திருவாரூர், ஏப். 29- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பருத்தியூர் கிராமத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தொலைநோக்கி மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் நடைபெற்றது.
பருத்தியூர் கிராமத்தில் திராவிடர் கழக கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ. மோகன் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி அறிவியல் ஆசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் வான்நோக்கும் நிகழ்வு நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவரும் வானியல் கருத்தாளரும் ஆகிய கோ. பிளாட்டோ அப்பகுதியில் வசித்து வரும் மாணவ மாணவியர் இடையே தொலைநோக்கியைக் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டார். கோள்களின் எண்ணிக்கை கோள்களின் அமைப்பு செயல்படும் விதம் நட்சத்திரங்களின் அமைப்பு செயல்படும் விதம் கோள்கள் நட்சத்திரம் ஆகியவை கொண்டு மக்களிடையே உள்ள சோதிட நம்பிக்கை உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் குறித்தும் அம்மாவாசை, பவுர்ணமி, சந்திர கிரகணம் சூரிய கிரகணம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கான காரணங்களை விளக்கி கூறினார்.
தொலைநோக்கியை அப்பகுதியில் அமைத்து நேரடியாக பூமியின் துணைக்கோளான சந்திரனின் அமைப்பை மாணவியர் பார்க்கும்படி அமைக்கப்பட்டு சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடியாக அதீத ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ‘மந்திரமா தந்திரமா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சிகளை கொரடாச்சேரி ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர் அஜய் ஒருங்கிணைத்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

