வேந்தரும், பேரரசும் கலந்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விழா ஏப்ரல் 30 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
வேந்தர் என்பது பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி .வீரமணி அவர்களைக் குறிக்கும்.
பேரரசு என்பது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைக் குறிக்கும்.
வேந்தர் ,பேரரசு இரண்டும் பெருமை, தலைமை, உயர்வு பொருளை நல்கும் சொற்கள்.
வேந்தர் என்பது நிர்வாகப் பதவி- பொறுப்பைச் சுட்டும் ;
பேரரசு என்பது உருவகப் பட்டம்.கலை உலகின் கவுரவத்தைக் காட்டும்.
வேந்தரும் கவிப்பேரரசும் இணைந்து கலந்து கொண்ட விழா தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் புரட்சிக் கவிஞர் விழாவினை ஏப்ரல் 30ஆம் தேதி நடத்து கின்றோம்; தாங்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் நேரில் கேட்டுக் கொண்டார்கள்.
கவிஞரின் நாட்குறிப்பு நிகழ்ச்சிகளால் நிரம்பித் ததும்ப கூடியது. இலக்கியம், கலை, சமூகம், நட்பு என நேர நெருக்கடியோடு இடைவிடாது இயங்கிக்கொண்டே இருப்பவர் கவிஞர் வைரமுத்து.
ஆசிரியர் அய்யா அழைத்தவுடன்,
‘ஆணையாக ஏற்கிறேன்’ என்று
உடனடியாக ஒப்புதல் தெரிவித்தது அவர் தமிழர் தலைவரின் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு ;
மதிப்பின் அடையாளம்;
நேசிப்பை உணர்த்தும் வெளிச்சக் கீற்று.
காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது வைரமுத்துவின் வாகனம்.
வெற்றித் தமிழர் பேரவைச் சொந்தங்கள் அவருடன் அணிவகுத்து வந்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தின் முகப்பில் நின்று, பொன்னாடைச் சூட்டி வரவேற்றார் பல்கலைக்கழ கத்தின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய வீ. அன்புராஜ் அவர்கள்.
மாணவர்கள் அழகிய பூச்செண்டு கொடுத்து ஆனந்தம் கொண்டனர்.
‘பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிப் பார்ப்போமா’ என்று அன்புராஜ் அன்புடன் வினவ, உற்சாகமாய் ஒப்புதல் தந்தார் கவிப்பேரரசு.
தேன் தடவிய 20 நிமிடங்கள்.
ஊர்ந்து சென்ற வாகனத்தில் கவிஞரிடம், வீ.அன்பு ராஜ் அவர்கள் ஒவ்வொரு கட்டடத்தைப் பற்றியும், அங்கே இயங்குகின்ற துறைகளைப் பற்றியும் எடுத்து ரைத்தார். நூலகக் கட்டடத்தைச் சுட்டிக் காட்டினார்.
இவை யாவும் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் ;ஆனால் இயற்கையோடு இயைந்த பணிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை இயற்கையை நேசிக்கும் கவிஞர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு மற்ற பகுதிகளைக் காட்டினார்.
எங்கு நோக்கினும் பசுமை; செடி, கொடி, மரங்கள். பச்சைப்பட்டு போர்த்திய வளாகம்.
இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் இல்லத்தைப் பார்வையிட்டார்.
‘மரங்களைப் பாடுவேன்’ என்று மரங்களின் மேன்மையை இதயத்தில் பதிய வைக்கும் உலகத் தரக் கவிதை வரைந்த கவிஞர், வாகனத்தை விட்டு இறங்கி அங்கே பலாக் கன்று ஒன்றை நட்டு மகிழ்ந்தார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே 10 ஏக்கரில் மூங்கில் காடு அமைந்திருக்கிறது. 1600 மூங்கில்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றன; சூரிய வெளிச்சம் உள்ளே நுழைய முடியாத அடர்த்தி.
அஃது ஒரு ஆக்சிஜன் தொழிற்சாலை. அந்த காட்டுக்குள் நுழைந்த கவிப்பேரரசு வியப்பில் ஆழ்ந்தார்.
அடடே !அடடே! என்று ஆச்சரியப் பூச்சொரிந்தார். அங்கே சின்னதாய் ஊஞ்சல் நிகர்த்த மூங்கில் பாலம்.
மூங்கில் பாலத்தில் நின்று இயற்கையோடு ஒன்றிப்போன கவிஞரை ஒளிப்படக் கலைஞர் படங்களை எடுத்து தள்ளினார்.
‘களர் நிலத்தில் அன்புராஜ் அவர்கள் ஒரு வனாந்த ரத்தை உருவாக்கியிருக்கிறார்’என்று வைரமுத்து கொண்டாடினார்.
பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டு கவிப்பேரரசு வைரமுத்து வேந்தரின் பணிக் கூடத்தில் பூவாய் நுழைந்தார்.
வேந்தர் அய்யா அவர்கள் உற்சாகமும் சிரிப்புமாய் எழுந்து நின்று வரவேற்று மகிழ்ந்தார்.
சிறிது நேர உரையாடலுக்குப் பின்பு வேந்தரும் கவிப்பேரரசும் விழா மண்டபம் நோக்கி வந்தனர்.

தமிழர் தலைவர் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நிகழ்த்துவதற்காக பயணம் செய்த அதே வாகனம். வாகனம் பற்றி தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தது.
‘இது எனக்கு இன்னொரு வீடு’ என்றார் வேந்தர்.
‘இடைவிடாது பயணிப்பவர் நீங்கள் ‘
என்று ஆமோதித்தார் கவிஞர்.
வேந்தரும், கவிப்பேரரசும் விழா மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் ஆரவார உற்சாக ஒலி எங்கும் பரவியது.
பறவைகள் பத்தாயிரம் சிறகடிப்பது போல, ‘படபட வென’ கைதட்டல் ஓசைகள் அரங்கில் நிறைந்தன.
புரட்சிக் கவிஞரின் 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. விழாவின் தொடக்கத்தில் 30 நிமிடங்கள் புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் பாடியும், பாடல்களுக்கு ஏற்ப நடனமாடியும் புரட்சிக் கவிஞரின் சிந்தனைகளை மாணவர்கள் இதயத்தில் விதைத்தார்கள்.
இளங்கலை, இரண்டாம் ஆண்டு, எழில் கட்ட டக்கலைத் துறை மாணவி கியூபா வரவேற்புரை நிகழ்த்தினார். மேடையில் புரட்சிக் கவிஞரின் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வேந்தரும் கவிப்பேரரசும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்.
விழாப் பேருரை நிகழ்த்த கவிப்பேரரசு அவர்களை அழைத்த போது அரங்கம் நிமிர்ந்து அமர்ந்தது.
சிங்க நடை போட்டு ஒலி வாங்கியின் அருகே வந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
கையில் எவ்விதக் குறிப்பும் இல்லை; பெயர்கள், கவிதைகள், புள்ளி விவரங்கள் , மேற்கோள்கள், சம்பவங்கள் மூளையில் பொதிந்து கிடந்தன; நாவில் தமிழ் நடம் புரிந்தது .40 நிமிடம் தேன் சொட்ட சொட்ட இலக்கியப் பேருரை நிகழ்த்தினார்.
அவருடைய கம்பீரத்தோற்றம்,
துல்லியமான உச்சரிப்பு,
சலித்தெடுத்த சுகமான சொல்லாட்சி,
மாதுளையின் முத்து போல் நிறைந்திருக்கும் கருத்துச் செறிவு,
அளவிட முடியாத கவிதை ஆளுமை
அனைத்தும் அரங்கைக் கட்டி போட்டது.
ஒரு சொற்பொழிவை எப்படி அமைக்க வேண்டும் என்ற வித்தை அறிந்தவர் அவர். ஒவ்வொரு மேடையிலும் வெற்றி கொடி நாட்டுபவர்.
புரட்சிக் கவிஞரின் உள்ளக் கருத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பது என்பதை மய்யக் கருத்தாக வைத்துக் கொண்டார்.
கல்வியின் பெருமை,
கல்வி குறித்த புள்ளி விவரம்,
மாணவர்களுக்கு அறிவுரை,
பேராசிரியர்களுக்கு வேண்டுகோள்,
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சிறப்பு,
தந்தை பெரியாரின் உழைப்பு,
வேந்தர் அய்யா அவர்களின் ஆற்றல்
என்று பொன் ஆரத்தில் நவரத்தினக் கற்க ளைப் பதிப்பது போல பொருத்தமானவற்றை- அவசியமானவற்றை இணைத்து இலக்கிய ராஜாங்கத்தை நடத்திவிட்டார்.
கல்வியின் பெருமை
* கல்வி என்பது இந்த உலகத்தின் புதிய திறவுகோல்
*உண்மையான கோயில் பள்ளிக்கூடங்களும், பல்கலைக்கழகங்களும்தான்.
* இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 1,338
* இந்தியாவில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை 52 ,081 மாணவர்களுக்கு அறிவுரை
* இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* நீங்கள் உலக நீரோட்டத்தோடு கலக்க வேண்டும்.
* நீங்கள் படித்து மேம்பட வேண்டும்.
* சமூகம் ஒருமைப்பட வேண்டும்.
* இந்தப் போட்டி உலகத்தில் நீங்கள் நீந்தி வர வேண்டும்.
* நீங்கள் வென்றால் உங்களோடு பெரியார் வாழ்கிறார் என்று பொருள்.
* உயர் கல்வி படிப்பவர்கள் 4 கோடியே 46 லட்சம் மாணவர்கள். பட்டம் பெறுபவர்கள் 95 லட்சம் மாண வர்கள். வேலை கிட்டாத இளைஞர்கள் 44 சதவிகிதம். பட்டம் மட்டும் போதாது. கூடுதலாகத் தொழில் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும்.
* உங்களுக்குப் போட்டியாளர்கள் உலகம் முழு வதிலும் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* வேந்தர் வீரமணி அவர்களை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்; சிந்தனையாளர்களாக வேண்டும்.
* பாடப் புத்தகம் என்பது அறிவுக்கான அறிமுகம்; அறிவு பல இடங்களில் இருக்கிறது ;அதைத் தேடி நீங்கள் பயணப்பட வேண்டும்.
பேராசிரியர்களுக்கு வேண்டுகோள்
* வாரத்தில் ஒரு நாள், ஒரு வகுப்பு ,பாரதிதாசன் வகுப்பு.
10 மாணவர்கள், 10 பாடல்கள் வாசித்துக் காட்டு வார்கள்; 100 மாணவர்கள் செவிமடுப்பார்கள்.
பாரதிதாசன் பாடலைச் சமூகப்படுத்துவதற்கு இதுதான் வழி. புரட்சிக் கவிஞரை மக்கள் மயப்ப டுத்துங்கள்; காலத்தின் நீட்சியோடு கொண்டு செல்லுங்கள்.
புரட்சிக் கவிஞரைப் பற்றி
‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம் – ஜாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’’
தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துச் சொன்ன இந்த வரிகள் புரட்சிக் கவிஞர் சமூகத்துக்குச் செய்த தொண்டாகும்.
* சோலையைப் பார்த்தவுடன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு அதை நிர்மாணித்த தொழிலாளி ஞாபகத்துக்கு வருகிறார்.
* தொட்டிலுக்குள் கிடக்கும் பெண் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடுகின்ற போது ,
‘‘சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு !’’
என்று பிள்ளைப் பருவத்திலேயே பகுத்தறிவைத் தொட வேண்டும் என்ற லட்சிய வெறியில் பேனா பிடித்து எழுதியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
தந்தை பெரியாரின் உழைப்பு
* பெரியார் வருவதற்கு முன்னால் இந்தச் சமூகம் தாழ்ந்து கிடந்தது.
* பெரியார் கல்வியை வலியுறுத்தினார் ; சமத்து வத்திற்காகப் போராடினார்.
* கேள்விகளைக் கண்டு அஞ்சியதில்லை; பொறு மையாக விளக்கம் தந்திருக்கிறார்; கண்ணம் கிழியும் வண்ணம் பதிலையும் சொல்லியிருக்கிறார்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
* இது சுயமரியாதைக் கனவின் நீட்சி
* ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்தப் பல்க லைக்கழகத்தில்,
கல்வியை விளைய வைத்தார்;
பகுத்தறிவை விளைய வைத்தார்;
சுயமரியாதையை விளைய வைத்தார்;
இங்கு படித்து வெளியேறிய பிள்ளைகள் உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
* கூலித் தொழிலாளியின் மகளுக்கும் ,ஏழைத் தொழி லாளியின் மகனுக்கும் தான் இந்தப் பல்கலைக்கழகம்.
ஆசிரியர் அய்யா அவர்களின் ஆற்றல்
* இந்தப் பல்கலைக்கழகம் எங்கள் ‘தகைசால் தமிழர்’ வேந்தர் வீரமணி அவர்களின் வாழ்நாள் சாதனை.
* முள்ளும் புதருமாய் ,மேடும் பள்ளமுமாய் கிடந்த நிலத்தில் கல்விச்சோலையை உருவாக்கி இருக்கிறார் வீரமணி.
* இந்த இடத்தைப் பார்த்து மற்றவர்கள் எள்ளி நகையாடிய போது, வார்த்தைகளால் பதில் சொல்லாமல், கரத்தால் பதில் சொல்லி இருக்கிறார்; அதுதான் இந்தப் பல்கலைக்கழகம்.
* ஆசிரியர் வீரமணி அறிக்கை எழுதினால் தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் மனப்பாடம் செய்யும்.
*அவர் மேடையில் பேசுகிறார் என்றால் ஊடகங்கள் உற்றுப் பார்க்கும்.
* அவருக்குப் பெரிய அதிகாரம் இல்லை ; தமிழ்நாட்டு ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை ; ஆனால் இந்திய அரசியல் அவரைச் சுற்றி வருகிறது.
* இந்தச் சமூகத்தையே புரட்டிப் போட்ட பேச்சாளர் நீங்கள்.
சம்பவங்கள்
* உயர் ஜாதி மக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றவர்கள் குடியிருக்கின்ற தெருவில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் நடந்து செல்கின்ற போது இடுப்பில் தகர டப்பாவை கட்டிக்கொண்டு போக வேண்டும்- எச்சிலைத் துப்புவதற்காக. இதனை எழுதி இருப்பவர் அம்பேத்கர்.
* திருமண வீட்டில் சாப்பிட்டதற்காக சாட்டையால் அடிக்கப்பட்ட சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடை பெற்றிருக்கின்றன. அதனைத் துடைத்து நல்லதொரு சமுதாயத்தை அமைத்தவர்கள் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ,முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஆசிரியர் வீரமணி.
கவிப்பேரரசு பேசப்பேச மாணவர்கள் கூர்ந்து கேட்டு மகிழ்ந்தனர். தேனுண்ட வண்டாயினர். மாண வர்களின் இதயத்தை வென்று இருக்கைக்குத் திரும்பிய கவிப்பேரரசு அவர்களுக்கு, வேந்தர் அவர்கள் எழுந்து நின்று கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்தார்.
* வேந்தர் அய்யா அவர்களின் உரை இலக்கு நோக்கியே பயணித்தது. ஆசிரியர் அய்யா அவர்கள் 25,000 கூட்டங்களுக்கு மேல் பேசியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் தகுந்த தயாரிப்புடனே மேடை ஏறுவார்.
தமிழ்நாடு அரசு புரட்சிக் கவிஞரின் பிறந்தநாள் விழா, தமிழ் வார விழாவாக அய்ந்து நாட்கள் கொண்டா டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
புரட்சிக்கவிஞருடன் பழகிய வேந்தர் அய்யா பல்கலைக்கழகத்தில் உற்சாகமாய் விழா எடுத்தார்.
* புரட்சிக் கவிஞரின் கருத்துகளைப் பரப்புவது,
* கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை விழாவிற்கு அழைப்பது,
* ‘ஞானபீட விருது’ பெற்றமைக்காகப் பாராட்டிப் பெருமைப்படுத்துவது,
* பொறாமை குணம் கொண்டவர்களின் எதிர்ப்பு களை முறியடிப்பது
என்பது விழாவின் நோக்கமாக முடிவு செய்து கொண்டார். அந்த இலக்கு நோக்கியே அவருடைய உரை அமைந்திருந்தது.
தமிழர் தலைவர் தம்முடைய உரையில் எடுத்தாண்ட புரட்சிக் கவிஞரின் இரண்டு கவிதைகளும் மிகச் சிறப்பானது. பலரும் அறியாதது; எவரும் எடுத்தாளாதது; அரியது.
கவிஞர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட வர்கள் என்பதற்குச் சான்றாக அவர் எடுத்தாண்ட கவிதை,
‘இந்த நூற்றாண்டு’
என்ற கவிதையாகும்.
இந்தக் கவிதையின் மூலம் புலனாகும்
கவிஞரின் தொலைநோக்குப் பார்வை ,
தந்தை பெரியார் மீது கொண்டிருக்கின்ற அளப்பரிய அன்பு இவற்றை நுட்பமாய் எடுத்துரைத்தார்.
‘நிலவில் மாந்தர் இறங்கும்நாள் நெடுநாள் ஆகாது’ என்று உரைத்த பாரதிதாசன்,
நிலவுக்குப் பெரியாரைக் கொண்டு சென்றதையும், ஒற்றுமை, அமைதி ஓங்க வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் மாணவர்களுக்குத் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.
‘‘பாரதிதாசன், மனித குலப் பார்வை , உலகப் பார்வை கொண்டவர்’’ என்று மாணவர்களிடையே அழுத்தம் திருத்தமாக உரைத்தார் வேந்தர்.
ஆற்றலும் சிந்தனை வளமும் கொண்ட கவிப்பேரரசு அவர்கள் ‘ஞானபீட விருது’ பெற்றார்.
புகழ் வரும் போது பக்க விளைவு வரும். சிலர் பொறாமையால் சேற்றை வாரி இறைத்தார்கள்.
புரட்சிக் கவிஞர் உணர்வு என்னும் தலைப்பில், தமிழர்களின் பொறாமைக் குணத்தைச் சொல்லோவியமாக் தீட்டியக் கவிதையை, இந்த இடத்தில் வேந்தர் அவர்கள் பொருத்தமாய் இணைத்துரைத்தார்கள். கவிதையையும் விழா நாயகரையும் ஒப்பிட்டு ஆற்றிய திறன் அறிவார்ந்த அவையை வியக்க வைத்தது.
‘‘தம்மில் ஒருவன் உயர்வு தமக்கு வந்ததாக எண்ணாத தமிழர்களால் இடையூறு நேரும்’’ என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளை எடுத்துரைத்தார். தமிழர்களுக்குத் துணை ‘தூய்மையான ஒற்றுமை’ என்ற வரிகளையும் சுட்டிக்காட்டினார்.
பொறாமை வெடி மருந்து சாலை.
‘‘பொறாமைப்படுபவர்கள் வையத்தில் ஒழுக்கமில்லா கூட்டம் என்று ஓங்கி அடித்தவர் புரட்சிக் கவிஞர்.
உங்களுக்கு கருஞ்சட்டைக் கவசம் இருக்கிறது. அடிக்கும் போது பந்து எழும்புவது போல வீறு கொண்டு எழுங்கள் என்று சொல்வதற்குத்தான் புரட்சிக்கவிஞர் விழாவை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகிறோம்’’ என்று உணர்ச்சிப் பிழம்பாய் உரைத்தார் வேந்தர்.
இந்த நாள் என் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்று கவிப்பேரரசு சொல்ல, இந்த நாள் பல்கலைக்கழக வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்று பதிலுரைத்தார் வேந்தர். ஒருவரை ஒருவர் பெருமைப்படுத்துவது தானே தந்தை பெரியார் கற்றுத் தந்த பாடம் . அதன் செயல்வடிவம்தான் புரட்சிக்கவிஞர் விழா .
&&&
புரட்சிக் கவிஞரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஃபிராய்டு அரங்கத்தில் 2026 ஏப்ரல் 29ஆம் தேதி பட்டிமன்றம் நடைபெற்றது.
புரட்சிக் கவிஞர் கவிதைகளில் ஓங்கி ஒலிப்பது ‘தமிழ் உணர்வே’ என்னும் தலைப்பில் முனைவர் ஹரிக் குமரன், மாணவி ரோஸ்லின் சகாயம் உரையாற்றினர்.
புரட்சிக் கவிஞர் கவிதைகளில் ஓங்கி ஒலிப்பது ‘சமூகப் புரட்சியே ‘என்னும் தலைப்பில் முனைவர் அனுராதா, மாணவர் பிரவீன்காந்த் பேசினர்.
‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்னும் தலைப்பில் லீ கார்பூசியர் அரங்கில் நடைபெற்ற கவியரங்கிற்கு வல்லம் தாஜீபால் தலைமை வகித்தார்.
‘பெண்ணுரிமை பெற்ற உலகம் ‘ என்ற தலைப்பில், பேராசிரியர் உமா மகேஸ்வரியும்,
‘மூடநம்பிக்கையற்ற உலகம் ‘எனும் தலைப்பில் மாணவி சிறீநிதியும்,
‘போரற்ற உலகம் ‘ எனும் தலைப்பில் பேராசிரியர் சாம்ராஜாவும்,
‘சமத்துவ உலகம் ‘ என்னும் தலைப்பில் மாணவி முத்தரசியும் கவிதை பாடினார்கள்.
புரட்சிக் கவிஞரின் பிறந்தநாளையொட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பல்வேறு போட்டிகளை நடத்தியது. விழாவில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட விவரம்.
அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ,
முதல் பரிசு: திருவாரூர், திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவி தமிழரசி,
இரண்டாம் பரிசு: தஞ்சாவூர், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி மாணவி லாவண்யா,
மூன்றாம் பரிசு: திருவாரூர், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவி தீப தர்ஷினி.
அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில்,
முதல் பரிசு: திருச்சி, அரசு சட்டக் கல்லூரி மாணவி காவியா ,
இரண்டாம் பரிசு: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவி வைசாலி,
மூன்றாம் பரிசு: தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மதுமிதா.
அனைத்துக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற தனி இசைக்கருவி இசைத்தல் போட்டியில்,
முதல் பரிசு: தஞ்சாவூர் , ராஜா சரபோஜி அரசு கல்லூரி மாணவர் ஆண்டனி கீட்ஸ்,
இரண்டாம் பரிசு: தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஜோஸ்வா.
அனைத்துக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற குழுவாக இசைக்கருவி இசைத்தல் போட்டியில்,
முதல் பரிசு: தஞ்சாவூர், அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சஞ்சீவ் ,ரோஷன்
அனைத்துக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற தனி நடனப் போட்டியில்
முதல் பரிசு: தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி,
இரண்டாம் பரிசு: தஞ்சாவூர், ராஜா சரபோஜி அரசு கல்லூரி மாணவி வாணிசிறீ,
மூன்றாம் பரிசு: தஞ்சாவூர், மருது பாண்டியர் கல்லூரி மாணவி அருள்ஜோதி
அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற குழு நடனப் போட்டியில்,
முதல் பரிசு: தஞ்சாவூர் குயின்ஸ் கல்லூரி மாணவி பாரதி,
இரண்டாம் பரிசு: தஞ்சாவூர் , அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஷாலினி
அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தனிப் பாட்டு போட்டியில்,
முதல் பரிசு: திருச்சி, அரசு சட்டக் கல்லூரி மாணவி யாழினி
இரண்டாம் பரிசு: திருவாரூர் , திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவி அபிதா,
மூன்றாம் பரிசு: தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மாதேஷ்
குழுப் பாட்டு போட்டியில்,
முதல் பரிசு: தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் இண்டனி ஆண்ட்ரோ
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்,
முதல் பரிசு: மாணவி தாரிணி,
இரண்டாம் பரிசு: மாணவி இவாஞ்சலின்,
மூன்றாம் பரிசு: மாணவி ஷாலினி,
பேச்சுப் போட்டியில்,
முதல் பரிசு: மாணவி சிறீநிதி,
இரண்டாம் பரிசு: மாணவி முத்தரசி,
மூன்றாம் பரிசு: மாணவி தாரிணி.
இளங்கலை, கட்டட எழிற்கலைத்துறை, இரண்டாம் ஆண்டு மாணவி கியூபா வரவேற்புரையாற்றினார். இளங்கலை, இரண்டாமாண்டு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை மாணவர் தங்கமணி நன்றியுரை கூறினார். இளங்கலை மூன்றாமாண்டு அரசியல் அறிவியல் துறை மாணவியர்கள், யாழினி மற்றும் அனு விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.
விழா ஏற்பாடுகளைப் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், மாணவர் மற்றும் நிர்வாக மய்யம் & மொழிகள் துறை ஏற்பாடு செய்திருந்தது.
