மண்ணச்சநல்லூர் வீராங்கணை அரங்கநாயகி அம்மையாருக்கு நமது வீர வணக்கம்

1 Min Read

மண்ணச்சநல்லூரில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற திருமதி பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மாள் எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., (வயது 83) அவர்கள் இன்று (24.04.2026) அதிகாலை
3 மணியளவில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம்.

மறைந்த அந்த கழக வீராங்கனை அமைதியும், கொள்கை உறுதியும் கொண்டவர். உடல் நலம் குன்றிய நிலையிலும் துணிவோடு கழகப் போராட்டங்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொண்டவர்.

அவருடைய வாழ்விணையர் புலவர் இராமசாமி அவர்கள் சீரிய பகுத்தறிவாளர்; இருவரும் சிறந்த பெரியார் பெருந்தொண்டர்கள். அன்னை மணியம்மையாரிடமும்,  நம்மிடமும், கழகத் தோழர் களிடமும் மிகவும் வாஞ்சையுடன் பழகும் பெருமாட்டி.

துணிச்சலோடு, 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில்,  பெரியார் பன்னாட்டு அமைப்பும் – அமெரிக்க மனிதநேய அமைப்பும் இணைந்து நடத்திய பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு மகிழ்ந்தவர்; அவர் இயக்கப் புரவலரும்கூட.

சில வாரங்கள் முன்பு, ‘அவர் உடல்நலம் கவலைக்கிடம்’ என்று அறிந்த நான், இயக்கத் தோழர்களுடன் அவரது இல்லம் சென்றபோது, அதுவரை யாரையும் அடையாளம் காண சிரமப்பட்ட அவர், நான் சென்றவுடன்  – ‘ஆசிரியர் வந்திருக்கிறார் பாருங்கள்’ என்று உடன் இருந்தவர்கள் சொன்னவுடன், கண் விழித்து, ‘ஆசிரியர் அய்யா,  தலைவர்  வந்திருக்கிறார்’ என்று கூறி, (தான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த) ‘பெரியார் உலக’ நன்கொடைக்கான   காசோலை – ‘விடுதலை’ சந்தாவுக்கான காசோலை  இரண்டையும் என்னிடம் கையைப் பிடித்து மகிழ்ச்சியுடன் தந்தார்.

இயக்க மகளிர் அணியின் சிறப்புறு செயல் தோழர்களில் அவர் எடுத்துக்காட்டானவர். அவரது மறைவு அவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இயக்கத்திற்கும் ஒரு பெரும் இழப்பு!

அவருக்கு நமது ஆழ்ந்த இரங்கல் – குடும்பத்தாருக்கு ஆறுதல்.

நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

 

 

தலைவர்,
திராவிடர் கழகம்

24.04.2026

குறிப்பு: இன்று மாலை மருத்துவமனைக்கு உடற்கொடை அளிக்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *