பாணன்
இந்தியாவில் தேர்தல் என்பது வெறும் வாக்குகளை எண்ணும் திருவிழா மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் ஜனநாயக் கட்டமைப்பின் உறுதித் தன்மைக்குச் செய்யப்படும் மராமத்துப் பணியும் ஆகும்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் “சுதந்திரமான, நியாயமான முறையில்” (Free and Fair) நடைபெற்றதா என்ற கேள்வி எழும்போது, அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.
நாம் ஏன் தோற்கிறோம்? நம்மிடம் கொள்கை இல்லையா, தொண்டர் பலம் இல்லையா அல்லது தேர்தல் முறையே நமக்கெதிராக வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளில் உள்ள சிலர், சமூகநீதிக் கொள்கையைக் கொண்ட திமுக, பொதுவுடமைக் கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் மற்றும் மதச்சார்பின்மையைப் பேணிக்காக்கும் மம்தா போன்றோரின் தோல்வியைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
ஆனால், இது ஒரு கட்சியின் வெற்றி-தோல்வி குறித்த விஷயம் அல்ல. அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மக்களின் வாக்குகள் திருடப்படுவது, இந்திய ஜனநாயகத்தையே அழிப்பதற்கான பாஜகவின் ஒரு பெரிய உத்தி ஆகும்.
சிறுபிள்ளைத்தனமான அரசியலைத் தள்ளி வைத்துவிட்டு, நாட்டின் நலனை யோசிக்க வேண்டிய நேரம்.
புள்ளி விவரங்களால்
மறைக்கப்படும் முறைகேடுகள்
தேர்தல் முடிவுகள் வந்தவுடன், ஆய்வாளர்கள் தரவுகளை அள்ளி வீசுகிறார்கள். வாக்கு சதவீதம், ஊசலாடும் தொகுதிகள் எனப் பக்கம் பக்கமாகப் பேசுகிறார்கள். ஆனால், அடிப்படை ஒன்றே ஒன்றுதான்: தேர்தல் நியாயமாக நடக்காதபோது, அந்தத் தரவுகளை ஆய்வு செய்வதில் என்ன பயன்?
மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 90 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத் தங்கள் தரப்பை விளக்க ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. வாக்களிக்கவே அனுமதிக்கப்படாத ஒரு சூழலில் உருவான தரவுகள் எப்படி உண்மையானதாக இருக்க முடியும்?
ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் பெரும்பாலான வடக்கு ஊடகங்கள், முறைகேடுகள் நிறைந்த ஒரு தேர்தலைத் தாங்கள் ஏதோ அறிவுப் பூர்வமாக எடுத்த ஆய்வு என்ற பெயரில் சிறப்பான ஒன்றாக மாற்ற முயல்கின்றன. துருப்பிடித்த இரும்பிற்கு நிக்கல் பூசி எஃகு போலக் காட்டுவது மாதிரிதான் இந்தத் தேர்தல் முடிவுகளின் ஆய்வுகளும் இருக்கின்றன.
நீதிமன்றத்தின் கேள்வி
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேர் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றபோது, நீதிபதி ஜாய்மால பாக்சி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்.
“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம் 2 சதவீதமாக இருந்து, வாக்களிக்க முடியாதவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக இருந்தால், அந்தத் தீர்ப்பை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?” என்பதே அக் கேள்வி!
தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. நீதிபதி கேட்ட அந்தக் கேள்வி இப்போதும் மிக முக்கியமானது. சில இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம், சில இடங்களில் பாஜக வென்றிருக்கலாம். ஆனால், வாக்குகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு ‘சதித் திட்டம்’இருக்குமானால், அந்த வெற்றிகளை மக்களின் உண்மையான தீர்ப்பு என்று ஏற்க முடியுமா?
தேர்தல் தரவுகளை விட, தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டிய தருணம் இது. தேர்தல் முடிவுகளும், தரவு ஆய்வுகளும் ஒருபுறம் இருக்க, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான ‘வாக்களிக்கும் உரிமை’ சிதைக்கப்படுகிறதா என்ற அச்சத்தை யோகேந்திர யாதவ் போன்ற அரசியல் ஆய்வாளர்கள் எழுப்புகின்றனர். குறிப்பாக, மேற்கு வங்கத் தேர்தலில் சுமார் 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் 5.04% மட்டுமே.
பாஜக: 45.84% வாக்குகள் (2,92,41,688 வாக்குகள்), டிஎம்சி: 40.80% வாக்குகள் (2,60,13,379 வாக்குகள்), வாக்கு வித்தியாசம்: 32,28,309 வாக்குகள்.
நீக்கப்பட்ட 90 லட்சம் வாக்காளர்கள் என்பது மொத்த வாக்காளர்களில் சுமார் 4.5% ஆகும். இந்த 4.5% வாக்காளர்கள் மம்தாவுக்கு வாக்களிக்கக் கூடியவர்களாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
நீக்கப்பட்ட 90 லட்சம் பேரில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்படவில்லை.
பிரதமர் மோடியோ அல்லது பாஜகவோ இந்த 50 லட்சம் வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டது குறித்து ஒருபோதும் பேசவில்லை. இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி கணிசமான அளவில் இந்துக்களும் இருந்தனர். தேர்தல் செயல்முறைகளில் இவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கும் ஒரு ஜனநாயகத்தில், தரவு ஆய்வுகள் அந்தச் செயல்முறையை ‘புனிதமானது’ எனக் காட்ட முயல்வது கவலையளிக்கும் ஒன்றாகும்.
தேர்தல் முடிவுகளை மாற்றிய எஸ்.அய்.ஆர்.
இந்நிலையில் அபிஜித் தீப்தே என்பவர் ட்விட்டரில் (எக்ஸ் தளம்) பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மக்கள் அரசியல் கட்சிகளுக்குப் பாடம் புகட்டிய காலம் போய், வாக்காளர்களின் பெயர்களை நீக்கி தேர்தல் ஆணையம், மக்களுக்குப் பாடம் புகட்டப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதன் சில எடுத்துக்காட்டுகள்:
மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்): சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன. அவர் 8,759 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மம்தா பானர்ஜி (பவானிபூர்): 51,000 பெயர்கள் நீக்கப்பட்டன. அவர் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் (புது தில்லி): 38,000 பெயர்கள் நீக்கப்பட்டன. அவர் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்து அடையாளமும், தேர்தல் அரசியலும்!
தேர்தல் வல்லுநர்கள் பாஜகவின் வெற்றிக்கு ‘இந்துக்கள் ஒன்றிணைவதை’ ஒரு முக்கியக் காரணமாகக் காட்டுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் 75% இந்துக்கள் பாஜகவை ஆதரித்ததாகத் தரவுகள் கூறுகின்றன. ஆனால், இந்த ஆய்வுகளில் சில முக்கியமான உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
அரசியல்: மேற்கு வங்கத்தில் ‘ஊடுருவல்காரர்கள்’ என்பது ஒரு பெரிய தேர்தல் பிரச்சாரமாக மாற்றப் பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தால் ஓர் ஊடுருவல்காரரைக்கூட அடையாளப்படுத்த முடியவில்லை எனில், அந்தப் பிரச்சாரம் வெறும் அரசியல் நாடகமா?
ஒரு சராசரி இந்து வாக்காளருக்கு நாட்டின் ஜனநாயக எதிர்காலம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ஒருதலைப்பட்சமான செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் நிதி முடக்கம் மற்றும் ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறை ஆகியவை ஒரு பொருட்டாகவே இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும் போது, பல ஆய்வாளர்கள் மிக எளிதாக ‘இந்து-முஸ்லிம் துருவமுனைப்பு’ (Polarisation) என்ற ஒற்றைச் சொல்லில் காரணத்தை அடக்கிவிடுகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் வாக்குகளின் ஒருங்கிணைப்பைச் சுட்டிக்காட்டி, இந்துக்கள் ஒன்று சேருங்கள் என்று பரப்புரை செய்யப்பட்டது.
இந்து வாக்காளர்களுக்கு மதவெறி அமைப்புகளின் திட்டமிட்டுப் பரப்பப்படும் ‘ஊடுருவல்’ குறித்த அச்சம் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. ஊடுருவலுக்கான எந்த ஒரு சான்றுமே இல்லாத நிலையிலும், பிரதமர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கூட ஊடுருவல் விவகாரத்தை தேர்தல் மேடைகளில் முன்னிறுத்தினர். பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுப் பரப்பிய இத்தகைய தகவல்கள் பற்றிய தேர்தல் ஆணையத்தின் மவுனம் ஆகியவை ஜனநாயகத்தின் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பத் தயங்குகிறார்கள்: “நகராட்சி முதல் நீதித்துறை வரை அனைத்தும் ஒருதலைப்பட்சமாக மாறுவது ஏன் இந்து அடையாளத்திற்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை?” எதிர்க்கட்சிகளின் முறையீடுகள் விசாரணையின் பெயரில் மாதக்கணக்கில் தள்ளிப்போடப்படுவது ஒரு பெரிய ஜனநாயகச் சிக்கல் இல்லையா?
இந்துத்துவ அரசியலின் ஒரே நோக்கம் ‘முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரள்வது’ மட்டும்தானா? அப்படியென்றால், இந்த அரசியலால் இந்துக்கள் பெறுவது என்ன? முஸ்லிம்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதிலும், அவர்கள் மீது வெறுப்பு உமிழப்படுவதிலும் மட்டும்தான் ‘இந்து சுகம்’ அடங்கியிருக்கிறதா?
ஒரு வாக்காளராக இந்துக்களுக்குப் பிரச்சினைகளே இல்லையா? தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரபட்சமாகச் செயல்படுவதை இந்துக்கள் உணர்கிறார்களா? ஒருவேளை தேர்தல் ஆணையம் நடுநிலையானது அல்ல என்று இந்துக்கள் கருதினால், அந்தச் சூழலில் அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? நிறுவனங்களின் வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த குடிமக்களுக்குமான பாதிப்பு என்பதை நாம் உணர வேண்டும்.
மேற்கு வங்கமும், தமிழ்நாடும் ஓர் ஒப்பீடு!
யோகேந்திரர் (யாதவ்) சுட்டிக்காட்டியபடி, மம்தா அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது உண்மை. ஊழல், வன்முறை மற்றும் ஆளும் கட்சியின் ஆதிக்கம் குறித்து மக்கள் கவலையடைந்திருந்தனர். ஆனால், இதே போன்ற குறைகள் பாஜக ஆளும் மாநிலங்களிலும் உள்ளன; அங்கு ஊடகங்கள் அந்த விவகாரங்களை மூடிமறைக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் மீதான மனநிலை மேற்கு வங்கத்தைப் போன்று இல்லை.
இங்கும் பல லட்சம் மக்கள் எஸ்.அய்.ஆர். என்ற பெயரில் நீக்கப்பட்டனர்.
என்.அய்.ஏ., சி.பி.அய்., ஈ.டி. போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சிகளை முடக்கப் பயன்படுத்தப்பட்டன.
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளைப் புரிந்துகொள்ள, ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை மட்டும் காரணியாகக் கொள்ள முடியாது. மத்திய விசாரணை முகமைகளின் தலையீடு, வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகள் மற்றும் தேர்தல் சுதந்திரம் குறித்த கேள்விகள் ஆகியவை இந்த வெற்றிகளின் நம்பகத்தன்மையின் மீது நிழலாடுகின்றன. விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடப்படும் விதம் குறித்து நாடு இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை.
ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்புகள் பலவீனப்படும்போது, மதவாத அமைப்புகள் அந்த நாட்டின் எதிர்காலத்திற்கே பெரும் சவாலாக அமையும்.
மேற்கு வங்காளத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் எழுச்சி, அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு திரிணாமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்களில் இந்த முறை பாஜக வெற்றியைப் பெற்றுள்ளது.
முர்ஷிதாபாத்: 2021இல் இங்கு 20 இடங்களைக் கைப்பற்றிய டிஎம்சி, இந்த முறை வெறும் 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. சுமார் 70% முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட இந்தப் பகுதியில் பாஜக 8 இடங்களைக் கைப்பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா மற்றும் வடக்கு தினாஜ்பூர்:
50%-க்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் வாழும் இந்தப் பகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள மொத்தம் 43 இடங்களில், பாஜக 18 இடங்களையும், டிஎம்சி 20 இடங்களையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் ஹுமாயூன் கபீரின் கட்சிக்கு தலா 2 இடங்கள் கிடைத்துள்ளன.
இந்த வெற்றி குறித்து பாஜக தரப்பில் இருவேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சுவேந்து அதிகாரி, “இந்து வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டதாலும், முஸ்லிம் வாக்குகள் சிதறியதாலுமே இந்த வெற்றி சாத்தியமானது” என்கிறார். ஆனால், பெர்ஹாம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் சுப்ரதா மைத்ரா, டிஎம்சி-யை ஆட்சியில் இருந்து அகற்ற பல முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களித்ததாகக் கூறுகிறார்.
இங்கு எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான முஸ்லிம் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், “இந்து வாக்குகள் ஒருங்கிணைந்ததால் தான் வெற்றி பெற்றோம்” என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? மேலும், முஸ்லிம் வாக்குகள் நான்கு வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து செல்லும் நிலையில், அவர்கள் மீது வாக்குகளைச் சிதறடித்தார்கள் என்ற குற்றச்சாட்டைச் சுமத்துவது முரண்பாடாக உள்ளது.
அரசியல் மற்றும் வாழ்வாதாரக் கேள்விகள்
இந்து அடையாள அரசியலால் ஒரு சாமானிய இந்துவின் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக முன்பு 2000 கி.மீ பயணம் செய்த இளைஞர்கள், இன்று 15,000 கி.மீ கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மோசமடைந்து வருகின்றன.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பொதுவாக மக்கள் அதிருப்தி அடையும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து இப்போது யாரும் கேள்வி எழுப்புவதில்லை. மாநில அரசுகளுக்கு எதிரான அதிருப்தி இருக்கும் சூழலில், ஒன்றிய அரசு அல்லது பாஜக அரசுகளுக்கு எதிராக அது போன்ற ஒரு நிலை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய – மாநில அரசுகளுக்கு
இடையிலான மோதல்
மேற்கு வங்கத்தில் டிஎம்சி எதிர்கொண்ட சவால்கள் சாதாரணமானவை அல்ல. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல், ஆசிரியர் நியமனங்களில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தராதது போன்ற காரணங்கள் அம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின் மய்யப்புள்ளி ஒரே ஒரு கேள்வியைச் சுற்றியே நகர்ந்தது: “பாஜக என்ன செய்தது?” அமைதியான முறையில் தேர்தலை நடத்துகிறோம் என்ற பெயரில், சுமார் 2.5 லட்சம் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இவ்வளவு பெரிய அளவில் படைகளை நிலைநிறுத்துவதன் பின்னணி என்ன என்று திரிணாமூல் காங்கிரஸ் (TMC) தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பியது.
தேர்தல் நாளன்று, அனைத்து பாதுகாப்புப் படைகளின் தலைமை இயக்குநர்களும் (DG) ஒரே அறையில் அமர்ந்து தேர்தல் கவரேஜைக் கண்காணிக்கும் ஒளிப்படம் ஒன்றை மத்திய ஆயுதக் காவல் படை வெளியிட்டது. தேர்தல் அமைதியாக முடிந்ததாகத் தெரிந்தாலும், முடிவுகள் வெளியான உடனேயே வன்முறைச் செய்திகள் வரத் தொடங்கின. தேர்தல் முடிந்த பிறகும் பாதுகாப்புப் படைகள் அங்கேயே இருக்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பு வரை அமித்ஷா கூறி வந்தார். அப்படியிருக்க, இப்போது அங்கு இவ்வளவு வன்முறை எப்படி வெடித்தது? பாதுகாப்புப் படைகளுக்கு இதில் பொறுப்பு ஏதும் இல்லையா?
மேற்கு வங்கத் தேர்தல் என்பது மக்கள் ஆணையால் பெற்ற வெற்றியா அல்லது தடியடி பலத்தால் பெற்ற வெற்றியா? என்ற கேள்வி எழுகிறது.
மாறிப்போன தேர்தல் அரசியல்
2024 தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலில் சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்தனர். ஆனால், அதன் பிறகு இந்தியாவின் தேர்தல் அரசியலே மாறிவிட்டது. சில மாதங்களிலேயே மாநிலக் கட்சிகள் சிதறடிக்கப்பட்டன. முதலில் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு அவை உடைக்கப்பட்டன; பிறகு வாக்குத் திருட்டுப் புகார்கள் எழுந்தன; இறுதியில் எஸ்.அய்.ஆர். மூலம் அவர்களின் அடித்தளமே அசைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளப் போகின்றன? இதற்கான பதிலை வாக்காளர்கள் பத்திரிகையாளர்களிடமோ அல்லது நிபுணர்களிடமோ எதிர்பார்க்கவில்லை; நேரடியாக எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்தே கேட்க விரும்புகிறார்கள்.
எதிர்க்கட்சிகளின்
ஒற்றுமைத் தேவையும், சவாலும்!
இன்று இத்தனை மாநிலக் கட்சிகள் ஏன் இருக்கின்றன? அவற்றின் தற்போதைய முக்கியத்துவம் என்ன? ஒரு தலைவர் பிரிந்து சென்று பாஜகவில் இணையும்போது, மற்ற கட்சிகள் ஏன் தங்களுக்குள் ஒன்றிணைய மறுக்கின்றன?
உண்மையான ஒற்றுமைக்கு எதிர்க்கட்சிகள் ஒரு புதிய சூத்திரத்தைக் கண்டறிய வேண்டும். ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? ஒவ்வொரு கட்சியின் கொள்கைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே தெரிகின்றன.
நடுநிலையற்ற தேர்தல்
மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு மண்டலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. தங்கள் போராட்டம் பாஜகவிற்கு எதிரானது மட்டுமல்ல, பாஜகவிற்குத் துணை நிற்கும் நிறுவனங்களுக்கும் எதிரானது என்பதை இந்தக் கட்சிகள் உணர வேண்டும். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஊடகங்களும், அளப்பரிய நிதி ஆதாரங்களும் உள்ளன. இது ஒரு நடுநிலையான தேர்தல் அல்ல.
பாஜகவிற்காகப் பணியாற்றும் தேர்தல் அமைப்புகள் மீது ஒருபோதும் சோதனைகள் நடப்பதில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளுக்காகப் பணியாற்றும் அமைப்புகளைத் தேடித் தேடி சோதனையிடப்படுகின்றன. இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள் எப்படிச் செயல்படும்? அவர்களின் உத்திகளே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவற்றுக்குள் தெரிகிறது, ஆனால் வீதிகளில் அது பலவீனமாகவே காட்சியளிக்கிறது. தலைவர்கள் இன்னும் போதுமான அளவு செயல்படவில்லை என்றே ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம், இந்த மாநிலக் கட்சிகள் தங்களை எவ்வாறு மறுசீரமைத்துக் கொள்கின்றன என்பதிலேயே அடங்கியுள்ளது அண்மைக்காலமாக எஸ்.அய்.ஆர். மற்றும் வாக்குத் திருட்டு தொடர்பான கேள்விகள் எழும்போதெல்லாம், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் எஸ்.அய்.ஆர். விவகாரத்தை ஒரு பெரிய மக்கள் இயக்கமாக மாற்றத் தவறிவிட்டன என்பது நிதர்சனம்.
மம்தாவின் முயற்சி மற்றும்
எதிர்க்கட்சிகளின் மவுனம்!
இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா காட்டிய தீவிரத்தை மற்ற தலைவர்கள் காட்டவில்லை. மம்தாவின் தொடர் குரலினால் மட்டுமே எஸ்.அய்.ஆர். விவகாரம் ஓரளவாவது வெளிச்சத்திற்கு வந்தது என்று வடஇந்திய ஊடகங்கள் கருதுகின்றன. உண்மையில், 90 லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் போது, அது மீட்கப்படும் வரை தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடி இருக்க வேண்டும்.
அசாம் மற்றும் வங்காளத்தில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். மம்தாவின் “100 இடங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என்ற கருத்தை ராகுல் ஏற்றுக்கொண்டால், அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள்
வாக்குத் திருட்டைத் தடுக்க அல்லது இந்த விவகாரத்தைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல கடந்த இரண்டு மாதங்களில் காங்கிரஸ் என்ன செய்தது?
கடந்த ஓர் ஆண்டாக எஸ்.அய்.ஆர். விவகாரம் நாட்டின் முன் உள்ளது. இதைப்பற்றிய புரிதலை உருவாக்க காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் போதுமானதா?
ராகுல் காந்தி இது தொடர்பாக விண்ணில் இருந்து திடீரென விழும் எரிகல் போல் பளிச்சென்று பேசுகிறார்; பின்னர் காரிருளுக்குப் பின்னால் சென்று விடுகிறார். சில நாள்களிலேயே தேர்தல் மோசடி விவகாரம் கைவிடப்பட்டது.
அசாமில் தொகுதி மறுவரையறை (Delimitation) நடந்தபோதே அதை ஏன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பெரிய போராட்டமாக மாற்றவில்லை?
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறும் ‘கடமைக்காக’ செய்வது போலவே தெரிகிறது. ஒரு கட்சி முன்னெடுக்கும் போராட்டத்தை மற்ற கட்சிகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில்லை.
முன்பு காங்கிரஸ் அல்லாத கட்சிகள் உடைந்தாலோ அல்லது இணைந்தாலோ, அது ஒரு புதிய தலைவரை அல்லது லட்சியத்தை நோக்கிய பயணமாக இருந்தது. அன்று தேர்தலில் அனைத்து வீரர்களுக்கும் சமமான ஆடுகளம் இருந்தது. ஆனால் இன்று, கட்சிகள் உடைக்கப்படுவது வெறும் பாஜகவில் இணைவதற்காக மட்டுமே நடக்கிறது.
காங்கிரஸ் மற்ற கட்சிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக உள்ளது தமிழ்நாட்டு அரசியல் விவகாரத்தில் இந்தக் குற்றச்சாட்டு அப்பட்டமாக வெளிப்பட்டு காங்கிரசின் போலி முகத்தைத் தோலுரித்து விட்டது.

தங்களுக்குள் இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி இப்போது முடிந்துவிட்டது. ஏனெனில், சண்டையிடுவதற்கு இப்போது இடமே மிஞ்சவில்லை.
இந்தியா கூட்டணியில் மம்தாவுக்கும், காங்கிரஸிற்கும் இடையே நிலவும் குழப்பமான சூழல் கூட்டணியின் ஒற்றுமையைக் குலைப்பதாகப் பேசப்படுகிறது. அடுத்த 20 ஆண்டுகால அரசியலைச் சிந்திக்கும் ஆற்றல் மாநிலக் கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு மென்மையாக போக்கு கொண்ட பாஜக என்ற குற்றச்சாட்டுக்கு ஒவ்வொரு முறையும் உறுதியாகிக்கொண்டே இருக்கிறது.
இதை பீகார், மேற்குவங்கத்தில் மறைமுகமாக அக் கட்சி உறுதி செய்தது. தமிழ்நாட்டில் நேரடியாகவே காங்கிரஸ் பாஜகவிற்கு சாதகமான முடிவை எடுத்துள்ளது. அதாவது தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்தைப் பின்னுக்குத் தள்ளி வடக்கர்களின் ஆதிக்கத்தை, பார்ப்பனியத்தை மீண்டும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்திற்கு முன்பு இருந்த சூழலைக் கொண்டுவரத் துடிக்கும் சக்திகளின் சதிக்குத் தெரிந்தே காங்கிரஸ் துணை போகிறது.

இதனை வீழ்த்த தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்! களைகளைப் பிடுங்கி வீசும் பணியில் திராவிடக் கொள்கை பக்குவபட்டுவிட்டது. அதன் அடிச்சுவட்டில் வந்த இயக்கங்களுக்கு என்றுமே பின்னடைவு இல்லை!
