தஞ்சாவூர், ஏப். 26– தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களில் பாதுகாப்பு கருதி, ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழ்க்கண்ட இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன:
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி: திருவிடைமருதூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதிகள். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி: திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு தொகுதிகள். பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி: பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்.
இந்த மய்யங்களில் உள்ள பாதுகாப்பு அறைகள் (ஸ்ட்ராங் ரூம்) பூட்டி சீல் வைக்கப்பட்டு, 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மய்யங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி முதல் வரும் மே 5ஆம் தேதி மாலை 6 மணி வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. “தடையை மீறி யாரேனும் ட்ரோன்களைப் பறக்கவிட்டால், அவர்கள் மீது சட்டவிதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

