‘நீட்’ தேர்வு – நாம் கடந்து வந்த பாதை

‘நீட்’ என்னும் சமூகநீதிக்கு எதிரான திணிப்பினை – என்றைக்கு அது தலையைக் காட்டியதோ அந்த நாள் – அந்தக் கணம் முதல் உடனடியாக திராவிடர் கழகம் வழக்கம் போலவே தனது போர்க் குரலை எழுப்பியது– பிரச்சாரப் புயலை முடுக்கி விட்டது. நீதி கேட்டு வீதிமன்றங்களைக் கட்டமைத்தது –போராட்டங்களை நடத்தியது.

ஒத்த கருத்துள்ள அனைத்து நீதியாளர்களையும் ஒன்றிணைத்து, ஒருமுகமாக தமிழ் மண்ணின் சமூகநீதிக் குரலை எழுப்பியது.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், சமூக நீதியைத் தன் விழியென உயிர்மூச்சாகக் கொண்ட இயக்கம். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டதே சமூக நீதிக்காகத்தான்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தது – தந்தை பெரியாரும், இந்த இயக்கமும்தான்.

இந்தியாவிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்ட 9ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு தமிழ்நாட்டில் நிலைக்கிறது என்றால், அதற்கு அடித்தளமும், ஆணிவேரும் திராவிடர் கழகமே!

அகில இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்ற இயக்கமும் திராவிடர் கழகமே!

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த, பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு விதித்த ஆணையை முறியடித்ததிலும் சரி, அவர் திணித்த நுழைவுத் தேர்வை வீட்டுக்கு அனுப்பியதிலும் சரி, திராவிடர் கழகத்திற்கு மகத்தான பங்கு உண்டு.

‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு திராவிடர் கழகத்தின் மாநாடுகள், போராட்டங்கள், பேரணிகள் எத்தனை எத்தனை!

எடுத்துக்காட்டாக முதன்முதலில் நீட் அறிவிக்கப்பட்ட 2010ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது திராவிடர் கழகம். அரக்கோணத்தில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பு மாநாடு (19.11.2016), திருச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அடங்கிய முத்தரப்பு மாநாட்டை நடத்தியதும் திராவிடர் கழகமே! (19.12.2016).

2017 மார்ச் 18 முதல் மார்ச் 21 வரை ‘நீட்’டை எதிர்த்து திராவிடர் கழக மாணவர் கழகத் தோழர்களின் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தமிழ்நாடு தழுவிய அளவில்!

20.01.2020 முதல் 30.01.2020 வரை தமிழ்நாடு முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் 2,700 கிலோமீட்டர் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

3.4.2022 முதல் 25.4.2022 வரை நாகர்கோவில் முதல் சென்னை வரை, நீட் மற்றும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து மீண்டும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் தலைமையில் தொடர் பிரச்சாரப் பயணம் – என்று இன்னும் எத்தனையோ போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தான் இன்றைய நாள் திராவிடர் கழகம் போராட்டக் களம் அமைத்துள்ளது. ஒத்த கருத்துள்ளவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இது.

எத்தனை ஆண்டு  காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டோம்; உத்தியோக வாய்ப்புகள் கிடைக்காமல் உதைத்துத் தெருவில் வீழ்த்தப்பட்டோம்.

கல்விக் கடவுள் ‘சரஸ்வதி’ என்றார்கள். நம் மக்களும் விழுந்து விழுந்து கும்பிட்டார்கள் – பூஜை போட்டார்கள் – ஆனால் நடந்தது என்ன? சரஸ்வதி என்ற பெயரை உடைய நம் பாட்டிக்கு சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியாது.

தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னாதி மன்னர்கள் எல்லாம் ஆட்சி புரிந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ‘ராஜகுருக்கள்’ எல்லாம் பார்ப்பனர்கள்தாம்.

கல்விக் கூடங்களைக் கண்டார்கள் ஆனால், அந்தக் கல்வி எல்லாம் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டது? பார்ப்பனர்கள் வயிற்றில்தானே?

எடுத்துக்காட்டுக்கு இதோ ஒன்றிரண்டு. 11ஆம் நூற்றாண் டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தில் ஒரு கல்விக் கழகம் கண்டனர். 140 மாணவர்கள் பயின்றனர். 14 ஆசிரியர்கள் சொல்லி கொடுத்தப்  பாடத் திட் டங்கள் யாவை? ஆரியருடைய மீமாம்ச வேதாந்த தத்துவங் களும், சமஸ்கிருதமும், அதன் இலக்கணங்களும்தான் கற்பிக்கப்பட்டன!

அதே போல பாண்டிச்சேரிக்கு அருகில் திருபுவனத்தில் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி கண்டனர். 72 வேலி நிலம் அதற்காக அளிக்கப்பட்டது. 260 மாணவர்கள் பயின்றனர். 12 ஆசிரியர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டனர்.

கற்பிக்கப்பட்ட பாடங்கள் யாவை? இதிகாசங்களும், மனுதர்மமும் தான்! திருவாவடுதுறையிலும் ஒரு கலைமன்றம் – அங்குக் கற்பிக்கப்பட்டவை சாரக சமிதை அஷ்டாங்க இருதய சமிதை ஆகிய பாடங்கள்.

இப்பொழுது புரிகிறதா? இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களையெல்லாம் மேய்ந்தவர்கள் பார்ப்பனர்களே என்பதற்கு ஆராய்ச்சியா தேவை?

இந்தப் பின்னணியில் வந்ததுதான் மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை!

இந்தத் தடைகளை எல்லாம் உடைத்து சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் – அதன் பரிமாண வளர்ச்சியான திராவிட இயக்கம் – மூத்த சமூகநீதிக்கட்சியான நீதிக்கட்சி இவை எல்லாம் கடுமையாகப் போராடியதன் காரணமாக பார்ப்பனரல்லாத பஞ்சம சூத்திர மக்களின் கல்விக் கண்கள் ஏதோ கொஞ்சம் திறந்தன.

அதைக்கூடப் பொறுக்க முடியவில்லையே இந்தப் பூணூல் கூட்டத்துக்கு.

‘நீட்’ என்பது ஒரு கண்ணி வெடிதானே! ஒரே கல்வித் திட்டமா இந்தியா முழுமைக்கும் உள்ளது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் முழுச் சுளையையும் விழங்கும் அளவுக்கு நீட் தேர்வு என்ற ஒன்றை சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நடத்துகிறார்கள் என்றால் இது கண்ணி வெடி இல்லாமல் வேறு என்னவாம்?

வேங்கையாய் விழித்தெழுந்துப் போர்க் குரல் கொடுப்பீர்கள் தோழர்களே!

இது மனு தர்ம காலமல்ல – பெரியார் சகாப்தம் என்பதை நிரூபிப்போம்.

சங்கே முழங்கு

ஸநாதனக் கூட்டத்தின்

ஆதிக்கத்தை விழுங்கு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *