சென்னை, மே 11- திராவிட மாடல் அரசின் நல்லாட்சித் திட்டங்களையும், மக்கள் நலப் பணிகளையும் புதிய அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலத்தில் தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன், சமூக நீதி, சிறுபான்மையினர் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றமான பணிகளை மேற்கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணம், பள்ளிக் கல்வி மேம்பாடு, மருத்துவ சேவைகள் விரிவாக்கம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நல்லாட்சித் திட்டங் களையும், மக்கள் நலப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைத்து தரப்பு மக்களுடைய நலனே முதன்மை பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சமூக நீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளை நிலைநிறுத்திய மாநிலமாக தொடர்ந்து விளங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசு மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றி தமிழ் நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜவாஹிருல்லா அறிவுறுத்தியுள்ளார்.
