திருவனந்தபுரம், ஏப்.24 வெடி விபத்தில் 14 பேர் பலியானதை தொடர்ந்து இந்த ஆண்டு திருச்சூர் பூரம் திருவிழாவில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நெற்றிப்பட்டம் சூடிய யானைகளின் மேல் நடைபெறும் குடைமாற்றம் நிகழ்ச்சியையும், இன்று (24ம் தேதி) பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியையும் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திருச்சூரில் குவிவார்கள்.
இன்றும், 27ஆம் தேதியும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் விரல்கள், கைகள் உள்பட 32 உடல் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
வெடி விபத்தில் 14 பேர் பலியானதை தொடர்ந்து இந்த ஆண்டு பூரம் திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தலைமையில் திருச்சூரில் நடைபெற்றது. இதில் வாணவேடிக்கை நிகழ்ச்சியை இந்த ஆண்டு ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும் வழக்கமாக செய்யும் குடைமாற்றம் நிகழ்ச்சியை 1 மணிநேரத்திற்குப் பதிலாக 15 நிமிடங்களாக குறைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
வெடிவிபத்தில் 4 பேரை காணவில்லை என்று தெரியவந்தது. இதனால் நேற்றும் வெடி விபத்து நடந்த இடத்தில் உடல்களை தேடும் பணி நடைபெற்றது. அப்போது விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் குளத்தின் அருகே கருகிய நிலையில் ஒரு தலை கண்டு பிடிக்கப்பட்டது. இது காணாமல் போனவர்களில் யாராவது ஒருவரின் தலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

