பழகு முகாமின் மூன்றாம் நாள்… தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியைச் சொல்லும் ‘அ’ முதல் ‘ஃ’ வரையிலான இனியனின் ஏழு சிரிப்பு விளையாட்டு! சிரித்து கொண்டாடித் தீர்த்த பெரியார் பிஞ்சுகள்!

5 Min Read

தஞ்சை, ஏப்ரல் 30- தமிழ் மொழியின் தொன்மையை; பரிணாம வளர்ச்சியை; அருமையை; பெருமையை; சொல்லும், சமூக செயற்பாட்டாளர் இனியனின், “ஏழு சிரிப்பு விளையாட்டு”, பெரியார் பிஞ்சுகளின் நெஞ்சம் கவர்ந்த விளையாட்டாக மாறிவிட்டது! ஒருங்கிணைப்பாளர்களுடன் சேர்ந்து, இந்த வகுப்பை சிரித்து சிரித்து கொண்டாடித் தீர்த்து விட்டனர்.

‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகழ்நிலைப் பல்கலைக்கழகம்) இரண்டும் இணைந்து ஏப்ரல் 27 முதல் மே 1 வரையிலான 5 நாட்கள் நடத்தும், பழகு முகாமின் மூன்றாம் நாள் (29.04.2026) சென்றதே தெரியாமல் கடுகிக் கடந்துவிட்டது. அதிகாலை நடைப் பயிற்சி, கராத்தே, யோகா, சிலம்பம் ஆகிய பயிற்சிகள் முடிந்து தயாராகி முதல் வகுப்பாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்றனர்.

தஞ்சாவூர் “அன்னை சத்யா விளையாட்டு பன்நோக்கு அரங்கத்தில்” உள்ள, ‘குந்தவை நீச்சல் குளத்தை’ காலை 9:30 மணிக்கு அடைந்தனர். மாணவர்களை குளத்தில் இறக்கி விடுவதற்கு மட்டும்தான் ஒருங்கிணைப்பாளர்களின் சம்மதம் தேவைப்பட்டது. அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரம் முடிந்த பிறகும், மேலே ஏறுவதற்கு பெரியார் பிஞ்சுகளின் அனுமதி அவசியம் தேவைப்பட்டுவிட்டது.

அவர்கள் மேலே ஏறுவதற்கு மறுத்து மீண்டும், மீண்டும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு போக்குக் காட்டி விட்டு, நீச்சல் குளத்துக்குள்ளேயே, தண்ணீரைத் துளைத்து, திளைத்துக் கொண்டிருந்தனர். பெரும்பாடு பட்டு அவர்களை வெளியேற்றிக்கொண்டு வரவேண்டியிருந்தது. மேலே வந்த பிறகும், அது குறித்த மகிழ்ச்சியான எண்ணங்களை பகிர்ந்து கொண்டே வந்தனர்.

மறுபடியும் மாணவர்கள் பழகு முகாம் வளாகத் துக்குள் அழைத்து வரப்பட்டு, 11:30 மணிக்கு, அறிவு மய்யம் (Knowledge Center) கட்டட வளாகத்தினுள் இருக்கும், “தானியங்கித் தொழில் நுட்ப” துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இயந்திரப் பூனை, இயந்திர நாய், ட்ரோன் மற்றும் அய்ட்ராலிக் இயந்திரங்கள் பணியாற்றும் முறைகள் ஆகியவற்றைப் பற்றிப் பிஞ்சுகளுக்கு அத்துறையின் பொறுப்பாளர் சிலம்பரசன் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, “பெரியார் உலகம்”, “அர்ஜுன் சிங் நூலகம்” ஆகியவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தலைமை நூலகர் நர்மதா மற்றும் அரசியல் அறிவியல் (Political Science) பேராசிரியர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு நூலகத்தின் அருமை, பெருமைகளை விவரித்தனர்.

மதிய உணவுக்குப் பிறகு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் இருக்கும், (சிக்மண்ட்) ஃபிராய்டு அரங்கத்தில், ஏற்கெனவே பிஞ்சுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மண் உண்டியலை வண்ணமயமாக்கவும், அவரவர்களின் எண்ண மயமாக்கவும் அனுமதிக்கப்பட்டது. மிகுந்த ஈடு பாட்டுடன் அந்தப் பணியை செய்து முடித்தனர். அதே சமயத்தில், தஞ்சை வேர் அறுவை சிகிச்சை மற்றும் பல் சீரமைப்பு மய்யத்திலிருந்து வருகை தந்திருந்த மருத்துவர் அருண்குமார், பெரியார் பிஞ்சுகளுக்கு பல் பரிசோதனை செய்து, ஆலோசனைகளை எழுத்து மூலம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர் இனியனின் “ஏழு சிரிப்பு விளையாட்டு” எனும் ஒரு புதுமையான விளையாட்டு நடைபெற்றது. ‘அ’ முதல் ‘ஃ’ வரை இந்த விளையாட்டு அமைந்திருந்தது. இடைவெளி இல்லாமல் சிரிக்க வைக்கும்படியாக இவ்விளையாட்டு இருந்தது. விளையாட்டு முடிந்த பிறகு, “உலகின் முதல் மொழி ஓசை தான். காற்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஓசை இருக்கும். அமீபா முதல் ஹோமோ சேப்பியன் வரை, ஓசைகளைப் பயன்படுத்தினர்.

ஓரிடத்தில் கூடி வாழ்ந்த போது, அந்த ஓசையை ஒழுங்கு படுத்தினர். அதுதான் மொழி! அதற்கு வடிவம் தந்தனர். அதுதான் எழுத்து!” என்று, இவ்வகுப்பில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியையும் சேர்த்து கற்றுக் கொடுத்தார். இந்த வகுப்பில், ஒருங்கிணைப்பாளர்களையும் சேர்த்து விளையாடியது பெரியார் பிஞ்சுகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தது. இதில் பெரியார் பிஞ்சுகள் மிகச் சிறப்பாக பங்கெடுத்து மகிழ்ந்தனர்.

மாலை சிற்றுண்டிக்கு பிறகு, மறுபடியும், கட்டட எழிற்கலை வளாகத்தில் உள்ள லீ கார்பூசியர் அரங்கத்திற்கு பெரியார் பிஞ்சுகள் அழைத்து வரப் பட்டனர். அங்கு சென்னையிலிருந்து வருகை தந்திருந்த அறிவரசன், “எல்லாம் அறிவியல்” என்ற கருத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் அறிவியலையும், கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சிந்தனையும் பயன்பாடு இல்லாமல் இருப்பதைப் பற்றியும், எளிய முறையில்; குறைந்த விலையில் கண்டுபிடிப்புகளை பெரியார் பிஞ்சுகளும் செய்யலாம்! என்ற ஊக்கத்தையும் கொடுக்கும் படியாக இந்த வகுப்பு அமைந்திருந்தது. செய்முறையின் போது மாணவர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார்கள். அவர்களும் அதில், உற்சாகத்துடன் ஈடுபட்டார்கள். “இந்த செய்முறைகளை சோதனைச் சாலையில் மட்டுமே செய்ய வேண்டும். வீட்டில் தனியாக முயற்சி செய்யக் கூடாது” என்று, அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் பிஞ்சுகளிடம், பணியின் காரணமாக பிரியா விடை பெற்றுச் சென்றார். பின்னர், கழகத்தின் பொதுச்செயலாளரும், பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான வீ.அன்புராஜ் அவர்கள் வருகை தந்து, மாணவர்களுடன் அளவளாவினார். அத்துடன், அவரும் அந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து மகிழ்ந்து, மகிழ்வித்தார்.

பிறகு, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பிஞ்சுகளிடம் இருந்த, ‘பேய்’ குறித்த அய்யங்களைப் போக்கும் வண்ணம், அவர்களுடன் ஓர் உரையாடலை நடத்தினார். அதைத்தொடர்ந்து, பெரியார் பிஞ்சுகள் இரவு உணவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவரவர் அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். அதன் பிறகும், அவர்கள் அறைக்குள் வீட்டுப்பாடம் எழுதுவதற்கும், நண்பர்களுடன் விளையாடுவதற்கும் நேரத்தை செலவிட்டு, நள்ளிரவுக்குப் பிறகே உறங்கத் தலைப்பட்டனர். இந்த 2026 பழகு முகாமில், பெற்றோர்களை நினைத்து அழும் குழந்தைகள் ஏறக்குறைய இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், பழகுமுகாமின் வளாகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்த்தி சரவணன், பேராசிரியர்கள் தமிழ்வாணன், சத்யா, இளங்கோவன், சந்திரகுமார் பீட்டர், இளங்கோ மற்றும் அகிலா, சிநேகா, தீர்த்தனா, அம்பிகா, இவாஞ்சலீன், வசீமா, விக்னேஷ்வரி, பிரதீபா தேவி, பிரியா, மீனாட்சி, வைஸ்ணவி, ஹேமலதா, குளோரி விக்டோரியா, சுதி, கிருத்திகா ஆகிய குழு ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்று, 90 பிஞ்சுகளையும் வெளிப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *