சென்னை, மே 6– “கிராம நத்தம்” நிலங்களை தனிநபர்கள் யாரும் ஆக்கிரமிக்கவோ அல்லது அதற்கு முழு உரிமை கோரவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கிராம நத்தம் நிலம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், கிராம நத்தம் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றுமாறு தமிழ்நாடு அரசு தாக்கீது (நோட்டீஸ்) அனுப்பியிருந்தது. இந்த அரசு உத்தரவை எதிர்த்து, கடை உரிமையாளர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது கடையை அகற்ற இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிராம நத்தம் நிலங்கள் தொடர்பான சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி பின்வரும் கருத்து களைப் பதிவு செய்தனர். கிராம நத்தம் நிலங்கள் என்பது பொதுப் பயன்பாட்டிற்கானது. அவற்றை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதோ அல்லது அதன் மீது முழு உரிமை கொண்டாடுவதோ சட்டப்படி செல்லாது.
மேல்முறையீடு வழிவகை: அரசின் தாக்கீதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் ஏற்கெனவே இடமுள்ளது. அதை விடுத்து நேரடியாக நீதிமன்றத்தை அணுகியது முறையல்ல. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, கடை உரிமையாளர் தொடர்ந்த மனுவை நீதிபதிகள் அதிரடியாகத் தள்ளுபடி செய்தனர்.
இந்தத் தீர்ப்பு, நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் போலவே கிராம நத்தம் நிலங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
