இரா.முல்லைக்கோ, பெங்களூரு
“தேய்தல் வளர்தல் திங்கள் ஒழுக்கம்
தேயாப் புகழ் செயல் எங்கள் வழக்கம்”
எனும் புரட்சிக் கவிஞர் வகுத்த கொள்கை நெறிப்படி பத்து வயதில் கொள்கைப் பரப்பிட மேஜை மீது நின்று அறிவாசான் தந்தை பெரியாரின் தத்துவங்களை முழங்கியவர் நமது குடும்பத் தலைவர் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
இன்றளவிலும் 93 அகவையிலும் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு, மூன்று அல்லது நான்கு கூட்டங்களில் தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார்.
“குழந்தை அழாவிட்டால் தாய்க்கு ஒன்றும் புரியாது” என்ற ரஷ்ய பெரு நாட்டின் பழமொழி யாகும். அப்படி சமூகத்திற்கு ஏற்படும் சிக்கல் எதிர்வரும் பிரச்சினைகளை மிகத் தெளிவாக, கூர்மையாக அணுகி அவற்றைக் களைகின்ற முயற்சியின் வடிவமாக ஆளும் வர்க்கத்தினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் பாங்குடன் எடுத்துரைத்துத் தீர்வு காண்பதில் வல்லவராக விளங்கிடும் மாமேதை தான் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
தலைவர் கண்ணியம்
கண்ணை இமை காப்பது போல் கழகக் கண்மணிகளைக் காப்பது தலைவரின் தலையாயக் கடமை. தேர்தல் பரப்புரைகளுக்கு இடையே ஏப்ரல் 14 அன்று நள்ளிரவில் பெங்களுரு வந்து தங்கி காலை எழுந்து விருது வழங்கும் விழாவிற்கு புறப்படத் தயாரான தலைவர் உற்சாகப் பெருக்குடன் வரவேற்பு அறைக்கு வந்தார். காலில் ஏற்பட்ட கடும் வலியோடு அனைவரையும் மகிழ்ச்சி பொங்க சந்தித்து நலம் விசாரித்து விட்டு, சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகக் காப்பாளர் இரா.தே.வீரபத்திரனின் 86 அகவையினை நினைவுகூர்ந்து பயனாடை அணிவித்து கரவொலிக்கு இடையே வாழ்த்துக் கூறி மகிழ்ந்தார்.
பெரும் படை
தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெய ராமன், மாநிலத் தலைவர் கே.குணவேந்தனின் வாகனம் முன்னே செல்ல, தலைவரின் வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் பின் சென்றன. எழுச்சி முழக்கத்தோடு பெங்களுரு மாகடி சாலையில் அணிவகுத்து புறப்பட்டு குறித்த நேரத்தில் அஞ்சனா நகர் “ஸ்பூர்த்தி தாமா” நிறுவனம் அமைந்த நாத்திக தேகமாம், புத்தர் பூமியைச் சென்றடைந்தது. திரளானோர் கழகத் தலைவரை வரவேற்று அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். புத்தர் பூமி எங்கிலும் வண்ணக் கொடிகளாலும் முகப்பில் வாழை தென்னை சோலைகளால் அலங்கரிப்பு செய்யப்பட்டிருந்தன. ஆங்கே, கழகத் தலைவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறுவன நிர்வாகிகள் வரவேற்றனர்.
கருஞ்சட்டை
“காடு மணக்கும் கடம்பு மணக்கும்
நாடு போற்றும் நம் தலைவர்
மானுடக் குல மாண்பாளர்
அருள் நிறைக் கருங்குயிலாய்க்” காணப்பட்டார். எண்ணிலா மக்களும், மாணவர்களும், கருஞ்சட்டைப் படையினரும் அரங்கில் அமர்ந்திருக்க, நிகழ்வு தொடங்கியது.
புரட்சியாளர்
புரட்சியாளர் அம்பேத்கர், மாட்சிமைக்குரிய புத்தர் பெருமகனார் ஒளிப்படம் தாங்கிய பதாகை அரங்கின் பின்புறம் சிறப்புடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பண்பும் பாசமும் நிறை புத்தரின் நெறி நிறைந்த சுடர்மிகு பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அரங் கில் புத்தரின் சிலை அலங்கரித்து ஒளி விளக்குகள் தலைவர் மற்றும் நிர்வாகிகளால் ஏற்றப்பட்டது. அமைதிப் பேரொளி அரங்கை நிலை கொள்ளச் செய்தது.
வரவேற்புரை
‘ஸ்பூர்த்திதாமா’ பேரமைப்பின் சீரிய செயல் பாட்டாளர் மாண்பாளர் இந்துதார் அவர்கள் நிர்வாக அமைப்பினை விவரித்தும் செயல்பாடுகள் குறித்தும் அனைத்து சார்பு மக்களை வரவேற்று நெடிய நேரம் உரை நிகழ்த்தினார்.
புத்த நெறி இயக்கம்
இந்துவாகப் பிறந்து விட்டேன், இனி இந்துவாக சாகமாட்டேன் என புத்த நெறி இயக்கம் தழுவிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நெறி பரப்புகின்ற பேரியக்கம் தான் ஸ்பூர்த்திதாமா எனும் நாத்திகப் பேரமைப்பாகும். அற நெறியோடு அன்பின் பயிலகமாய் கல்விக்கூடம், சமூகநீதி, சமத்துவம், முதியோர் வாழ்வகம் போன்ற நற்பணிகளை எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி சற்றேறக்குறைய அரை நூற்றாண்டுகளாக போராளிகளைக் கண்டறிந்து சிறப்பு செய்து வருகின்றனர். இதன் நிறுவனத் தலைவராக ‘இன்றளவிலும் செயல்பட்டு வரும்’ பெருமகனார் எஸ்.மரியசாமி ஆவார்.
கண்ணியவான்களின் கோட்டம்
புத்த நெறி போற்றிச் செயல்படும் கண்ணிய வான்கள் நிறைந்த பதிவு பெற்ற அறநெறிக் கோட்டமாய் செயல்படுகின்றனர். நுழைவுவாயிலுக்கு நேர் மேற்குப் பகுதியில் மிகப்பெரிய புத்தரின் பெரிய வெண்மை நிறச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது
ஆன்றோர் பெருமக்கள் புடைசூழ, பல்வேறு விருதுகளைப் பெற்ற ஆற்றல் பெருநிதி, தகைசால் தமிழர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “போதி விருட்சம் விருது” வழங்கிட அறிவித்தனர். அரங்கமே அதிர்வலையால் பெரும் மகிழ்வுடன் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா” எனும் புரட்சிப் பாவலரின் எழுச்சி நிறை பாங்குடன் 2026ஆம் ஆண்டிற்கான ஸ்பூர்த்திதாமாவின் “போதி விருட்சம்” விருதினை வழங்கி பயனாடை அணிவித்து, மேலும் ரூபாய் ஒரு லட்சம் நிதியும் வழங்கினர். இதனை சமூக நீதிச் சீரிய சிந்தனையாளர் வீரபத்திரப்பா வழங்கி சிறப்பித்தார். ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களுடன் சமுதாயச் செயல்பாட்டாளர்கள் திருமதி கே.கங்கம்மா, திரு.பாசசனா சிங்கே, டாக்டர் இராமகிருஷ்ணப்பா, திருமதி சித்வஜோடத்தி, மற்றும் திருமதி மரியம்மா ஆகியோருக்கு விருதுகளும் ரூ.25 ஆயிரம் கொடையும் வழங்கி, பண்பாட்டுச் சிந்தனையாளரும் எழுத்தாளருமான வீரபத்திரப்பா அவர்கள் சிறப்புச் செய்தார்.
தலைவரின் உரைவீச்சு
எடுத்த எடுப்பிலேயே “போதி விருட்சம்” எனும் தேசியப் பெரும் விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கன்னட மொழியில் வணக்கம் கூறி பேச்சைத் தொடங்கினார். பின், ஆங்கிலத்தில் நெடிய உரையை அழகுற வழங்கினார். இறுதியாக, கன்னடத் திலே நிறைவு செய்தார். பார்வையாளர்கள் மட்டிலா மகிழ்ச்சியோடு பலத்த கரவொலியால் அரங்கையே அதிர வைத்தனர் அவரின் துவக்க உரை!
மானுட குலத்தின் மறுமலர்ச்சி
அன்பின் உறைவிடம்
அறநெறியின் உயர்விடம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
எனத் தனது அறிவுமிகு போதனையால் நாடு கடந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறியாளர் புத்தர்! அவரது நெறியைப் பெருந் திரள் மக்களோடு புத்த நெறி தழுவிய அரசியல் சட்டம் இயற்றிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், மானுட மேன்மைக்கு இறுதி மூச்சு வரை போராடிய பிறவி நாத்திகர் அறிவாசான் தந்தை பெரியார் அறிவுலக மேதைகளின் செயல்பாடுகள் பற்றியும், இன்றைய உலகின் தேவைக்கு அன்றே சிந்தித்ததன் விளைவாக “ஸ்பூர்த்திதாமா” எனும் பேரமைப்புகள் சான்றோர் பெருமக்களால் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு அருகாய் படர்ந்து போதி மரமாய் பரவி வளர்ந்து இன்று ஏழை எளிய மக்களின் கோட்டமாய் விளங்குகிறது.
மொழி தடையில்லை
மனித சமுதாயத்திற்கு மொழி ஒரு கருவி! இதனால் யாருக்கும் மொழி தடையில்லை. எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவப்படி செயல்பட வேண்டும். ஸ்பூர்த்திதாமா அமைப்பினர் அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு பிறந்த நாளில் தன்னை அழைத்து சிறப்பு செய்தது போல் 2026ஆம் ஆண்டிலும் தன்னை அழைத்து “போதி விருட்சம்” விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மட்டிலா மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிறுவனம் மென்மேலும் வளர்ந்து சமூக சமுதாயப் பணியாற்றிட வேண்டும் என்று ஏராளமான கருத்துகளைப் பேசிச் சிறப்பித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
வாழ்த்துரைகள்
திரைப்பட மூத்த கலைஞர், மேனாள் மூத்த நீதியரசர் சதாசிவம் மற்றும் மூத்த செயல்பாட்டு அறிஞர்கள் விருது பெற்ற தலைவரைப் பாராட்டிப் பேசினர்.
போற்றுவார்
விருது பெற்ற பின்னர் கழகத் தலைவர் அவர்கள் எழுந்து நின்று அவையோருக்கு வாழ்த்துகள் கூறினார்.
கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைவர் சே.குணவேந்தனும், செயலாளர் இரா.முல்லைக்கோவும் சிறப்பா(க)ப் பயனாடை அணிவித்து மகிழ்வினைத் தெரிவித்தனர்.
“செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம். திறமையும் நேர்மையும் வெளிப்படும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குகிறான்” என சட்ட மேதை அம்பேத்கர் கூறிய வரிகளே மனதில் நிழலாடுகிறது!
