சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதற்கான சட்டம் 2023ஆம்ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. 2023 செப்டம்பர் 20 அன்று மக்களவையிலும், அதே ஆண்டு அதே மாதம் 21ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. 28.9.2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று சட்டமாகி வி்ட்டது.
இந்த நிலையில், மீண்டும் எதற்காக மகளிர்க்கு 33 விழுக்காடுக்கான மசோதா கொண்டு வரப்பட்டது?
எல்லாம் பிஜேபிக்கே உரிய ‘நரித் தந்திர’ ஏமாற்று வேலைதான்.
அவர்கள் நினைத்திருந்தால் 2024 மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கான 33 விழுக்காட்டுப் பிரதிநிதித்துவத்தை செயல்படுத்தி இருக்கலாமே!
ஆதாயம் இன்றி காலை வைப்பார்களா இந்துத்துவ வாதிகள்!
எப்படியும் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வர பிஜேபி திட்டமிட்டிருந்தது.
அந்தத் திட்டத்தை மட்டும் சட்டமாக்கினால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து, வடமாநிலங்களில் (குறிப்பாக பிஜேபி ஆளும், உத்தரப்பிரதேசம், பீீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்) உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்து விடும்; அந்தப் பெரும்பான்மையைக் கொண்டே தாங்கள் நினைக்கும் இந்துத்துவா சட்டங்்கள் எல்லாவற்றையும் யாரும் கேள்வி கேட்க முடியாத வண்ணம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில், இதற்கான மசோதாவைத் தனியாகக் கொண்டு வந்தால் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்காது; பெரும்பாலும் தென் மாநிலங்கள் எதிர்த்து வாக்களித்து இந்த மசோதாவைத் தோற்கடித்து விடுவார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பிஜேபி – அதற்கே உரிய ‘நரித் தந்திர’த்துடன் ஒரு வேலையைச் செய்தது.
இந்த இரு மசோதாக்களோடு, மகளிருக்கு 33 விழுக்காடுக்கு வகை செய்யும் ஒன்றையும் இணைத்தனர். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில், ஒன்றைத் தெளிவாகக் கூறினார்கள். மகளிர்க்கு 33 விழுக்காட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்! (பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடும் அவசியம்) தொகுதி மறுவரை மசோதாவோடு இணைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினர்.
ஆனால், பிஜேபியின் ேநாக்கம் என்னவெனில், மசோதா வெற்றி பெற்றாலும் தங்களுக்கு அரசியல் லாபம்; தோல்வி அடைந்தாலும் லாபம்தான்! எப்படி என்றால், ‘‘மகளிர்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வாக்களித்துத் தோற்கடித்து விட்டனர்’’ என்று பிரச்சாரம் செய்யலாம் என்பதே பிஜேபியின் திட்டம்.
அதற்கு ஏற்ெகனவே பிஜேபி வகையறாக்கள் திட்டமிட்டுத் தயாராக இருந்தனர் என்ற குட்டு இப்பொழுது அம்பலமாகி விட்டது. ‘மசோதா தோல்வி அடைந்து விட்டது’ என்ற தகவல் வெளிவந்த அடுத்த கணமே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் போராட்டத்தில் இறங்கி விட்டனர்.
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இரவு 7:35 மணி அளவில் நடைபெற்றது. மசோதா தோற்று விட்டது. அடுத்த 15 நிமிடங்களிலேயே, அதாவது இரவு 8:00 மணிக்கே, பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது பா.ஜ.க.. எம்.பி-க்கள் கையில் வைத்திருந்த பதாகைகள் (Placards) தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
வெவ்வேறு வாசகங்கள், பல வண்ணங்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளுடன் குறைந்தது 50-க்கும் மேற்பட்ட பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
“அவை ஒத்திவைக்கப்பட்ட 15 நிமிட இடை வெளிக்குள் இவ்வளவு பதாகைகளை வடிவமைத்து, பிரிண்ட் செய்து, அட்டையில் ஒட்டி போராட்ட இடத்திற்குக் கொண்டு வந்தது எப்படி?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“இது என்ன 15 நிமிட மேஜிக்கா?” என்றும், “போராட்டம் நடக்கும் என்று முன்பே திட்டமிடப்பட்டு பதாகைகள் தயார் நிலையில் இருந்ததா?” என்றும் சமூகவலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த ‘மின்னல் வேக’ போராட்டத் தயாரிப்பு குறித்த ஒளிப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன.
பிஜேபியின் ‘இரட்டை வேட’ போலி முகத்திரை கிழிந்து தொங்குகிறது; இது நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் எதிரொலிக்கும்! எதிரொலிக்கும்!!

