மொடக்குறிச்சி, மே 17 மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட லக்காபுரம், சோலார், 46 புதூர், முத்துக்கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் (15.5.2026) தவெக சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் திறந்த காரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
லக்காபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சண்முகன், ‘‘டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது உள்பட இன்னும் பல மாற்றங்களை தமிழ்நாடு பார்க்க உள்ளது’’ எனத் தெரிவித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மதுபிரியர் ஒருவர் திடீரென, ‘‘மது கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள். அதை நிறுத்த சொல்லி உத்தரவிட்டீர்களா?’’ என சட்டமன்ற உறுப்பினரிடம் அதிரடியாக கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் சண்முகம், ‘‘இனி கூடுதலாக வாங்க மாட்டார்கள். எங்காவது ரூ.10 வசூலித்தால் என்னிடம் சொல்லுங்கள்’’ என்றார். சட்டமன்ற உறுப்பினர் அவ்வாறு கூறிய உடனே அந்த மதுப்பிரியர், ‘‘அருகில் இருக்கும் கடையில்தான் இப்போது ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள். என்னுடன் வாருங்கள், நான் காட்டுகிறேன்’’ என உடனடியாக அழைத்தார். மதுப்பிரியரின் இந்த எதிர்பாராத பதிலடியால் சற்று நிலைதடுமாறிய சட்டமன்ற உறுப்பினர் சண்முகன், ‘‘நான் மொடக்குறிச்சி தொகுதி அலுவலகத்தில் இருப்பேன். அங்கு வந்து இது பற்றி கூறுங்கள்’’ என சமாளித்தார்.
மேலும், அதற்கு மேல் அங்கு நிற்காமல், உடனடியாக கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு, ‘‘வண்டியை எடுங்கள்… போகலாம்’’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
