சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி! நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டும்! அண்ணாமலை ஆதரவாளர்கள் போர்க்கொடி

2 Min Read

மதுரை, மே 11- சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி காரணமாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதவி விலக அண்ணாமலை ஆதரவாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர்.

பா.ஜ.க. தோல்வி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 27 தொகுதி களில் பாஜக போட்டியிட்டது. இதில் உதகை தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சாத்தூரில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் தோல்வியைத் தழுவினர்.

இந்தத் தேர்தலில் பாஜக 14 லட்சத்து 67,024 வாக்குகளைப் பெற்று 2.97 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் வாக்கு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு பாஜக கூட்டுறவு பிரிவுத் தலைவர் மகா சுசீந்திரன் படத்துடன், ‘சாணக்கியர் சறுக்கினாரோ என்ற தலைப்பிலான அறிக்கை பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த அறிக்கை நயினார் நாகேந்திரனை குறைகூறும் வகையிலும், அண்ணாமலையைப் பாராட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப் பட்டிருந்ததாவது:

பாஜகவின் லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு 2026 தேர்தலில் அடையாளம் இல்லாமல் காற்றில் கரைந் துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் 3 சதவீத வாக்கு வங்கி 2021இல் 18 சதவீதமாக உயர்ந்து இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு சவாலாக உயர்ந்தோம்.

சுயநலவாதிகள் கருத்தைக் கேட்டு கட்சியை வளர்த்த ‘கோபுரக் கலசத்தை’ குழியில் தள்ளிவிட்டு பிற இயக்கத்தின் ‘காகத்தை கழுகு’ என நினைத்து சாணக்கியர் சறுக்கினாரோ என மனம் வருந்துகிறது.

இந்த வருத்தம் என்னால் ஏற்பட்டது என உணர்ந்தால், பாஜகவின் லட்சக்கணக்கான தொண்டர்களின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு நானும் என் தலைமை யிலான குழுவும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து விடை பெறுகிறோம் என தோல்வியை ஒப்புக்கொண்டிருப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்ப்பு

இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் பாஜகவின் வாக்கு வங்கியை 12 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைந்ததற்குப் பொறுப்பேற்று நயினார் நாகேந்திரன், தமிழிசை, எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகிய 4 பேரும் கட்சியிலிருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரன் கையெழுத்தில் கடிதம் வெளியானதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்தக் கடிதம் போலியானது என காவல் துறையினரால் பாஜக சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் அந்தக் கடிதம் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாஜகவினர் கூறியதாவது:

அண்ணாமலை தலைவராக இருந்தபோது கட்சி வேகமாக வளர்ந்தது. நயினார் நாகேந்திரன் தலைவரானதும் பாஜக அதிமுகவின் ஒரு கிளை அமைப்பு போல் மாறிவிட்டது.

வேறு கட்சிகளில் இருந்து குறிப்பாக திராவிடக் கட்சிகளில் இருந்து வந்தோருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அண்ணாமலை எதிர்ப்பு என்ற ஒற்றைக் காரணத்துக்காக தமிழிசை, எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து செயல்பட்டனர். அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்த படுதோல்விக்கு நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்க வேண்டும்.

மேலிடம் அவரை தலைவர் பதவியிலிருந்து மாற்றி புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *