சென்னை, மே 6- நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், “யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை” என்பதைத் தெரிவிக்கும் நோட்டா (NOTA) மீதான மக்களின் ஆர்வம் குறைந்து வருவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நோட்டாவின் பின்னணி
கடந்த 2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, வேட்பாளர்களைப் பிடிக்காத வாக்காளர்கள் படிவம் 49-O-வை நிரப்பித் தர வேண்டியிருந்தது. இதில் ரகசியக் காப்பு மீறப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர் 11, 2013 அன்று இந்திய தேர்தல் ஆணையம் ‘நோட்டா’ முறையை அறிமுகப்படுத்தியது.
2013இல் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டில்லி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறிமுகமானது.
தமிழ்நாட்டில் வருகை: 2013 டிசம்பர் 4இல் நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்: 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதல்முறை அறிமுகமானது.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1,99,801 (0.41%) வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவைத் தேர்வு செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
காரணம் என்ன?
மக்களாட்சியில் தங்களுக்குப் பிடிக்காத வேட்பாளர்களைப் புறக்கணிக்க நோட்டா ஒரு வலிமையான ஆயுதமாகக் கருதப்பட்டாலும், நடைமுறையில் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் விழுந்தாலும் அது தேர்தலை ரத்து செய்யாது என்ற நிலை உள்ளது.
இதனால், நோட்டாவிற்கு வாக்களிப்பதை விட, தங்களுக்கு ஓரளவேனும் உடன்பாடான வேட்பாளருக்கே வாக்களிக்க மக்கள் முன்னுரிமை அளிப்பதே இந்த சரிவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
