மகத்தான மனிதநேயம்! மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை கொடையாக வழங்கிய ராணுவ வீரர்! 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது

1 Min Read

பஞ்சகுலா, மே 5– அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சாந்திமந்திர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி, மூளையில் ஏற்பட்ட குருதிக்கசிவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 41 வயதான அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 2.5.2026ஆம் தேதி, அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதயம் கொடை

இதையடுத்து, அந்த பெண்ணின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதற்கு அவரது கணவர், 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதற்கிடையில், டில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவனுக்கு அவசரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை சிறுவனுக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, சண்டிகரில் இருந்து விமானம் மூலம் இதயத்தை டில்லிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, சண்டிகர் விமான நிலைய நிர்வாகம், அரியானா, பஞ்சாப் மற்றும் டில்லி போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் குறுகிய கால இடைவெளிக்குள் இதயம் டில்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மருத்துவர்கள் அந்த இதயத்தை சிறுவனுக்கு பொருத்தி, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதன் மூலம், 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *