மும்பை, மே 3 மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற புதிய கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த கைப்பேசி உதிரிபாக வியாபாரி அப்துல்லா டோகாடியா (45), அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஸைனப் (13), ஆயிஷா (16) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மட்டன் பிரியாணி சமைத்து உறவினர்களுக்கு விருந்தளித்துள்ளனர். விருந்து முடிந்து நள்ளிரவில் தர்பூசணி பழத்தையும் அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அதிகாலையில் நான்கு பேருக்கும் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
உறுப்புகள் பச்சையாக மாறிய மர்மம்
ஆரம்பத்தில் இது தர்பூசணியால் ஏற்பட்ட உணவு நச்சு (Food Poisoning) என்று கருதப்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலியான நால்வரின் இதயம், மூளை மற்றும் குடல் பகுதிகள் வழக்கத்திற்கு மாறான பச்சை நிறத்திற்கு மாறியிருந்தது கண்டறியப்பட்டது. சாதாரண உணவு நச்சுப்பாதிப்பால் உறுப்புகள் இவ்வாறு மாற வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடயவியல் சோதனையில், அப்துல்லா டோகாடியா வின் உடலில் வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க ‘மார்பின்’ மருந்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், தர்பூசணியை விட வீரியம் மிக்க ஏதோ ஒரு வேதிப்பொருள் அல்லது விஷம் உடலில் கலந்ததே மரணத்திற்கு நேரடி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரியாணி பாதிப்பில்லை
அவர்களுடன் பிரியாணி சாப்பிட்ட மற்ற உறவினர்கள் நலமாக இருப்பதால், பிரியாணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
தர்பூசணி மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், தர்பூசணிக்கும் மரணத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி பரவியதால் மும்பையில் தர்பூசணி விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. ஆனால், இது திட்டமிட்ட கொலையா அல்லது குடும்பத் தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இறுதி வேதியியல் பகுப்பாய்வு முடிவுகள் வந்த பின்னரே முழுமையான உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
