மதுரை, ஏப்.26 திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்க வேண்டு மெனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர், காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பான காணொலிப் பதிவை பகிர்ந்ததற்காகத் தன் மீது பதியப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், மனுதாரருக்கு நிபந்தனை முன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
விசாரணையின் போது திருநங்கை களின் நிலை குறித்து நீதிபதி தனது கவலையை வெளிப்படுத்தினார்:
திருநங்கை ஒருவர் தீக்குளித்து உயி ரிழந்த சம்பவம் நீதிமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. திருநங்கைகளும் நம்மைப் போன்றவர்கள்தான் அவர்கள் சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
சமூகம் அவர்களைப் புறக்கணித்து வறுமைக்குத் தள்ளுவது ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வியாகும். அவர்களின் மரியாதை மற்றும் மாண்பு கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்க வேண்டும்.
வாழ்வாதாரம்: சுயதொழில் வாய்ப்புகள், நிலையான வாழ்வாதாரம் மற்றும் திருநங்கைகளின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட நலத்திட்டங்களை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும். இது தொடர்பான செயல்பாட்டு அறிக்கையை ஜூலை 26-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
