சென்னை, மே 07 தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவும், வழக்கமான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் இனி எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த ஏப்.23இல் நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு, மார்ச் 15இல் வெளியானது. அப்போது முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் நடைபெற்றன. வி.ஏ.ஓ.க்கள் முதல், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள், ஆட்சியர் வரையிலான வருவாய்த்துறையினர் மற்றும் அனைத்து அரசு துறையினரும் வழக்கமான பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
தொகுதிவாரியாக ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துவது, வேட்பு மனுக்கள் பெறுவது, பரிசீலனை செய்வது, தேர்தல் பொருட்கள், படிவங்களை தருவித்து, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பது, இ.வி.எம், இயந்திரங்களை தயார்படுத்துவது, வாக்காளர் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஓட்டுப்பதிவு நாள் பணிகள் என. இரவு பகல் பாராமல், விடுப்பு இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
