முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டம்
ஸ்ரீநகர், மே 11 ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370) நீக்கப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள நிர்வாகச் சிக்கல்கள் குறித்து முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று (10.5.2026) அவர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நிர்வாகக் குளறுபடிகள்: 30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரிக்கும், 90 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அரசு உணர வேண்டும். சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தள்ளி வைப்பது எந்தப் பயனையும் தராது.
மாநில அந்தஸ்து கோரிக்கை: தற்போதைய இரட்டை அதிகாரக் கட்டமைப்பு கொண்ட யூனியன் பிரதேச அரசு முறை என்பது மிகவும் மோசமான ஒரு வடிவம். இதனை மாற்றி, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்தை விரைந்து வழங்க வேண்டும்.
அரசியல் பிளவு: ஜம்மு மற்றும் சிறீநகர் இடையே அரசியல் ரீதியான பிளவை உருவாக்க நினைக்கும் சுயநல சக்திகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. அவர்களின் முயற்சி இனியும் பலிக்காது.
தலைநகர் மாற்றம்: ஜம்மு மற்றும் சிறீநகர் ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே உள்ள உணர்வுப்பூர்வமான இடைவெளியைக் குறைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைநகரை மாற்றும் பாரம்பரிய நடைமுறையை (Darbar Move) மீண்டும் கொண்டு வருவது அவசியமாகும். இது இரு பிராந்தியங்களையும் இணைக்கும் பாலமாக அமையும். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய உமர் அப்துல்லா, தற்போதைய நிர்வாக அமைப்பு ஜம்மு காஷ்மீருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
