உயர் ஜாதியினரின் அமளியும், யு.ஜி.சி (U.G.C)யின் நியாய நெறி ஒழுங்குவிதிகளின் மீதான எதிர்ப்பும்

13 Min Read

உருமாறி தோற்றம்தரும் பார்ப்பனியம் – தனது மேலாதிக்கத்தை
உறுதிப்படுத்திக் கொண்டே, பாதிக்கப்பட்டதாகப் பாசாங்கு செய்திடும்– பாலு சுனில் ராஜ், பிரதிராஜ் போரா

(உயர்கல்வி நிலையங்களிலும், கள நிலையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை ஒப்பிட்டுக் காட்டி ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ள கட்டுரை)

அண்மையில் வெளியிடப்பட்ட யு.ஜி.சி (உயர் கல்விநிலையங்களில் நியாயத்தை முன்னிறுத்திடும் நெறி) ஒழுங்குவிதிகள் 2026-குறித்து காட்டப்பட்ட எதிர்ப்பும், விவாதங்களும் எப்படி உயர்ஜாதியினரின் பொதுஅறிவு நிலையானது தங்களது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டே (assertion) பாதிக்கப்பட்டோராக பாசாங்கு செய்திடும் (victimhood) நிலையினைக் காட்டுகிறது – இந்தப் போக்கானது ஜாதி அடிப்படையிலான செயல்திட்டங்கள், ஆழமாக வேரூன்றியுள்ள ஜாதிய ஒதுக்குநிலை (exclusion) மற்றும் சமூக ஏற்றத்தாழ்விற்கு எதிரான நிலை – இத்தகைய சவால்களுக்கு எதிராக உள்ளன. அண்மையில் நடந்த எதிர்ப்புப் போராட்டங்கள் உயர்ஜாதியினரின் அடங்காத ஆதிக்க உறுதிப்பாட்டை பொதுவெளியில் காட்டும்பொழுது, பாதிக்கப்பட்டோராக பாசாங்கு செய்வது மட்டுமின்றி ‘பிராமணீயம் வாழ்க!’ (Brahmanvad Zindabad) என்று முழக்கம் எழுப்பிடும் நிலைக்குச் சென்றுள்ளன. உயர்ஜாதியினரின் அரசியலில் ஒருவகை அணுகுமுறை மாற்றமாகக் கொண்டு, இதுவரைக் கடைப்பிடித்து வந்த பண்பாடு மிக்கவர்கள் (cloak of civility) எனும் தாங்கள் போர்த்தி வந்த போர்வையை அகற்றி வைத்துவிட்டு களமாட வந்துள்ளனர்.

தமிழ்நாடு

வடக்கு டில்லிப் பகுதியில், டில்லி பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள மவுரிஷ் நகர் காவல் நிலையத்தின் முன்பு 13, பிப்ரவரி 2026 அன்று ஒரு கும்பல் ‘நீதிக்காக’ எனச் சொல்லி கூடியது. யூடியூபர் மேஹா லவாரியா, அரிதாக முழக்கம் எழுப்பும் தன்மையாளர், அன்று பெருமைக்குரிய இந்திய பொதுப் பல்கலைக்கழகத்தில் முழக்கமிட முற்படுகிறார். ‘பிராமணீயம் ஜிந்தாபாத்’ என்று குரல் எழுப்புகிறார். யுஜிசி நிறுவனம் வெளியிட்டுள்ள உயர்கல்வி நிலையங்களில் நியாயமான முன்னேற்றத்திற்கான ஒழுங்குவிதிகள் 2026 – 13, ஜனவரி 2026 அன்று வெளியிடப்பட்டது. அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் அற்பநேர சிராய்வுகளோ அல்லது அந்த நேரத்தில் நிகழ்ந்த காலாவதியான செயலும் அல்ல. கருத்தியல் சார்ந்த அரசியலைப் பற்றி பொதுவெளி விவாதத்தில் நீண்ட நாட்கள் மனத்தயக்கமற்ற வகையில் விளக்கப்பட்டு வந்துள்ளது – எப்படி உயர்ஜாதியினர் புரிந்து கொண்டு, விவாதித்து அவர்களுக்குரிய ஆதிக்கத் தேவைகளை இந்தியக் கல்வி நிலையங்களில் பெற்றிட, அப்படிப்பட்ட கட்டமைப்பை அமைத்திட முயலுகின்றனர் என்பதுதான் இந்தக் கட்டுரையின் சாரம். யு.ஜி.சி ஒழுங்குவிதிகள் 2026 வெளிவருவதற்கு தோற்றுவாயாக அமைந்தது, 2019ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு – ராதிகா வெமுலா மற்றும் அபேட சலீம் தட்வி ஆகிய இருவரும் உயர்கல்வி நிலையங்களில், கல்விநிலை அதிகாரங்களை ஜாதிய வன்முறைக்கு பலியாக அந்த இருவரும் மரணம் அடைந்தனர்.  அந்த இரண்டு மரணங்களும் வெவ்வேறு தன்மையிலான நிகழ்ச்சிகள் அல்ல. ஜாதிய வன்முறையின் அடிப்படையில் நடந்த மரணங்களே ஆகும்.

2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டின் பாதிவரை தலித், பகுஜன் மற்றும் ஆதிவாசி பழங்குடியினர் 98 மாணவர்கள் அரசு நடத்திடும் பல்கலைக்கழகங்களிலும், முதன்மை ரக நிறுவனங்களிலும் மரணம் அடைந்துள்ளனர். முதன்மை ரக நிறுவனங்களில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT), தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT), இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) மற்றும் இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் (IISER) ஆகியவை அடங்கும்.

ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த புகார்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் 2019-2020 மற்றும் 2023-2024ஆம் ஆண்டுகளுக்கிடையில் இரு மடங்காகப் பெருகியுள்ளன.

கல்வியறிஞர் தோரட் குறிப்பிடுகிறார்:

கல்வி பயில வரும் பட்டியல் ஜாதியினர், பழங்குடி யினருக்குச் சமத்துவத்திற்கான உரிமையினைப் பெற்றிட வாய்ப்பு மறுப்பு – இவைகளோடு தொல்லைக்கு ஆளாதல், அவமானம், கேவலப்படுத்தப்படல் ஆகியவையே உயர்கல்வி நிறுவனங்களில் நிலவிடும் அமைப்பு முறைகளாக உள்ள நிலையில் யுஜிசி நியாய நெறி ஒழுங்குவிதிகளின் அவசியம் எழுகிறது. யுஜிசியின் புதிய ஒழுங்குவிதிகளானது அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்குக் கட்டாய பிரதிநிதித்துவத்தை – சமவாய்ப்பு மய்யங்களை நிறுவிட வழிவகை செய்கிறது. ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டு வரையறையில் நீண்ட காலம் சேர்க்கப்படாமல் இருந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முதல்முறையாக யுஜிசி ஒழுங்கு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விதிகளின்படி உயர்கல்வி நிலையங்களில் 24 மணிநேர உதவி மய்யங்கள், ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் நடந்த அவமதிப்பு நிகழ்வுகளை அவை நடந்த கால வரிசைப்படி கட்டாயப் பதிவு செய்தல் மற்றும் பாகுபாடற்ற நிலையச் சூழலை உறுதிப்படுத்துவது, துணைவேந்தர்களின் தனிப்பட்ட பொறுப்புக் கடமை ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

இந்த யுஜிசி ஒழுங்கு விதிகளுக்கு ஆதிக்க எதிர்வினை விரைவில் வெளிப்பட்டு விட்டது. இந்திய கல்வித்துறையில் ஜாதிய அடிப்படையிலான ஒதுக்கல் பற்றிய வரலாற்றை அறிந்தவர்கள் இந்த எதிர்வினையினை முன்கூட்டியே புரிந்துக் கொள்ள முடியும். உயர்ஜாதி அமைப்புகள், வெளிப்படையாக உயர்ஜாதியினர் என்ற அடையாளத்துடன் தங்களது எதிர்ப்பைத் தெருவெங்கும் எடுத்துச் சென்றனர். உத்தரப்பிரதேசத்தில் தங்களது வீட்டிற்கு வெளியில் பாரதிய ஜனதா கட்சியை (ஆளும் கட்சி நிலையில்) ஆதரிக்கும் நிலையினை மறுத்து சுவரொட்டிகளை ஒட்டினார்கள். வாக்கு கேட்க வரும் நிலையைத் தவிர்த்திட ‘பிஜேபிக்கு எதிராக சவர்ணர்கள்’ என தெளிவாகத் தங்களைப்பற்றி தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கர்னிசேனா அமைப்பு பெரிய அளவிலான ஆர்ப்பாட்ட எச்சரிப்பு விடுத்தது. உயர்ஜாதி சமூகத்தினரை அடக்குவதற்குச் சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு

கவுசாம்பியில் மாவட்ட அளவிலான உயர் ஜாதியினர் படை பிரதம மந்திரிக்கு தங்களது ரத்தத்தால் கடிதம் எழுதி, அதில் யுஜிசியின் நியாய ஒழுங்குவிதிகளை, ‘கருப்புச் சட்டம்’ எனக் குறிப்பிட்டு அனுப்பினர். பார்ப்பனர், ராஜபுத்திரர், வைசியர் மற்றும் காயஸ்தர் அமைப்புகள் ஒன்றிணைந்து சவர்ண சமாஜ் சமன்வாய சமிதி எனும் தளத்தை உருவாக்கின. உயர்ஜாதி மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பினைக் காட்டினர். கல்வி நிலையங்களின் தன்னாட்சிக்கு, யுஜிசியின் ஒழுங்கு விதிகள் அச்சத்தை உருவாக்குகின்றன; எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி நிலையங்களில் தகுதி, திறமை பாதிக்கப்படுவதாக பறைசாற்றினர்.  தகுதி – திறமை பாதிக்கப்படுவதாக உடனடியாகவும், விரைவாகவும் எதிர்ப்புக் கிளம்பியது தற்செயல் நிகழ்வல்ல; ஆண்டாண்டு காலமாக உயர்ஜாதி யினரின் ஆதிக்கத்தை நியாயப்படுத்திடும் கருத்தியலைப் பிரதிபலிப்பதுதான். எடுத்துக்காட்டாக, அனைத்து அய்.அய்.டி.களிலும் அய்.அய்.எம்.களிலும் 80 விழுக்காட்டிற்கும் மேலான ஆசிரியர்கள், பொதுப்பிரிவினர் வகையினைச் சார்ந்தவர்கள். இந்த புள்ளி விவரம் தகுதி – திறமை சார்ந்தது அல்ல; அரசியலமைப்புச் சட்ட சமூகநீதி உறுதிப்பாடுகளை உயர்கல்வி நிலையங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்பதேயே சுட்டிக்காட்டுகிறது. முக்கியமாக, யுஜிசி தனது ஒழுங்குவிதி சார்ந்த பணி ஆணைகளை உரிமைத் துறப்பு செய்து வந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஜாதிய ஒதுக்குதல்கள் (exclusions) தற்செயலாக நடந்தவை அல்ல. இத்தகைய சமூக நிலையைத்தான் 1936ஆம் ஆண்டிலேயே டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தமது அடிப்படைத் திறனாய்வில் குறிப்பிட்டுள்ளார். ஜாதி என்பது வெறும் சமூக அடுக்கு நிலையிலானது அல்ல; தரவாரியான சமத்துவமின்மை (ஏணிப்படி போன்ற சமத்துவமின்மை) கொண்டது – ஒரு படிநிலை அமைப்பிலானது – உயர்தட்டு மக்களுக்கான சலுகைகள் அனைத்தும், கீழ்தட்டு மக்களைத் தரந்தாழ்த்தி தக்கவைக்கப்பட்டுள்ளன. தற்போதைய உயர்ஜாதியினரின் எதிர்ப்பினை இந்திய அறிவுசார் வெளியில் ஜாதி ஆதிக்கங்கள் தொடர்ந்து வரும் நீண்ட வரலாற்றுத் தடத்தில் வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

தலித் மக்களது எழுச்சிக்கான திட்டத்தில் கல்வியானது மய்ய நிலையில் உள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கூறுவார்; மேலும், கல்வியறிவை யார் உருவாக்குகின்றனர் என்பது பற்றிய விவாதம் – யார் கற்றறிந்தோர் எனப்படுகின்றனர் – எந்த அமைப்புகள் அறிவுசார் வெளியை சரியான உறைவிடமாகக் கொண்டுள்ளதை வெளிப்படுத்திட முடியும் – பல்கலைக்கழக வெளியானது ஜாதி நிலைநிறுத்தலுக்கான ஆதிக்கம் தொடர்ந்து வருகின்ற இடங்களில் ஒன்றாக இருக்கிறது. திட்டமிட்ட பாகுபாட்டினை பணிக்கு ஆள் அமர்த்துவதிலும், பணி உயர்வு தருவதிலும், கல்வி வளங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பிலும், நடைமுறைகளை மதிப்பீடு செய்வதிலும், முதன்நிலை பல்கலைக்கழகங்களும், அய்.அய்.டி.களும் தொடர்ந்து ஒன்றைச் செய்துவருவதாக ஆய்வாளர்கள் (தேஷ்பாண்டே & சச்சாரியாஸ்) கூறுகின்றனர். தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கல்வித் தர மொழியிலும், கல்வி நிலைய விதிகளிலும் தங்களுக்குச் சாதகமற்ற சூழலை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிடுகின்றனர். அவர்களது ஆய்வுக் கூற்றுப்படி, தகுதி – திறமை என்பது ஒருவரது தனிப்பட்ட ஆற்றலை விவரிப்பதாக இல்லாமல் உயர்ஜாதியினரின் உயர்ந்துவரும் நிலையினை சட்டப்படி சரியென்பதாக இயல்பாக்குகிறது.

மற்றோர் ஆய்வாளர் சுப்ரமணியன் தனது பதிவில் இத்தகைய போக்கினை, உயர்ஜாதியினர் பெற்றுவரும் சலுகைகளை, திறமை மற்றும் கடின உழைப்பாக சலவை மாற்றம் (laundering) செய்திடும் நிலையாகச் சுட்டிக் காட்டுகிறார். அய்.அய்.டி. மற்றும் என்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் உயர் ஜாதியினரின் ஆதிக்க நிலையானது வெறும் மக்கள் தொகை சார்ந்த விவரம் மட்டுமல்ல, அது அறிவாய்வியல் (epistemology) சார்ந்ததாகும். பல்கலைக்கழக களமானது உயர்ஜாதியினரின் ஆதிக்கக் களமாக உள்ளது. கற்பிக்கும் நெறிகளும், அறிவுப் பெருக்கமும், சக பணியாற்றுபவர்களுக்கிடையிலான கூட்டுறவு, நட்புணர்வு கட்டமைப்பும் உயர்ஜாதியினரின் உணர்வுகளுக்கு ஏற்றவகையில் அளவீடு செய்யப்பட்டுள்ளன.  இந்தச் சூழலுக்குள் நுழையும் ஒடுக்கப்பட்டோர் அந்தச் சூழலுக்கு பொருந்திவர வேண்டும் அல்லது புலன் சார்ந்த ஒதுக்கலுக்கு ஆட்பட நேரிடும்.

இந்தச் சூழலுக்கு எதிரான பின்னணியில் உயர்ஜாதி யினரின் மேலாதிக்கத்தை – யு.ஜி.சி.யின் ஒழுங்கு விதி களை எதிர்த்து 2026இல் ஏற்பட்ட உயர்ஜாதியினரின் உறுதிப்பாட்டைப் பார்க்க வேண்டும். தகுதி, திறமையைக் காப்பாற்றிட வேண்டி அல்ல; உயர் ஜாதியினரின் மேலாதிக்க நிலையினை இயல்பாகக் கருதிடும் பொதுநிலை அறிவி னைக் காப்பாற்றிடுவதற்காகத்தான் அந்த எதிர்ப்பு நிலை ஆகும்.

யு.ஜி.சி. ஒழுங்கு விதிகளைக் குறித்து அணி திரட்டப் பட்ட பொதுவெளியிலான எதிர்ப்பும், விவாதங்களும் உயர்ஜாதியினரின் தகுதி, திறமை பற்றிய கூற்றானது கருத்தியல் மற்றும் காரியத்தனமானது என்பது ஆய்வில் புலப்படும். ஜாதிரீதியிலான ஒதுக்கலை களைவதற்கு ஏற்படுத்தப்பட்ட செயல்திட்ட கட்டமைப்பினை பலவீனப் படுத்தி தலித் மற்றும் வெகுஜன சமுதாயத்தினரின் குரலை உயர்கல்வி நிலையங்களில் அடக்கிடும் நிலை தெரியவரும். உயர்ஜாதியினரின் மேலாதிக்க உறுதிப்பாட்டுநிலையும் பாதிக்கப்பட்டதான பாசாங்குத் தன்மை என்ற நிலையின் முரண்பட்ட போக்கின் தாக்கத்தில்தான் ‘தகுதி-திறமை’ பற்றிய கருத்துநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

ஆய்வாளர் காங்க் இந்த நிலையினை அவரது மொழியில் குறிப்பிடுகிறார்:

“காயப்படுவதும், காயப்பட்ட நிலையிலேயே மற்றவர்களை காயப்படுத்திடும் அதிகாரத்தை, கையாளும் நிலையினால், உயர்ஜாதியினரின் நீண்ட நாளைய தொடர்ந்து வரும் அடக்குவதற்கான அதிகாரம் ஆழப்பதிந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.”

இத்தகைய வகைப்படுத்தலின் வழியாக உயர்ஜாதி யினரின் மேலாதிக்க உறுதிப்பாட்டிற்கும், பாதிக்கப்பட்டதான பாசாங்கு நிலைக்கும் உள்ள அமைப்பியல் ஒற்றுமை புலப்படுத்துவது என்னவென்றால், யுஜிசி ஒழுங்கு விதிகளுக்கு எதிரான போக்கு உயர்ஜாதியினரின் ஆதிக்கப்போக்கின் நுண் சுற்றுச்சூழலை விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது என்பதுதான்.

விடுதலை பெற்ற இந்தியாவில் உயர்ஜாதிப் பிரிவினர் உருப்பெருக்கியாக பயன்படுத்தி வரும் கருத்தியல் சட்டகம்தான் பார்ப்பனீயம். அவர்களது மன நிலையானது பாதிக்கப்பட்டதான பாசாங்குத்தனத்திற்கும், ஜாதிப் பெருமையுடன் கூடிய தாக்குதல் நடத்தைக்குமிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட முரண்பாடான முழுமையாக்குகின்ற மனச்சாய்வுகள் ‘பண்பாடு மிகுந்தோர் எனும்’ போர்வை போர்த்தி, உயர்ஜாதியினரை பொதுநிலையில் செயல்படவைத்து அதன் ஆதிக்க அமைப்பியல் மற்றும் வரலாற்று அடித்தளங்களை ஒடுக்கப்பட்டோர் புரிந்து கொள்ள முடியாமல் தெளிவற்றதாக்கிவிட்டன.

மேலும் உயர்ஜாதியினர் எவ்வாறு தங்களது பொதுஅறிவு நிலையில் யுஜிசி ஒழுங்கு விதிகளை எதிர்ப்பதன் மூலம், பாதிக்கப்பட்டதான பாசாங்குநிலை – பார்ப்பனீய தாக்குதலில் உறுதிநிலை ஆகிய இரட்டை வெளிப்பாட்டைத் தெளிவாகக் காட்டுவதை ஆய்வு செய்திடுவோம். இந்த எதிர்ப்பு நிலை என்பது உயர்ஜாதி அரசியலைக் காட்டுகிறது; முந்தைய தகுதி – திறமை மற்றும் தனிநபர் பாதிப்பு நிலையிலிருந்து ஒரு மாற்றுநிலையான வெளிப்படையான கூட்டுஜாதிய உறுதிநிலையிலான நகர்வினைக் காட்டுகிறது.  அதே நேரத்தில் பழைய கருத்தியல் கட்டமைப்பான ‘ஜாதியற்றதான’ ஆதிக்கத் தன்மையானது சமூகத்தில் தக்கவைக்கப்பட்ட அழுத்தத்தால் கோவையான பகுப்பும் எதிர்ப்பும் இன்றி பலமிழந்து நிற்கிறது.

உயர்ஜாதியினரின் பொதுஅறிவுநிலை:

உயர்ஜாதியினரை வழிநடத்திடும் அமைப்புமுறையை பரந்துபட்ட கருத்தியல் கட்டமைப்பில் பொருத்திப் பார்க்காத வரையில் சமூகமாற்றத்திற்கான உயர்ஜாதியினரின் மனநிலையைப் போதுமான அளவு நாம் புரிந்துக் கொள்ளமுடியாது. அம்பேத்கர் வழிதொட்டு, ஏனைய கற்றறிவாளர் / பார்ப்பனரல்லாதச் சிந்தனையாளர் பாதையில் இந்த ஆதிக்கக் கருத்தியல் கட்டமைப்பை பார்ப்பனியம் எனக் குறிப்பிடுகிறோம். இதைத் தெளிவாக்கும் வகையில் ஆய்வாளர் வ.கீதா குறிப்பிடுகிறார்: “பார்ப்பனியக் கருத்தியல் ஒருவித சமூகநிலைக் கட்டமைப்பினை வழங்குகிறது. விருப்பப்பட்டால், இந்த வரையறைக்குள்தான் அதிகாரம் சார்ந்த விசயங்களை விளைவுகளை உண்டாக்கிடும் விதத்தில் கலந்துரையாடி முடிவு செய்திட முடியும்.” இந்தக் கருத்தியல்கருவி நிஜவடிவில் இல்லாமல் கருத்தளவில் மட்டும் செயல்படமுடியாது. பார்ப்பனியம் பருப்பொருளுடன் (abstraction) தொடர்புள்ளது; ஜாதிக் கட்டளையின் மீது ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் செல்வாக்குச் செலுத்தும் நிலையிலானது; எனவே, பிந்தையக் காலனிய (post colonial) காலத்தில் தெளிவாகச் செயல்படுகிறது. அரசியலமைப்பு நிர்ணய அவையில் ஜாதி பற்றிய விவாதங்கள் வருத்தத்திற்கு உரிய வகையில், ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் குறைவாகவே இருந்தன என்கிறார் ஆய்வாளர் வ. கீதா. இத்தகைய சமரசநிலையில், பார்ப்பனியம் தானாக உள்ளுக்குள் வந்தது – சமூகமாற்றத்திற்கு எதிரான (வைதீக வழியில் அல்ல) – மாற்றத்தின் தன்மை குறித்து எச்சரிக்கையாக இருக்கும். பழமைவாதம் எனும் பெயரில் அல்ல, ஆனால் மிகுந்த எதிர்ப்பு நிலையிலும் ஜனநாயகத் தெரிவானது ஒடுக்கப்பட்டோருக்குப் போதுமான மகிழ்ச்சியுடனான அரசியல் ஜனநாயகத்தை நடைமுறையாக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட போக்குகள் சமூக, குடிமைப் புரட்சிகளாக மலர அதிக அளவிலான தயக்கத்தைக் கொண்டதாக இருக்கும்.

இந்த சமரசப்போக்கு உயர்ஜாதி வகுப்பினருக்கு பயனளிக்கும் வகையில் பிந்தைய காலனியக் காலத்தில் உருவான சூழ்நிலைச் சேர்க்கையை தெளிவாகக் காட்டுகிறது. தென் உலக நாடுகள் காலனி ஆதிக்கக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும்பொழுது சமூகப் புரட்சியை நோக்கித்தான் செல்லமுடியும். இந்தியா அமைதியான புரட்சியை நேர்கொண்டது. பழமைவாத நிலபிரபுத்துவ கட்டமைப்பிற்கு எதிரான சீர்திருத்தத்தினைத் தடுத்திடும் நிலையில் இருந்தது. சதிஷ் பாண்டே தனது ஆய்வுப் பதிவில், பரந்துபட்ட சமூக அமைப்புகளை ஜனநாயகப் படுத்துவதற்கான, முயற்சிகள் சிறிய அளவில் இருந்தன என்றும், ஜாதியைச் சுற்றிய கேள்விகளில் பெரும்பாலானவை இடஒதுக்கீடு குறித்தவையாகவே இருந்தன எனவும் கூறுகிறார்.

ஆய்வாளர் தேஷ்பாண்டே சமூக வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி மேலும் குறிப்பிடுவதாவது:

உயர்ஜாதி வகுப்பினர் நாடு விடுதலையடைந்ததற்குப் பின்னர் தங்களது பொருளாதார மூலதனத்தை தெளிவற்ற வகையில், ஆனால் நம்பத்தகுந்த மூலதனமாக மாற்றியுள்ளனர். மேலும், தங்களுக்குள் (உயர்ஜாதி யினருக்குள்) ஒருவித ஜாதியற்ற நிலையினையும் ஏற்படுத்தி யுள்ளனர். ஜாதியற்ற நிலைகளை தெளிவுபடுத்திட, தாங்கள் இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டதான நிலையினைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். தங்களது சமுகச் சலுகைகளை எல்லாம் நாட்டு விடுதலைக்குப் பின்னர் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் எடுத்துக் காட்டினர். இந்தச் சூழலில் மண்டல் குழுவின் பரிந்துரைகள் பெரும்பாலும் ஓர் அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது.  ஆய்வாளர் கெயில் ஆம்வெட் மண்டல் குழு பரிந்துரைகளை ஒரு ஜனநாயகத் தேவை என்றும் ‘எளிமையான நீதி’ என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், அந்தச் சூழலில் உயர்ஜாதியினர் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒரு ஏழை பார்ப்பனச் சிறுவனின் எதிர்கால வாய்ப்புகள் இடஒதுக்கீடு வழிமுறையால் பெரிதும் பாதிக்கப்படுவதாக முன்னிறுத்தப்படுகிறது. இதனையே உயர்ஜாதியினர் தங்களின் பாதிக்கப்பட்டதான நிலைக்குச் சாதகமாகக் குரல் எழுப்பப் பயன்படுத்திக் கொண்டனர்.

பாதிக்கப்பட்டதான நிலை என்பது, ஜாதி பற்றி உயர்ஜாதியினரின் ஒரு தலைப்பட்சமான வெளிப்பாடாகும். மற்றொரு வெட்கக்கேடான வெளிப்பாடு வேறுமாதிரியாகத் தோற்றமளித்து வந்தது. ஜாதிப் பெருமையுடன் இருப்பதை, பாதிக்கப்பட்டதான நிலையினை அதிகம் பேசாமல் அமைதியாக பெருந்தன்மையுடன் இருப்பதாகக் காட்டி வந்தனர். ஜாதி ஆதிக்க நிலையினை தங்களது நடவடிக்கையினால் பெருந்தன்மை எனும் போர்வை அணிந்து இதுவரை காட்டி வந்தனர். உயர்ஜாதியினரது பண்பட்ட தோற்றம் கொண்ட பாசாங்கு நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டவிதிகளின் பாதிப்பால் ஏற்பட்டது. இல்லையென்றால் உயர்ஜாதியினரின் அரசியல் தலைமை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும். மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள்திரள் கிளர்ந்து எழுந்தால் என்னவாகும் என்ற அச்சநிலையும் உயர்ஜாதியினர் அவர்களது வெளிப்படையான ஆதிக்கப் போக்கினை இதுநாள்வரை வெளிக்காட்டாததற்குக் காரணமாக இருந்தது. இதுகுறித்து ‘எக்னாமிக் & பொலிட்டிக்கல் வீக்லி’ தனது தலையங்கக் கட்டுரை ஒன்றில் சுட்டிக் காட்டியிருந்ததாவது:

பல சமூகவியல் ஆய்வுகளும் உயர்ஜாதியினரின் இந்த ஆதிக்க நிலையை குறிப்பிட்டுக்காட்டுகின்றன. சென்னை – அய்.அய்.டி.யில் விரிவான கள ஆய்வு செய்த ஆய்வாளர் அஜந்தா சுப்ரமணியன் தனது ஆய்வறிக்கையில் தமிழ் பார்ப்பனர்களின் ஜாதி அடையாளத்தில் தகுதி – திறமையும், ஜாதியப் பெருமையும் மீன்களில் காணப்படும் செதிலமைப்பு போல இயல்பாகவே இணைக்கப்பட்டுள்ளதை பதிவு செய்துள்ளார்.

விகிதாசாரமற்ற அளவில் அதிகாரமும், ஆதிக்க அதிகார நிலையும் உயர்ஜாதியினரிடம் நிலவினாலும், ஜாதியற்றதான தளத்தில் தகுதி – திறமையினை ஜாதியுடன் இணைத்துப் பார்ப்பது தற்செயலானதுதான் என ஆய்வாளர் தேஷ்பாண்டே குறிப்பிடுகிறார். இந்த நிலையில் தகுதி – திறமை என்பது தனிநபர் சார்ந்தது; சமூக வரலாற்றிலிருந்தும் அமைப்பியல் காரணிகளிலிருந்தும் விலகியே நிற்கும். ஆனால் சென்னை அய்.அய்.டி. கல்வி நிலையத்தில் அப்படியல்ல; ஜாதி ஆதிக்க நிலையும், தகுதி – திறமையும் கூட்டு நிலையிலானது. இத்தகைய நிலைமைகள், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாத வன்முறையினால் விளைந்தவை அல்ல. இந்த ஆதிக்கப் போக்கினால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் தொடர்ந்து ஒதுக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் நடத்தப்படுவர். கல்விநிலையத்தின் மீதான தவறான மதிப்பீட்டிற்கும் இந்த நிலை இட்டுச் செல்லும். பெங்களூர் – இந்திய அறிவியல் கல்வி நிலையம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் இதைப்போன்ற முடிவுகளைத்தான் வெளிப்படுத்தியுள்ளன. கிராமப் பொதுவெளியில் ஜாதிப் பெருமையும், ஜாதி ரீதியிலான தாக்குதல்களும் எவ்வளவு வெளிப்படையாகக் காட்டப்பட்டாலும், தேசிய பொதுவெளியில் அப்படிப்பட்ட வெளிப்பாடுகள் தள்ளி வைக்கப்பட்டன. கல்வித் தளத்தில் பண்பட்ட பழக்கவழக்கமுறை எனும் போர்வை போர்த்தியநிலைதான் தூக்கிப் பிடிக்கப்பட்டது. கல்வி நிலையப் பெருமைகளாக இவை வெளியில் தெரிந்தாலும், உள்ளார்ந்த தீமைகள் தொடரத்தான் செய்தன. எதிர்ப்பு நிலைகள் வலுவடைந்தன. மாறாக எந்த ஒரு நிகழ்வும் நடைபெற்றதாக சுட்டிக் காட்டிட முடியவில்லை. தவறான அங்கீகாரமும், ஜாதிய ஒதுக்கலும், ஆதிக்க எதிர்ப்புத்தடமழிப்பும் குவியும் நிலைதான் நீடித்தன.

(தொடரும்)

‘எக்னாமிக் & பொலிட்டிக்கல் வீக்லி’
ஆங்கில ஏட்டில் வெளிவந்த கட்டுரையின் மொழியாக்கச் சுருக்கம்

தமிழில்வீ. குமரேசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *