இதோ ஒரு ‘‘புரட்சிக்கவிஞர்’’ – வாழ்த்தி வளருவோம், வாருங்கள்! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

2 Min Read

திராவிடம் தந்த ஒப்புவமையற்றக் கவிஞர் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 136 ஆவது பிறந்த நாள் இன்று!

இணையற்ற சாதனை ஆட்சியாம், நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியில், அந்த ஒப்பற்ற புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை ‘தமிழ் வளர்ச்சி நாளாக’ ஒரு வாரம் கொண்டாடி, அவர்தம் கொள்கை பரப்புத் திருவிழாவாக நடத்த தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஆணை வழங்கி, அகிலத்தாரின் பாராட்டையும், நன்றியையும் பெற்றது.

தன் புகழை நோக்காது, நம் கொள்கைத் தத்துவப் பகைவர்களை தயவு தாட்சண்யம் சிறிதுமின்றி அடையாளம் காட்டி, புதுமை இலக்கியம் படைத்த துணிச்சலின் மறுபெயரே ‘புரட்சிக்கவிஞர்’ என்பது!

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பட்ட றையின் கருத்துக் கருவாகி, கவிதை படைத்து, வீழ்ச்சியுற்ற தமிழ்நாட்டில், எழுச்சி ஏற்படுத்திய ஏந்தல் அவர்!

தந்தை பெரியார் அவர்களின் தனித்த பாராட்டுப் பெற்ற ஒரே கவிஞர் என்ற சிறப்புப் பெருமைக்கு உரியார் அவர் – எப்படி, பார்ப்போமா?

இதோ ஒரு கனல் கக்கும் கருத்துக் கவிதைச் சொடுக்கு:

‘‘எண்ணத்தின் தொடர்பே!’’ என்ற தலைப்பில்,

“குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்

கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,

குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்

கொல்வித்த தமிழர் நெஞ்சும்,

படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்

பார்ப்பனன் சூழ்ச்சி செய்து

படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட

பண்புசேர் தமிழர் நெஞ்சும்,

கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும்

கொள்கையால் வேத நூலின்

கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம்

கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,

துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே

தூயசுய மரியா தையாய்ச்

சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்

தூயஎன் அன்னை நிலமே!”

– இப்படிப்பட்ட எரிதழல் கவிதை ஊற்றுகளை

இவர்அன்றி எவர் படைப்பர்?

அவர் தந்த அந்தச் சுடர் அய்யா நம் அறிவு ஆசான்

அளித்த அறிவுச் சுடரினையே எதிரொலித்தது!

எனவேதான், அவரது பிறந்த நாள்

‘சோதாக்களுக்கும்’ சூடு போடும் நாள்!

சொரணையற்ற சோற்றுப் பிண்டங்களை

சொடுக்குமூலம் மாற்றும் நாள்!

எனவே, என்றும் திராவிடர் திருநாளை –

அகிலத் தமிழ் திருவிழாவாக

அனைவரும் கொண்டாடி மகிழ்வோம், வாரீர்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
29.4.2026 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *