விஷ உருண்டையின்மீது தேன் தடவப்பட்டு இருக்கிறது;
அதனை அம்பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது!
தஞ்சை, மே 2 ‘‘நான் முதலில் சொன்னது போன்று, விஷ உருண்டையின்மீது தேன் தடவப்பட்டு இருக்கிறது. அதனை அம்பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் ஏமாற்றலாம்; தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. காரணம், தமிழ்நாடு பெரியார் நாடு’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சையில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர் – கவிப்பேரரசு
கடந்த 30.4.2026 அன்று தஞ்சையில் செய்தியாளர்க ளிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் – கவிப்பேரரசு வைரமுத்து ஆகி யோர் அளித்த பேட்டி வருமாறு:
கோட்டைக்குப் போகவேண்டியவர்கள் யார்? மீண்டும் காட்சிக்குப் போகவேண்டியவர்கள் யார்?
செய்தியாளர்: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இன்னும் மூன்று நாள்கள்தான் இடையில் இருக்கின்றன. மக்கள் கணிப்பு ஏற்கெனவே தெளிவாக இருக்கிறது. வெற்றி பெறவேண்டியவர்கள் யார்? கோட்டைக்குப் போகவேண்டியவர்கள் யார்? மீண்டும் காட்சிக்குப் போக வேண்டியவர்கள் யார்? என்பதை மக்கள் தெளிவாக முடிவு செய்துவிட்டார்கள்.
ஏற்கெனவே நம்முடைய மு.க.ஸ்டாலின் அமைத்த பாதை என்பது, நேராகக் கோட்டைக்குப் போகின்ற பாதை. மக்கள் செல்வாக்கு என்ற பேராதரவோடு அவர்கள் கோட்டைக்குச் செல்லுகிறார்கள்.
மக்களைப் பார்த்து நாங்கள் கணித்திருக்கின்றோம். அந்த உணர்வோடுதான் நாங்கள் இதைச் சொல்லுகிறோம்.
வேறு யார், என்ன சொன்னாலும், அவையெல்லாம் கலைய வேண்டிய கனவுகள் – கலையும் கனவுகளாகும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – விட்ட இடத்திலிருந்து, தொட்ட இடத்திலிருந்து
புதிய சாதனைகளைத் தொடருவார்!
செய்தியாளர்: மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்தால், மக்களுடைய எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?
கவிப்பேரரசு வைரமுத்து: ‘மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்தால்’ என்ற கேள்விக்குறியைவிட, அமையப் போகிறது என்று நம்பிக்கையாகச் சொல்லுங்களேன்; அப்படிச் சொன்னால், நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
வாக்குப் பதிவிற்கு மறுநாள், அறிவால யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, பொன்னாடை போர்த்தினேன்.
பொன்னாடையை விரித்துக்கொண்டே நான் சொன்ன சொற்கள், இப்போதும், என் நாவிலும், செவியிலும் இருக்கின்றன.
‘‘உங்கள் உழைப்பும், சாதனையும் உங்கள் கனவை நனவாக்கும்’’ என்று சொன்னேன்.
அது நனவாகக் கூடிய சூழல் இருப்பதாகக் கருதப்படுகிறது. மே 4 ஆம் தேதி, அது உறுதிப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
‘திராவிட மாடல்’ ஆட்சி நீளும்; நீண்டால், அவர் விட்ட இடத்திலிருந்து, தொட்ட இடத்திலிருந்து புதிய சாதனைகளைத் தொடருவார்.
எனக்கு ஒரு நம்பிக்கை, தமிழ்நாட்டுத் தாய்மார்கள் தங்கள் நன்றியைக் காண்பிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினர்.
எந்தத் தேர்தல்களிலும் இல்லாத அளவிற்கு, இந்தத் தேர்தலில் ஒரு திருப்பத்தைக் கண்டோம்!
கல்லக்குறிச்சியில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
நேற்று (1.5.2026) காலை கல்லக்குறிச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி வருமாறு:
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு இடையில் இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரிடையாகச் சந்தித்து வந்தவர்களில் நானும் ஒருவன். மக்களைப் பொறுத்தவரையில், எந்தத் தேர்தல்களிலும் இல்லாத அளவிற்கு, இந்தத் தேர்தலில் ஒரு திருப்பத்தைக் கண்டோம்.
என்ன அந்தத் திருப்பம் என்று சொன்னால், தாய்மார்கள், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஆர்வத்தோடு ஏராளமாகத் திரண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், உரையை உள்வாங்கி எதிரொலித்த முறை இருக்கிறதே, அதிலிருந்தே அவர்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம்.
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளால் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள். தங்களுடைய நன்றியுணர்ச்சியை காட்டக்கூடிய அளவில் அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதையெல்லாம் நேரில் பார்த்து தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெற்றோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல்மிகு ஆளுமையினால் பயன்பெற்ற மக்கள்!
தாய்மார்களைப் பொறுத்தவரையில், பெருமளவில் வாக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில், எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல்மிகு ஆளுமையினால் பயன்பெற்ற மக்கள், மீண்டும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, அக் கூட்டணியைத்தான் ஆதரித்து, கோட்டைக்கு அனுப்பவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஆகவே, ஆட்சியில் அமர வைக்க வேண்டியவர் களை, ஆட்சியில் அமர வைப்பார்கள். காட்சிக்கு அனுப்பவேண்டியவர்களை, காட்சிக்குத் திரும்ப அனுப்புவார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்!
செய்தியாளர்: ஒன்றிய பா.ஜ.க. அரசினர், மக்களுக்கு நல்லது செய்வது மாதிரி செய்கிறார்கள், ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் அப்படியில்லையே?
தமிழர் தலைவர்: நீங்களே சொல்கிறீர்கள், ‘‘நல்லது செய்வது மாதிரி செய்கிறார்கள்’’ என்று. ஆகவே, நல்லது இல்லை என்று உங்களுக்குத் தெரிகிறது.
நான் முதலில் சொன்னதுபோன்று, விஷ உருண்டையின்மீது தேன் தடவப்பட்டு இருக்கிறது. அதனை அம்பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் ஏமாற்றலாம்; தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
காரணம், தமிழ்நாடு பெரியார் நாடு! இங்கே அடிமைகளுக்கு இடமில்லை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதனை அமளிக் காடாக்க, மதவெறியையும், ஜாதி வெறியையும் ஏற்படுத்தி, அதன்மூலம் கலவரங்களை உண்டாக்கி, அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை மறைமுகமாகச் செலுத்தலாம் என்பது அவர்களுடைய மறைமுகத்திட்டம். அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது.
எந்தக் கனவு நிறைவேறுகிறது என்பதுதான் மிக முக்கியம்!
செய்தியாளர்: கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாகப் போகும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், எந்தக் கனவு நிறைவேறுகிறது என்பதுதான் மிக முக்கியம்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
