இனி சோலார் பேனல் தேவையில்லை, சூரிய ஒளியை நேரடியாக உள்வாங்கி சேமித்து வைக்கும் “சோலார் ரெடாக்ஸ் புளோ பேட்டரி” தொழில்நுட்பத்தை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இனி சோலார் பேனல் தனியாக, பேட்டரி தனியாக என்று அலைய வேண்டிய அவசியமில்லை. சூரிய ஒளியை உள்வாங்கி, அதை அப்படியே நேரடியாக சேமித்து வைக்கும் அற்புதமான “சோலார் ரெடாக்ஸ் புளோ பேட்டரி” (Solar Redox Flow Battery – SRFB) தொழில்நுட்பத்தை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கமான சோலார் சிஸ்டங்களில் 2 கட்டங்கள் உண்டு. முதலில் சோலார் பேனல் ஒளியை மின்சாரமாக மாற்றும், பிறகு அந்த மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படும். இந்தச் சாதனத்தின் மீது சூரிய ஒளி பட்டவுடன், அதனுள் இருக்கும் திரவங்களில் வேதிவினைகள் (Chemical Reactions) தொடங்கி, ஆற்றல் அப்படியே சேமிக்கப்படுகிறது. ஒளியை மின்சாரமாக மாற்றி, பிறகு பேட்டரிக்கு அனுப்பும் வேலையே இல்லை. நேரடியாக ஒளியிலிருந்து வேதி ஆற்றலாக (Solar-to-Chemical) மாறுகிறது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, கரிம வேதியியல் (Organic Chemistry) உதவியுடன் இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இதில் 0.8 அங்குல அளவிலான சிறப்பு சிலிக்கான் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட மாடல்களில் திரவங்கள் சீக்கிரம் கெட்டுவிடும் அல்லது அரிப்பு ஏற்படும். ஆனால், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘2,6-DBEAQ’ எனும் வேதிப்பொருள், பேட்டரி நீண்ட காலத்திற்குத் துல்லியமாகச் செயல்பட உதவுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சாதனத்தை ஒரு ‘செயற்கை சூரிய ஒளி’யின் கீழ் வைத்துச் சோதித்தனர். இதில் 4.2% செயல்திறன் கிடைத்துள்ளது. சோலார் பேனல்களுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும், ஒரு முழுமையான ஒருங்கிணைந்த அமைப்பாக இது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. 10 முறை முழுமையாக சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்த பிறகும், இந்த பேட்டரி அதன் திறனை இழக்காமல் சீராகச் செயல்பட்டது.
பேனல் மற்றும் பேட்டரியை இணைக்கப் பெரிய அமைப்புகள் தேவையில்லை. தனித்தனிப் பெட்டிகளுக்குப் பதில் ஒரே ஒரு சாதனம் போதும். கைப்பேசிகள் முதல் மின்சார வாகனங்கள் வரை, எவ்வித வெளிப்புற உதவியுமின்றி தானாகவே வெயிலில் சார்ஜ் ஆகும் வசதிக்கு இதுவே அடித் தளம். எளிமையான டிசைன், குறைவான உதிரிபாகங்கள், நேரடி ஆற்றல் சேமிப்பு, இதுதான் இந்த சோலார் பேட்டரியின் தனிச் சிறப்பாகும்.
