மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் நல்லாட்சி தொடரும்! மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

3 Min Read

சென்னை, மே 2- உழைப்பிற்கான பலன் வரும் 4ஆம் தேதி பெற இருக்கிறோம் என்றும், திமுகவின் நல்லாட்சி தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று (1.5.2026) தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச் சின்னத்தில் சிவப்பு சட்டை அணிந்து வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

உரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்த மே முதல் நாளைச் சென்னையில்தான் நாம் கொண்டாட தொடங்கி இருக்கிறோம். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் தான் முதன்முதலாக சென்னை மாநகரத்தில் இந்த மே முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம், தொழிலாளர்களின் உரிமை, அதேபோன்று இன்றைக்கு நம்முடைய திமுக தோழர்கள் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலன் வரும் 4ஆம் தேதி பெற இருக்கிறோம். அதில் துளி அளவுகூட மாற்றமில்லை. இதை ஏதோ கருத்துக் கணிப்பின் அடிப்படையில் நான் சொல்கிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. திமுக தோழர்களை நான் உணர்ந்து கொண்டிருக்கும் காரணத்தினால் அந்த கருத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேனே தவிர வேறொன்றும் இல்லை.

நேற்று (1.5.2026) மே முதல் நாளை, தொழிலாளர்களுக்குரிய மரியாதையையும், மதிப்பையும், அவர்களது உரிமையையும் போற்றும் வகையில் நாம் கொண்டாடினோம். மே முதல் நாள்- அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், உடனடியாக இந்நாளை அரசு விடுமுறையாக அறிவித்துக் கொண்டாட தொடங்கினார். ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது மட்டுமல்லாமல், அந்த விடுமுறை நாளைச் சட்டமாக்கித் தந்தவர் அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கலைஞர். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மே முதல் நாள் அரசு விடுமுறையாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

இதனை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கலைஞர் எடுத்துச் சொன்னார். நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் எல்லாம் இதற்காகக் குரல் எழுப்பினார்கள். அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் அதனை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்கும் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்து, அதுவும் இன்றைக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலான கொள்கையோடுதான் நாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தேசிய நிகழ்வுகள்

அது தொடரும், தொடரும், தொடரும் என்ற உறுதியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மே நாள் நினைவுப் பூங்காவை கலைஞர் தான் உருவாக்கி தந்தார். இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமும் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டதுதான். அது எப்படி அமைய வேண்டும் என்பதற்காகப் பலமுறை இந்த இடத்திற்கு நேரடியாக வந்து, அனைத்தையும் சரிசெய்து உருவாக்கித் தந்தார். எதற்காக இதை குறிப்பிடுகிறேன் என்றால், தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதும் கலைஞர் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *