‘மக்கள் தீர்ப்பு’ என்று தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, தனது லட்சியப் பயணத்தைக்
கடமை உணர்வோடு தொடர்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!
‘ரோடு ஷோ’, ‘காட் ஷோ’ என்ற பல்வேறு வித்தைகள், வியூகங்களைச் செய்தும் – தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மரண அடி
‘மக்கள் தீர்ப்பு’ என்று தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, தனது லட்சியப் பயணத்தைக் கடமை உணர்வோடு தொடர்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! ‘ரோடு ஷோ’, ‘காட் ஷோ’ என்ற பல்வேறு வித்தைகள், வியூகங்களைச் செய்தும் – தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மரண அடி. மாநாட்டு முகப்பிலிருந்து பெரியார் படத்தை அகற்றியவர்களை தமிழ்நாட்டிலிருந்து அகற்றிய வாக்காளர்கள்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தனது கொள்கை லட்சியப் பயணத்தைக்
கடமை உணர்வோடு தொடர்கிறார்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் காரணமாகக் கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஆண்ட தி.மு.க., எதிர்க்கட்சியாகி உள்ளது. அதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘மக்கள் தீர்ப்பு’ என்று அவருக்கே உரிய கண்ணியத்துடன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டு, தனது கொள்கை லட்சியப் பயணத்தை அரசியல் கடமை உணர்வோடு தொடர்கிறார்!
இந்தத் தேர்தல் முடிவுகளின் மற்றொரு முகம் – பரிதாபத்திற்குரிய பா.ஜ.க. படுதோல்வியும் மற்றும் தோல்வி முகங்களும் ஆகும்!
‘டபுள் எஞ்சின் சர்க்கார்’ என்று பிரதமர் மோடியும், அவரது பா.ஜ.க.வின் ரத, கஜ, துரக, பதாதி பட்டாளமும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனைத் தொகுதிகளிலும் படையெடுத்துப் பாய்ச்சல் காட்டினர்.
ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. வடபுலத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் பறந்து வந்தனர். அட்ரஸ் இழந்த ‘அரோகரா’ அண்ணாமலைகள் – ‘ெஹலிகாப்டர்’ பிரச்சார ‘பற’ந்தாமன்கள் ஆனார்கள்!
இவையெல்லாம், தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறியப் போவதாக ‘அடமான எஜமானர் அமித்ஷா’, வழக்கமான தமிழ்நாட்டு பா.ஜ.க. நிலைய வித்துவான்களான தமிழிசை, ஹிந்து முன்னணியின் திருப்பூர் தலைவர், ஏவுகணைகள், அக்கிகாரத்தின் அலம்பல், அர்ச்சனை சம்பத்துகள் இவையெல்லாம் தாண்டி,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள்….
தமிழ்நாட்டிற்கென தனியே அனுப்பப்பட்டு, வீடுதோறும் திண்ணைப் பிரச்சாரம் (நேருக்கு நேர் திட்டப்படி) ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் அனுப்பப்பட்ட ‘பிரச்சாரக்குகள்…’
இந்தப் பட்டாளம் எல்லாம் ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில், மழை பொழிவதுபோல, அவதூறுகளைப் பொழிந்தது. ‘ரோடு ஷோ’, ‘காட் ஷோ’ என்ற பல்வேறு வித்தைகள், வியூகங்கள் எல்லாவித முறைகளையும் தேர்தல் ஆணையத்தின் தோன்றாத் துணையோடு, ஒரு மாத ஆட்சியே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நடத்தியது போன்று நடத்தினார்கள். எஸ்.அய்.ஆர். என்ற உதவியின் துணையோடு தமிழ்நாட்டில் எப்படியும் என்.டி.ஏ. ஆட்சி – தாமரை மலர்ந்தே தீருவது உறுதி என்று என்ற ஆசைக் குதிரையில் அதிக வேகமாகப் பயணித்தனர். அதற்கு அடிபணிந்து, அடமானம் வைத்த அ.தி.மு.க. தலைவரும், அவரது பரிவாரங்களும் மோடி பேசிய மதுரை பொதுக்கூட்டத்தில், மாநாட்டுப் பந்தலில் உச்சியில் வைக்கப்பட்ட பெரியார் படத்தை அகற்றச் சொல்லி, ஆணவ ஆணை பிறப்பித்தனர்; அதற்கு எந்த மறுப்பும் கூறாது அடிபணிந்து தூக்கி வீசி எறிந்தனர்!
தேர்தல் முடிவுகள்
பா.ஜ.க.வுக்கு மரண அடி!
இப்போது வந்துள்ள தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மரண அடி; தமிழ்நாட்டில் மீண்டும் எழ முடியாது இடுப்பொடித்துக் கீழே அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.
உதகையில் மட்டும் ஒரேயொருவர் அதுவும் தட்டுத் தடுமாறி வெறும் 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் என்ற பரிதாபத்திற்குரிய நிலையைத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்குப் ‘பரிசாக’ அளித்துள்ளனர்.
முகத்தை எங்கே அந்தக் காவிகள் கொண்டு போய் வைப்பர்?
முன்பு 4 பேர்; இப்போது அது தேய்ந்து ஒருவர் மட்டுமே மிச்சம். அதுவும் அறிமுகம் இல்லாத ஒருவர் என்ற கையறு நிலை!
தோற்றவர்களில் மூன்று முறை தோல்வி கண்ட ஒன்றிய அமைச்சர் முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர், நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராசன், அகில இந்திய பி.ஜே.பி. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் வக்கணைப் பேச்சாளர்கள் பலரும் முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிட மிகக் குறைந்த ஓட்டுகள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் மனதில் உள்ள பெரியாரை அகற்ற முடியுமா?
மாநாட்டு முகப்பிலிருந்து பெரியார் படத்தை அகற்றியவர்களை அகற்றிய தமிழ்நாட்டு வாக்காளர்கள் மனதில் உள்ள பெரியாரை அகற்ற முடியுமா?
முடியாது, முடியவே முடியாது!
தமிழ்நாடு கடும் பாறை; இங்கு ‘தாமரை’ மலரவே மலராது என்று நாம் பலமுறை சொன்ன பதிலையே மீண்டும் காவி வித்தைக்காரர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்!
‘திராவிட மண் – திராவிட மாடல் ஆட்சி’யின் விளைவாக இந்த மண் கொள்கை உரம் போட்டு பக்குவப்படுத்தப்பட்டுள்ளது. பாறையில் மோதினால், அதன் பார தூர விளைவுகளைத் தொடர்ந்து அறுவடை செய்வதைத் தவிர, வேறு எந்தப் பலனும் கிடைக்காது.
‘கூடாநட்பின் தேடா விளைவு!’
உங்களோடு கூட்டுச் சேர்ந்து கட்சியை அடமானம் வைத்த அ.தி.மு.க.வின், அவரது கூட்டணியின் கதியோ, அதோ கதி!
தமிழ்நாட்டில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, பல தொகுதிகளில் ‘டெபாசிட்’ இழந்ததுதான் ‘கூடாநட்பின் தேடா விளைவு!’
மற்றொரு தோல்வியும் – பிளவும்தான் விடை!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.5.2026
