காரைக்குடி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.கைவல்யம் (வயது 84) புதுக் கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26.4.2026) காலை 10.40 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவரது வாழ்விணையர் கலாவதி மாவட்ட மகளிரணி அமைப்பாளராகப் பணியாற்றியவர். கை.அறிவழகன், கை.அன்பழகன் என்ற இரண்டு மகன்களும், கை.மைவிழி என்ற மகளும் உள்ளனர். மறைந்த கைவல்யம் அவர்களது உடல் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாளை காலை 8 மணிக்கு அரசு மரியாதையுடன் உடற் கொடையாக வழங்கப்பட உள்ளது.
மறைந்த கைவல்யம் அவர்கள் சீரிய பகுத்தறிவாளர். தனது குடும்பத்தினர் அனைவரையும் தன் கொள்கை வழி நின்று உருவாக்கியவர். அரசுப்பணியில் இருந்த போதும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் என பல்வேறு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார். மறைவதற்கு முன்பு, குடும்பத்தினர் அனைவரிடமும் கொள்கைப்பூர்வமாக தனது உறுதியைத் தெரிவித்து விட்டு மறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

