்னார்.  இங்கே உரையாற்றிய பேச்சாளர்கள் மட்டுமல்ல, எதிரே அமர்ந்திருக்கின்றவர்கள்கூட, நீட் தேர்வின் கொடுமையை, அதனுடைய தவறைப்பற்றிச் சொன்னால், சாதாரண ஆட்கள்கூட அதை நன்றாகப் புரிந்திருக்கிறார்கள். இதுகுறித்து தாய்மார்கள் சொல்கி றார்கள். ஏனென்றால், அவர்கள் அதனுடைய கொடுமையை அனுபவிக்கிறார்கள்.

அந்த வகையில், முதலில் கொஞ்சமாகக் கதவைத் திறந்து, திருடன் உள்ளே நுழைந்து பார்க்கும்போது, வீட்டிற்குள் யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்து விட்டு, யாரும் இல்லை என்றால், முதலில் ஒரு ஆள் நுழைவான்; பிறகு வரிசையாக வருவதுபோன்று, மனு தர்மத்தை அமலாக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மீண்டும் மோடி ஆட்சியின் மூலமாக ஆர்எஸ்எஸ் செய்ய முனைகிறது!

மனுதர்மம் என்ன சொல்கிறது? ‘‘எதைக் கொடுத்தா லும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்குப் படிப்பைக் கொடுக்கக் கூடாது’’ என்கிறது. அந்த மனுதர்மம் அரசியலமைப்புச் சட்டமாக முடியவில்லையே, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய  இந்திய அரசியல மைப்புச் சட்டத்திற்குப் பதிலாக  மனுதர்மம் தான் வந்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக தங்கள் கட்சியினுடைய நிலைப்பாடாகச் சொன்னது ஆர்எஸ்எஸ். அதை யாரும் மறுக்க முடியாது. அதைத்தான் இப்போது மீண்டும் மோடி ஆட்சியின் மூலமாக ஆர்எஸ்எஸ் செய்ய முனைகிறது.

அதிலே மிக முக்கிய முக்கியமான குறிப்பு  –அவருடைய குறியீடு – அவருடைய இலக்கு – எது என்றால், கல்வித்துறை. ஏனென்றால், கல்வியை அழித்துவிட்டால், எல்லாமே தீர்ந்தது. கல்விதான் மிக முக்கியமானது. அந்த அடிப்படையில் வரும்போது நண்பர்களே, முதலில் நீட் தேர்வு என்று சொல்லி உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தற்போது அதுவே ஊழல், அதுவே சரியாக நடக்கவில்லை என்பதைப்பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

நீட் தேர்வை முதலில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்குக் கொண்டு வந்தார்கள். அதற்கடுத்த கட்டமாக மேற்பட்டப் படிப்பிற்குக் கொண்டு வந்தார்கள். அதற்குமேல் எம்.டி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பிற்குக் கொண்டு வந்தார்கள். ஆகவே, எல்லாவற்றிலும் முழுக்க முழுக்க கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்ததுபோன்று, மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கினார்கள்.

நீட், யுஜிசி – அதற்கடுத்து மேற்பட்டப் படிப்பில் அதே நீட் வந்தபோது, உச்சநீதிமன்றமே கேட்ட கேள்வி சாதாரணமானதல்ல.

ஜீரோ மதிப்பெண் பெற்றாலும் பரவாயில்லை என்று சொன்னார்கள். அப்படி என்றால், உங்களுடைய தகுதி, திறமையைப்பற்றி நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். தகுதி, திறமை தோல்வி என்று.

ஜீரோ மதிப்பெண் வாங்கினால்கூட, பி.ஜி.யில் சேர்க்கலாம். ஆகவே,  உண்டதை, வாந்தி எடுத்து, அதை அவர்களே சாப்பிடுவதுபோன்ற அசிங்கமானது என்பதை மறுக்க முடியுமா?

இரண்டாவதாக,  நீட் தேர்வை சட்டக் கல்லூரிக்குக் கொண்டு வந்தார்கள்.

முதலில், CLAT அதற்குப் பிறகு, AILET  சட்டக் கல்லூரிக்குத் தொழில் படிப்பு என்று, ஒன்று ஒன்றாக வருகிறது பாருங்கள்.  மருத்துவம், அப்புறம் சட்டக் கல்லூரி, அதற்கடுத்ததுப் பார்த்தீர்கள் என்றால், பொதுக்கல்வியில் நுழைந்தார்கள்.  நீட்டுக்கு அடுத்தது ‘கியூட்’ தேர்வு. சாதாரண பி.ஏ. எம்.ஏ. படிப்பதற்காக கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பாக கியூட் தேர்வு எழுதவேண்டும். பிறகு எதற்கு பிளஸ் டூ படிப்பு?  மேல்நிலை பள்ளிகள் எதற்காக? உயர்நிலை பள்ளிகள் எதற்காக? இது அத்தனையும் அறிவார்ந்த கேள்விகள். ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *