மும்பை, மே 5- மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து மும்பை வந்தடைந்த விமானத்தில் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரைச் சேர்ந்த ஜெசிறீல் லுவோடா என்ற பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதிகாரிகள் அவரது உடைமை களைச் சோதனையிட்ட போது, ரகசியமாக மறைத்து வைக்கப் பட்டிருந்த 1,426 கிராம் கோக்கைன் (Cocaine) கண்டறியப்பட்டது. பன்னாட்டுச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெசிறீல் லுவோடாவை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தக் கடத்தல் விவகாரத்தில், தெற்கு மும்பையின் நாக்பாடா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் அவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் பன்னாட்டுக் கும்பல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து மும்பை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
