தி(இ)னமலருக்கு பதிலடி! ஆம், வீரமணியிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் மின்சாரம்

மின்சாரம்

‘தி(இ)னமலர்’ ஏடு வழக்கமான தனது சிண்டு முடியும் வேலையை  ஆரம்பித்து விட்டது.நேற்றைய ‘தினமலர்’ 8ஆம் பக்கத்தில் ‘‘இது உங்கள் இடம்’’ பகுதியில் ‘‘கி. வீரமணியிடம் ஜாக்கிரதை முதல்வரே!’’ என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.

உண்மைதான். வீரமணியிடம் வெகு ஜாக்கிரதையாகத்தான்  இருக்க வேண்டும். காரணம் அவர் தந்தை பெரியாரின் கொள்கை உலைக்களத்தில் வார்த்து எடுக்கப்பட்டவர். அவரை சீண்ட நினைக்கிறவர்கள்  ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்! மாணவப் பருவத்திலிருந்து  மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் கொள்கைச் சகோதரர் அவர்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல் அமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபோது  ஆண்டவன் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அன்று மாலையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்ததால் என்னவோ, அடுத்த நாள் சட்டமன்றத்தில், ‘உளமாற’ என்று சொல்லி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். வீரமணியின் பாதிப்பு அதில் நன்கு தெரிந்தது’ என்று ‘தினமலர்’ ஒப்பாரி வைக்கிறது.

இதன் மூலம் ஒன்றை ‘தினமலர்’ ஒப்புக் கொள்கிறது. தி.க. தலைவர் வீரமணியை சந்தித்த மாத்திரத்திலேயே ஒரு முதலமைச்சரால் தன் கருத்தை மாற்றிக் கொள்ள முடிகிறது என்று எழுதுவதன் மூலம் ‘தி.க. தலைவரின் ஈர்ப்பும், அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையின் தாக்கமும்!’’ எத்தகையது என்பதைத் ‘தினமலர்’ ஒப்புக் கொள்கிறது.

‘துக்ளக்’ இதழும் இதே போன்ற கருத்தை வெளியிட்டதுண்டு.

ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டையொட்டி ‘துக்ளக்‘கில் தலையங்கம் தீட்டிய திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள், ‘‘எல்லாம் சரிதான்.. வீரமணியிடமிருந்து ஸ்டாலின் விலகி இருப்பது நல்லது’’ என்றார். ‘ஈரோடு தி.மு.க. மாநாடு தி.க.வின் நிலையைத் தழுவுவதுபோல் தோன்றுகிறது’ என்றெல்லாம் எழுதியதுண்டு.

அதே பாணியில் தான் இப்பொழுது ‘தினமலர்’ எழுதுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இவர்களுடைய நயவஞ்சகங்களை எல்லாம் அறியாதவர் அல்ல – தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின்! அவ்வப்பொழுது சரியாக சூடு கொடுத்துதான் வந்துள்ளார்.

தி.மு.க. தோல்விக்குப் பல காரணங்கள் இருந்தாலும் பல மேடைகளில் வீரமணியை அருகில் வைத்திருந்தது ஒரு காரணம் என்று புலம்புகிறதே தினமலர்,  தி.க. தலைவர் வீரமணியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இருந்தபோதுதான் 2021 சட்டப் பேரவைத்தேர்தலில் தி.மு.க. பெரு வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு,  புதுவை மாநிலங்களிலும் 40க்கு 40 இடங்களில் வெற்றி கொண்டது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாகூட தி.க. தலைவர்  வீரமணியின் அறிவுரையைக் கேட்டுதான் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடிந்தது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர்., தி.க. தலைவர் வீரமணியின் கருத்தைக் கேட்டுதான், அந்த ஆணையைப் பின் வாங்கியதோடு அல்லாமல், பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை 31 விழுக்காடு இருந்து வந்ததை 50 விழுக்காடாக உயர்த்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்ச ராக இருந்தபோது தான் கி. வீரமணி என்றால் சாதாரணமானவர் அல்லர்; எங்களுக்கெல்லாம் ‘கீ’ கொடுப்பவர் என்று சொன்னார்.

‘தினமலர்’ சந்தடி சாக்கில்  இன்னொன்றையும் எழுதுகிறது.

‘கருணாநிதி வீரமணியை ஈ.வெ.ரா. பிறந்தநாள் அன்றோ அல்லது அவரது பெயரில் விழா நடந்தால் மட்டுமே ஊறுகாய் போல் உடன் சேர்த்து தொட்டுக் கொள்வார் என்று கதை கட்டுகிறது ‘தினமலர்’ திரிநூல் ஏடு.

திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகளில் எல்லாம் பங்கு கொண்டு சங்கநாதம் செய்தவர் கலைஞர். ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்குக் கல்விக் கூடங்களில் அனுமதிக்கக் கூடாது என்று இடி முழக்கம் செய்தவரும் அவரே!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒற்றை வரியில் தன்னைச் சொல்லும் போது, ‘மானமிகு சுயமரியாதைக்காரன்!’ என்று பிரகடனப்படுத்தவில்லையா? (‘குங்குமம்’ – 30.4.2006)

‘‘நான் தலைவனாக விளங்குகின்றேனோ இல்லையோ, இளமை தொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன், மானமிகு இல்லையேல், மாண்புமிகுவிற்கு மதிப்பில்லை என்று அறிந்தவன்’’ என்று கல்வெட்டாகத் தன்னைப் பற்றி தினமலர் கூட்டங்களின் செவினில் அறைந்தது போல பதித்துச் சென்றவர் மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் (‘முரசொலி’ – 15.9.2006)

இன்னொரு கேள்விக்கு பளிச் சென்று பதிலளித்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சீடர் மானமிகு கலைஞர் அவர்கள்.

கேள்வி:  ‘அரசியல் தலைவர் கலைஞர்’, ‘தமிழறிஞர் கலைஞர்’ இதில் எதை அதிகமாக விரும்புகிறீர்கள்?

கலைஞர் பதில்: ‘‘இந்த இரண்டையும்விட, ‘அய்யாவின் மாணவர் கலைஞர்’, ‘அண்ணாவின் தம்பி கலைஞர்’ என்பதையும் அதிகம் விரும்புகிறவன் நான்’’ (‘தினகரன்’ பேட்டி – 6.5.2006) என்றாரே!

‘‘தமிழ்நாடு நாலாஞ் ஜாதி மக்களான சூத்திரர்களுக் காகப் பாடுபடும் அரசுதான். எங்களையெல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன். இவ்வரசு நாலாந்தர அரசுதான்.

பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன் என்ற முறையில் நாலாந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களுக்காகவே நடத்துகிறோம் என்று இறுமாப்புடனும், கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன்’’ என்று பிரகடனப்படுத்தியது பொதுக் கூட்ட மேடையில் அல்ல;  தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சராகப் பிளீறினார் மானமிகு முதலமைச்சர் கலைஞர் (28.7.1971) என்பது நினைவிருக்கட்டும்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்மீது ஓர் எதிர் கட்சி உறுப்பினர் ‘‘சுயமரியாதை இருந்தால்….’’ என்று ஆரம்பித்தார். அவ்வளவுதான்,  அரிமாவாக இருக்கை யிலிருந்து பொங்கி எழுந்தார் மானமிகு கலைஞர்.

‘‘சுயமரியாதை  எங்கள்  சொத்து!  நாங்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள், முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்!!’’ என்று இன்னொரு முறை தனது இனவுணர்வுக் குருதியுடன் கலந்த சுயமரியாதைப் பீரங்கியாக வெடித்துக் கிளம்பியவர்தான் கிடைச் சிங்கமான கலைஞர் அவர்கள் (18.8.1973).

போதுமா ‘தினமலர்’ என்னும் பார்ப்பன திரிநூலான தினமலரே? இன்னும் அடுக்கிக் கொண்டே போக முடியும்!

இத்தகைய தலைவரைப் பார்த்துதான், ஈ.வெ.ரா. பிறந்தநாள் அன்றோ அல்லது அவரின் பெயரால் விழா நடந்தால் மட்டுமே ஊறுகாய் போல் உடன் சேர்த்துத் தொட்டுக் கொள்வார் என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல், குடுமியை அவிழ்த்து விட்டுக் கூத்தாடுகிறது அக்கிரகாரத்து அம்பிக்கள்!

‘‘தந்தை பெரியாரின் மாணவன் என்று சொல்வதைத்தான் அதிகம் விரும்புகிறவன்’’ என்று தோள் தூக்கிக் கம்பீரமாக விடையளித்த மானமிகு கலைஞர் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட கொள்கைப் போராயுதம்தான் தளபதி மானமிகு ஸ்டாலின்.

திராவிடர் கழகம் தலைவர் வீரமணி – தி.மு.க.வுக்கு இடையே கழுத்தை நுழைத்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் துண்டாக வேண்டியது தான்  –தத்துவ ரீதியாக!

‘வீரமணியின் நட்பின் பாதிப்பால் ஜெயலலிதா தோற்றார்’ என்றெல்லாம் தனக்குத் தோன்றிய வகையில் எல்லாம் கிறுக்கித் தள்ளும் தினமலருக்கு ஒரு கேள்வி.

‘சக்ரவர்த்தி திருமகன்’ ‘வியாசர் விருந்து’ எழுதிய  சக்ரவர்த்தி  ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) ஆன்மிகக்  கொழுந்தானே! அவர் அரசியலில் அப்பட்டமான தோல்வியைக் கட்டி அணைத்தது ஏன்? வாய்தா காலம் ஆட்சிப் புரிய முடியாமல் ஆளை விடு என்று அலறி ஓடியது ஏன்? ஏன்?

1971ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த நிலையில், ‘‘நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது; மகா புருஷர்கள் எல்லாம் – நாட்டை விட்டுப் போக முடிவு செய்து விட்டார்கள்’’ என்று ‘கல்கி’ ஏட்டில் (4.4.1971) கையொப்பமிட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே ராஜாஜி,  இதற்கு என்ன பதில்?

தினமலரில் வெளிவரும் அதே வாசகர் கடிதம், ‘காலைக் கதிரில்’ வேறொருவர் பெயரில் ‘கமா’ பிறழாமல் வெளியிடும் பத்திரிகா தர்மத்தின் மகாபா(ர)தக பத்தினித்தனத்திற்கு சொந்தமான தினமலர்–  இந்தக் கடிதத்தையும் தினமலரில் உள்ள ஒரு பூணூலே எழுதி விட்டு, தஞ்சாவூரில் இருந்த ஒருவர் எழுதியதாகப் பித்தலாட்டம் செய்வது எல்லாம் தெரிந்த சங்கதிதான்.

என்றும் தளபதி மு.க. ஸ்டாலின் திராவிட சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவர்தான்; சுயமரியாதை இயக்க சொக்கத் தங்கம்தான்; ஒரு தேர்தல் தோல்வி – அவரின் உச்சப்பட்ச மாண்பைச் சேதாரப்படுத்தி விட முடியாது.

அரசியல் நெருப்பில் குளித்துப் பத்தரை மாற்றுத் தங்கமாக ஜொலித்து வருவார் – இன்றே எழுதி வைத்துக் கொள்க!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *