சென்னை, மே 9- பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டிலேயே 600-க்கு 598 மதிப்பெண்களுடன் முதல் மாணவனாக வந்து சாதனை படைத்துள்ளார் பெரும்பாக்கத்தை சேர்ந்த அபினேஷ்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடந்தது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டது. இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (8.5.2026) வெளியானது.
அதில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.19 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் மாணவர்களின் தேர்ச்சியை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 3.82 சதவீதம் அதிகம். தமிழ்நாட்டில் அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 98.87% பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதம், 3ஆவது இடத்தில் குமரி மாவட்டத்தில் 97.63 சதவீதமும் நெல்லை 97.54 சதவீதமும் திருச்சி 97.50 சதவீதமும் பெற்று முதல் 5 இடங்களை பெற்றுள்ளது.
அது போல் தமிழ்நாட்டில் முதல் மாணவராக பெரும் பாக்கத்தைச் சேர்ந்த அபினேஷ், 600- 598 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர்தான் தமிழ்நாட்டின் முதல் மாணவ னாவார். இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் , பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல், business maths stats ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 100 மதிப்பெண்களை பெற்று மொத்தம் 598 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
சென்னையை அடுத்த பெரும் பாக்கம் பகுதியை சேர்ந்த டெய்லர் வேலை செய்யும் அபிமன்யு(52) –- ராதிகா இணையரின் மகன் அபினேஷ்(17). இவர் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் உள்ள ரமணியம் சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அபினேஷ் 600/598 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்ததை பள்ளி நிர்வாகம் கேக் வெட்டி, மாணவனுக்கு சால்வை அணிவித்து, கோப்பை வழங்கி கொண்டாடினர். டெய்லர் வேலை செய்யும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அபினேஷ், கைப்பேசி பார்ப்பதை தவிர்த்து, விளையாடுவதை தவிர்த்து, காலை, மாலை என நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் தொடர்ந்து படித்ததாலும், ஆசிரியர்களின் முயற்சியாலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதிக்க முடிந்தது என தெரிவித்தார்.
மாநில அளவில் யார் முதல் மதிப்பெண் என்ற விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கடந்த சில ஆண்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
