சோழவரம் ஏரியிலிருந்து
புழல் ஏரிக்கு நீர் திறப்பு!
புழல், ஏப்.30 சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் நீர்மட்டம் சரிந்து வருவதைத் தொடர்ந்து, அதனைச் சரிசெய்யவும், வெயிலால் நீர் ஆவியாவதைத் தவிர்க்கவும் சோழவரம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அய்ம்பெரும் ஏரிகளில் (செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை) கடந்த வடகிழக்கு பருவமழையின் போது நல்ல நீர் இருப்பு இருந்தது. இருப்பினும், பராமரிப்புப் பணிகள் காரணமாக சோழவரம் ஏரியில் மட்டும் அதன் மொத்த கொள்ளளவில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நீர் சேமிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரிப்பதால், திறந்த வெளியில் இருக்கும் ஏரி நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க அதிகாரி கள் திட்டமிட்டனர். அதன்படி, சோழவரம் ஏரி நீரை புழல் ஏரிக்கு அனுப்பி, சென்னை குடிநீர் தேவைக்குப் பயன்படுத்த நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
அதிகாரிகளின் நடவடிக்கை
புழல் ஏரியின் நீர் இருப்பு 2 டிஎம்சி என்ற அளவிற்கும் கீழே குறைந்ததால், அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சோழவரம் ஏரியின் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 225 கன அடி நீர் புழல் ஏரிக்குத் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 187 கன அடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. “வெயிலால் தண்ணீர் ஆவியாகி வீணாவதைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த நீர் மாற்றத்தினால் புழல் ஏரியின் நீர்மட்டம் குறை யாமல் சீராகப் பராமரிக்கப்படும். இதனால் கோடை காலத்தில் சென்னைக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும்.

