ஜபல்பூர், மே 3 மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனும் அடங்குவார்.
நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி 44 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று பலத்த சூறாவளி காற்றினால் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது பயணிகளுக்கு உயிர்காக்கும் கவச உடைகள் (Life Jackets) வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் அடங்குவர்: திருச்சி மாவட்டம்: காமராஜ் (38), அவரது மனைவி கார்குழலி (38), மகன்கள் தமிழ்வேந்தன் (5), புவிந்திரன் (10).
திருப்பூர் மாவட்டம் (தாராபுரம்): சவுபாக்கியா (42), இவரது மகள் இனியா (12), மகன் மயூரன் (8). இவர்களில் புவிந்திரன் மற்றும் மயூரன் உள்ளிட்ட 28 பேர் ஏற்கனவே பத்திரமாக மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்:
ராணுவ உதவி: ஆக்ராவிலிருந்து விமானம் மூலம் 20 ராணுவ நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குழுவினர்: மொத்தம் 200-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் (1.5.2026) அதிகாலை முதல் நடைபெற்ற தேடுதல் பணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தமிழ்வேந்தன் மற்றும் விராஜ் சோனி (6) ஆகிய இரு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஆற்றில் மூழ்கி காணாமல் போன காமராஜ் மற்றும் இனியா ஆகியோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
12 ரயில்வே கேட்டுகள் அகற்றம் – சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் திறப்பு!
சென்னை, மே 3 ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கோட்டத்திற்குட்பட்ட முக்கிய வழித்தடங்களில் இருந்த 12 லெவல் கிராசிங் (Level Crossing) கேட்டுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அகற்றப்பட்ட இந்த 12 ரயில்வே கேட்டுகளுக்கு மாற்றாக கீழ்க்கண்ட கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன:7 சுரங்கப்பாதைகள் 3 மேம்பாலங்கள் 1 கீழ்பாலம் சாலைப் போக்குவரத்து மாற்றம்
இந்த மாற்றத்தின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: ரயில் வரும் நேரங்களில் வாகனங்கள் நீண்ட நேரம் கேட்டுகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் எரிபொருள் மிச்சமாவதுடன், நேரமும் சேமிக்கப்படுகிறது.
விபத்து தடுப்பு
ஆளில்லா அல்லது ஆளுள்ள ரயில்வே கேட்டுகளில் நடக்கும் விபத்து அபாயங்கள் இதன் மூலம் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன.
கேட்டுகள் அகற்றப்படுவதால், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், காலதாமதமின்றி ரயில்களை இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த துரித நடவடிக்கை, புறநகர் மற்றும் தொலைதூர ரயில் போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு தேர்தல் 10 நாள் தாமதத்திற்குப் பின்
தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு!
தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு!
சென்னை, மே 3 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து 10 நாட்களாக நீடித்த மர்மம் விலகியது. அரசியல் கட்சிகளின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, 234 தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வ இறுதி வாக்குப்பதிவு பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று (2.5.2026) மாலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 4,87,98,833 ஆகும். இதன் முழு விவரம் பின்வருமாறு: மொத்த வாக்கு சதவீதம்: 85.10 சதவீதம் ஆண்கள்: 2,35,34,720 பெண்கள்: 2,52,59,596 மூன்றாம் பாலினத்தவர்: 4,517
தேர்தல் முடிந்த அன்றே தற்காலிகமாக 85.15 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு அது 85.10 சதவீதம் ஆகக் குறைக்கப்பட்டது. எனினும், பாலின வாரியான விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
“பீகாரில் 24 மணிநேரத்தில் வெளியிடப்பட்ட தரவுகள், தமிழ்நாட்டில் மட்டும் 10 நாட்கள் தாமதமாவது ஏன்? இதில் குளறுபடிகள் இருந்தால் நீதிமன்றத்தை நாடுவோம்.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கூறியிருந்தார் தொழில் நுட்ப வளர்ச்சியும் தேர்தல் ஆணையத்தின் நிலையும்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏ.அய். (செயற்கை நுண்ணறிவு) அசுர வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத் தில், வெறும் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட 10 நாட்கள் எடுத்துக்கொண்டது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கை, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் வாக்குப்பதிவு முடிந்த அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், வல்லரசு நாடாக உருவெடுக்கும் இந்தியாவில், இன்னும் பண்டைய கால நடைமுறையைப் பின்பற்றி வாக்கு விவரங்களை வெளியிடவே இவ்வளவு காலதாமதம் செய்வது தேர்தல் ஆணையத்தின் தோல் வியைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
