இனியும் ‘நீட்’ தேர்வு வேண்டுமா?

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டிருக்கும் வேளையில், அதன் மீதான நம்பகத்தன்மையும் ஒவ்வொரு ஆண்டும் மனிதனின் ஆயுள் போல குறைந்துகொண்டே வருகிறது. அதன் உச்சமாக கடந்த 3-ஆம் தேதி நடந்த ‘நீட்’ தேர்வு 12-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட 10 இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் உள்ள 552 நகரங்கள், வெளிநாடுகளில் என 5,500 மய்யங்களில் நடந்தது. இந்த தேர்வை 22.05 லட்சம் பேர் எழுதினார்கள்.

வழக்கம்போல தேர்வு எழுதவந்தவர்களுக்கு சோதனை என்ற பெயரில் தேவையில்லாத பல கெடுபிடிகளை கொடுத்து மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாக்கி தேர்வு மய்யத்துக்குள் அனுமதித்தனர். இதனை தாங்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் அப்பாடா… என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.

அடுத்ததாக, மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பம் அனுப்பவேண்டும் என்ற தயார் நிலையுடனும், தேர்வு முடிவு ஜூன் 2-ஆவது வாரத்தில் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடனும் உயர்கல்வி கனவில் இருந்த மாணவர்களுக்கு 12-ஆம் தேதி பேரிடியாக ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்தது காரணமாக கூறப்பட்டது.

‘உத்தேச வினாத்தாள்’ என்ற பெயரில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளைக்கொண்ட வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்களுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரை விலை நிர்ண யிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சி.பி.அய். விசாரித்துக்கொண்டிருக்கிறது. முதல் வினாத் தாளை திருட்டுத்தனமாக கொடுத்த அச்சக ஊழி யருக்கு ரூ.10 கோடி வரை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைதானவர்களில் சிலர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். இதுவரை தேர்வு மய்யத்தில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில்தான் சில மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது வினாத்தாள் மோசடி வழக்கிலும் மாணவர்கள் கைதாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதேபோல இந்த விவகாரத்தில் கைதான ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவரின் குடும்பத்தில் இருந்து 4 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டிருப்பதும் புயலை கிளப்பியுள்ளது.

‘நீட்’ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, மறுதேர்வுக்கு மாணவ-மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்கவேண்டாம். கட்டணமும் செலுத்த வேண்டாம். ஏற்ெகனவே கட்டிய கட்டணமும் திருப்பித்தரப்படும். விருப்பப்பட்டு தேர்வெழுதிய மய்யங்களிலேயே மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று என்னென்னவோ சொன்னாலும், இந்த விவகாரத்தில் மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள சலிப்புணர்வு, மனஉளைச்சலை ஈடுகட்டமுடியுமா?.

ஏற்ெகனவே எழுதிய நீட் தேர்வுக்காக மாணவ-மாணவிகள் இரவு-பகலாக முழுஉழைப்பையும் அர்ப்பணித்து தயாராகியிருந்தார்கள். பலர் ‘நன்றாக தேர்வு எழுதினோம். நிச்சயம் மருத்துவப்படிப்பில் சேர்ந்துவிடலாம்’ என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு இருந்தார்கள். இனி நடக்கவிருக்கும் தேர்வை மறுபடியும் நன்றாக எழுதமுடியுமா? என்ற பயமும் பலருக்கு துளிர்விட்டிருக்கிறது.

‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற வார்த்தை நீட் தேர்வுக்கு கணக்கச்சிதமாக பொருந்திவிட்டது என்ற உணர்வு மாணவர்களிடம் ஏற்பட்டுவிட்டது. இந்த சூழலில் இப்போது மறுதேர்வு ஜூன்
21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

எப்போது வினாத்தாள் கசிவு ஏற்பட்டதோ அப்போதே நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை காற்றில் பறந்துவிட்டது. அதனை பறைசாற்றும் வகையில், ‘நீட் தேர்வு தேவையில்லை. அதை ரத்து செய்ய வேண்டும், பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்’ என்று முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த குரல்தான் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், அவர்களது பெற்றோரின் எண்ணக்குரலாகவும் ஓங்கி ஒலிக்கிறது. ஒன்றிய அரசாங்கம் இந்த குரலுக்கு செவி சாய்த்து ‘நீட்’ தேர்வுக்கு விடைக்கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இந்தியர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் 16.5.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *