கள்ளிப்பால் கொடுமையை ஒழித்துக் கட்டியது திராவிடர் இயக்கம்!
சாணிப்பால், சவுக்கடிகளின் ஆதிக்கத்தை ஒழித்தது பொதுவுடைமை இயக்கம்!
கீழ்வேளூர், ஏப்.20 ‘பொதுவுடைமை’ என்ற இலக்கை அடைய, ‘திராவிடர் இயக்கம்’ மற்றும் ‘பொதுவுடைமை இயக்கம்’ இந்த இரண்டும் தனித்தனி பாதைகளில் பயணம் செய்து கொண்டிருப்பதை நினைவூட்டும் வகையில், ஸநாதனத்தின் இடுப்பு எலும்பை முறிக்கும் வகையில், பிறந்த பெண் குழந்தைகளுக்கு, ‘‘தாய்ப்பாலுக்குப் பதிலாக கள்ளிப்பாலை ஊட்டிய கொடுமையை ஒழித்துக் கட்டியது திராவிட இயக்கம்’’ என்றும், ‘‘நில உடைமையாளர்கள் சாணிப்பாலையும், சவுக்கடியையும் ஆதிக்கத்தின் ஒரு வடிவமாகப் பயன்படுத்தியதை ஒழித்துக் கட்டியது பொதுவுடைமை இயக்கம்’’ என்றும் சுட்டிக்காட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
கீழ்வேளூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், போட்டியிடும் டி.லதா அவர்களை ஆதரித்துத்
தமிழர் தலைவர் ஆசிரியர் பரப்புரை
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், போட்டியிடும் லதா அவர்களை ஆதரித்து, நாகப்பட்டினம் திராவிடர் கழகத்தின் சார்பில், பரப்புரை செய்வதற்காக, நேற்று (19.05.2026) மாலை 4.30 மணிக்கு, கீழ்வேளூர் கச்சனம் சாலை கடை வீதியில் தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையேற்றார். ஒன்றியத் தலைவர் பாவா.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் இளமாறன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் பாவா ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன், தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனியப்பன், தொகுதி பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
முன்னதாக, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். கழகத் தலைவர் மாலை 4.55 மணிக்கு வருகை தந்தார். வேட்பாளர் தோழர் டி.லதா அவர்கள் கச்சனம் சாலை யிலேயே பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால், உரிய நேரத்திற்கு முன்னதாகவே நிகழ்விடத்துக்கு வந்துவிட்டார். கழகத் தலைவர் முன்னிலையில் வாகனத்தின் மீதிருந்து வேட்பாளர், அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், தனக்காக வாக்கு சேகரிப்பதற்காக வந்ததற்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தமது உரையில், ‘‘கடந்த முறை இங்கே தோழர் நாகை.வி.பி.மாலி அவர்களுக்கு பரப்புரை செய்வதற்காக வந்திருந்தேன். இந்த முறை தோழர் லதா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்ற முறை என்னை வரவேற்றது போலவே, இந்த முறையும் நாகை மாலிதான் முதலில் வந்து எங்களை வரவேற்றார். இதுதான் கட்சிக் கட்டுப்பாடு! இதுதான் கொள்கைப் பூர்வமான உணர்வு!’’ என்று நாகை மாலி அவர்களைப் பாராட்டிப் பேசினார்.
தொடர்ந்து, ‘‘கீழ்வேளூரில் இதுவரையிலும் ஆண்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள். இந்த முறைதான் ஒரு பெண் வேட்பாளராக வந்தி ருக்கிறார். அது மிகவும் வரவேற்கத்தக்கது’’ என்றார். தொடர்ந்து, 110 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி தான் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை தந்தது’’ என்பதைக் கூறி, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை திராவிடர் இயக்கம் செயல்படுத்திக் காட்டியிருப்பதை நினைவுபடுத்தினார். அதன் நீட்சியாக, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறைகளில், இன்றைக்கு 50% பெண்களுக்கு வழங்கப்பட்டு, ஆண்களுக்கு இணையாக அதிகாரங்களில் வீற்றிருப்பதை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெரும் சாதனையாக விவரித்தார். நூறாண்டுகளுக்கு முன்பு பெண்கள் பிறப்பதே கேள்விக்குறியாக இருந்தது. பெண் குழந்தை பிறந்து விட்டால், ‘‘அய்யோ.. பொட்டப் புள்ளையா?’’ என்று, பெண்களே உதட்டைப் பிதுக்கியபடி கேட்டு, தாய்ப்பாலுக்குப் பதிலாக கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சமுகக் கொடுமை நிலவியது. அதை ஒழித்துக் கட்டியது பெரியார் தான்! திராவிடர் இயக்கம் தான்!’’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய போது, மக்கள் தம்மையும் அறியாமல் கைகளை தட்டி அந்த கருத்துக்கு அங்கீகாரத்தை வழங்கினார். ‘‘நிலவுடைமையாளர்களால் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்ட சாணிப்பாலையும், சவுக்கடியையும் ஒழித்துக் கட்டியது பொதுவுடைமை இயக்கம்தான்!’’ என்று தொடர்ந்தபோது, திராவிடர் இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் இருக்கும் கொள்கைப் பூர்வமான இணைப்பை – பிணைப்பை – உணர்த்தும் வகையில், பலத்த கைதட்டல்கள் எழுந்து அடங்கியது.
வண்ணங்கள் மாறினாலும்
எண்ணங்கள் ஒன்றுதான்!
பின்னர், ‘‘இங்கே கருப்பு, சிவப்பு, நீலம் என்று வண்ணங்கள் மாறினாலும் எண்ணங்கள் ஒன்றுதான்!’’ என்பதையும் கூறி, அதன் மூலம் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் ஒற்றை இலக்கைத் தேடிச் செல்வதற்கு இரட்டைப் பாதைகளைப் பயன்படுத்துகின்றன என்பதை விளக்கினார். மேலும் அவர், ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விலாவாரியாக விளக்கியும், எதிர்க்கட்சிகளின் துரோகத்தையும், ஒன்றிய அரசின் ஓர வஞ்சனையையும் ஒப்பிட்டுக்காட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் லதா அவர்களுக்கு ‘அரிவாள் – சுத்தியல் – நட்சத்திரம்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து, நாகை மாவட்ட நகரச் செயலாளர் எம்.முத்துராஜா நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி முடித்து வைத்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்
எம்.எச்.ஜவாஹிருல்லாவுக்கு நாகப்பட்டினத்தில் வாக்குச் சேகரிப்பு!
கீழ்வேளூர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு அடுத்து நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி அருகில், நாகை திராவிடர் கழகத்தின் சார்பில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை ஆதரித்து, மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற தெருமுனை பரப்புரைக் கூட்ட நிகழ்ச்சிக்கு, கழகத் தலைவர் தனது பயணக் குழுவினருடன் புறப்பட்டார். சரியான நேரத்துக்கு கழகத் தலைவர் நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். அவருக்கு எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களின் தலைமையில், கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் இளமாறன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, நாகை மாவட்டத் தி.க. நகரத் தலைவர் செந்தில்குமார், மனிதநேய மக்கள் கட்சி பாட்ஷா, வி.சி.க. மாநிலச் செயலாளர் அறிவழகன், முஸ்லிம் லீக் சையத் அலி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னிலை ஏற்று கழகத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பளித்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் கவுதமன், கழகத் தலைவரின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, ‘‘அத்தகையவர் நமக்காக பரப்புரை செய்ய வந்திருப்பது பெரிய வாய்ப்பு’’ என்று பணிவுடனும், சுருக்கமாகவும் உரையாற்றி கழகத் தலைவரை சிறப்புரை வழங்க அழைப்பு விடுத்து அமர்ந்தார். முன்னதாக கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றியிருந்தார். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
அவர் தனது உரையை, ‘‘நாங்கள், இந்தியாவையே அதிரச் செய்து கொண்டிருக்கிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மறுபடியும் முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம்‘‘ என்று எடுத்த எடுப்பிலேயே ஓர் அதிர்வலையை ஏற்படுத்தினார். அந்த அதிர்வலை, மக்களிடம் அடுக்கடுக்கான எதிர் அதிர்வலகளை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து அவர், ‘‘இந்தத் தேர்தலில் மகளிரிடம் காணப்படும் உற்சாகத்தைப்போல், இதுவரை எந்தத் தேர்தலிலும் கண்டதில்லை’’ என்று குறிப்பிட்டு, மகளிரிடையேயும் தனித்த எழுச்சியை உண்டாக்கி விட்டார். அதற்குக் காரணமாக, ‘திராவிட மாடல்’ அரசின் மகளிர் நலம் சார்ந்த திட்டங்கள்தான் என்பதையும் குறிப்பிட்டார். மேலும் அவர், கலைஞர் முதல், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை, செயல்படுத்திய மகளிருக்கான நலத்திட்டங்களின் பரிணாம வளர்ச்சியை சுட்டிக்காட்டி, ‘‘இன்றைக்கு அது மகளிர் உரிமை தொகையாக மாதம் 1,000/- வரை வந்துள்ளதையும், அடுத்து வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அதுவே ரூ.2,000/- மாக உயரும் என்பதையும் கட்டிக்காட்டியதும், அதற்காகவே காத்திருந்தது போல் மக்களிடம் உற்சாகம் பெருகியது. குறிப்பாக மகளிரிடம்!
மேலும் அவர், ‘திராவிட மாடல்’ அரசு கல்வியில் செலுத்திய கவனத்தையும் நுட்பமாக விளக்கினார். தொடர்ந்து, மகளிர் இட ஒதுக்கீட்டை கேடயமாகப் பயன்படுத்தி, தொகுதி மறு வரையறை எனும் கழுத்தில் தொங்கும் கத்தியை ஒன்றிய அரசு எடுத்ததையும், அதை ‘திராவிட மாடல்’ அரசு இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து முறியடித்ததையும் சுட்டிக்காட்டி விட்டு, ‘‘மகளிர் இட ஒதுக்கீட்டை தடுத்து விட்டனர்’’ என்று பா.ஜ.க. மாய்மாலம் செய்ததை எடுத்துரைத்து, இட ஒதுக்கீட்டில் நாங்கள் தான் முன்னோடி என்பதைக் குறிப்பிடுவதற்காக ‘‘பத்து புள்ளை பெத்தவங்க கிட்ட ஒத்த புள்ள கூட இல்லாதவ வைத்தியம் சொல்வது போல் இருக்கிறது’’ என்று பகடி செய்தார்.
இன்றைய பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ‘‘இத்தகைய ஜூம்லாவாலாக்களுக்கு தமிழ்நாட்டில் வேலையே இல்லை. மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசு தான்! மறுபடியும் ஸ்டாலின் தான் முதலமைச்சர்!’’ என்பதை அழுத்தம் திருத்தமாக பலத்த கை தட்டல்களுக்கிடையே கூறி, ‘‘மனிதநேய மக்கள் கட்சித் தலைவர ஜவாஹிருல்லா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்று, கோரி, தனது உரையை நிறைவு செய்தார்.
நன்னிலத்தில், எஸ்.டி.பி.அய். தலைவர் முஹம்மது முபாரக் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு!
தோழர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, மூன்றாவது கூட்டமான எஸ்.டி.பி.அய். தலைவர் முஹம்மது முபாரக் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்காக நன்னிலம் நோக்கிச் சென்றார். நன்னிலம் பெரியார் சிலை அருகில், இரவு 8.40 மணிக்கு கழகத் தலைவர் வருகை தந்தார். அவருக்கு உற்சாகமான, எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. வேட்பாளரும் எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் நெல்லை முபாரக் உரிய நேரத்திற்கு வருகை தந்திருந்தார். திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண் காந்தி தலைமையேற்றார். நன்னிலம் நகரத் தலைவர் தன.சஞ்சீவி அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான பூண்டி கே.கலைவாணன், திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் சுரேஷ், தன்ராஜ், குத்தாலம் அன்பழகன், எஸ்.டி.பி.அய். மாஸ் அஜிஸ் ஃபைஜி, நன்னிலம் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
முன்னதாக கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றியிருந்தார். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையை, ‘‘பிரதமர் மோடி இடம் பெற்றிருக்கும் கூட்டணிக்கும், உண்மைக்கும் வெகு தூரம்’’ என்றே தொடங்கினார். அதற்கான சான்றுகளையும் தந்தார். தொடர்ந்து, ‘திராவிட மாடல்’ நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களை பற்றி குறிப்பிடும் போது, ‘‘அவர் வெறும் அரசியல்வாதியாக இல்லாமல் சிறந்த மதி யூகியாகவும், அரசியல் விஞ்ஞானியாகவும் இருக்கிறார்’’ என்று பெருமிதத்துடன் பாராட்டினார். அதற்கு ஆதாரமாக, மகளிர் உரிமைத் தொகையை தேர்தல் காலமான மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதற்கான முயற்சிகளை என்.டி.ஏ. கூட்டணியினர் உச்ச நீதிமன்றம் மூலமாக செயல்படுத்த முனைந்த போது, அதை முளையிலேயே கிள்ளி எறிந்து, மூன்று மாதத்துக்கு சேர்த்து ரூ.3,000மும், கோடைகால நிவாரணமாக ரூ.2,000 மும் சேர்த்து ரூ.5,000 மாக, மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தச் செய்ததை சுட்டிக்காட்டினார். அதேபோல, 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலைச் சிற்றுண்டி வழங்கும் உலகம் போற்றும் திட்டத்தை பற்றி குறிப்பிடும் போது, ‘‘அது மாணவர்களின் பசியை மட்டும் போக்கவில்லை; கற்றல் திறனை மேம்படுத்துவது மட்டும் அதன் நோக்கமில்லை; அந்தப் பிஞ்சு வயதிலேயே, ஜாதி, மத, பேதமில்லாமல் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தையும் அது ஊக்குவிக்கிறது’’ என்று அதற்கு வேறு ஒரு பரிமாணத்தையும் சுட்டிக்காட்டி, மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி விட்டார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்கிற பெயரில் தொகுதி மறு வரையறை எனும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டதை விவரித்த பிறகு, ஓசூரில் நடைபெற்ற, பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகாஜூன கார்கே அவர்கள், ‘‘ஸ்டாலின் தனிநபர் இல்லை! இந்தியாவே திராவிடர் கொள்கையை ஆதரித்து அவர் பின்னால் நிற்கிறது!’’ என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டு முதலமைச்சர் மாநில உரிமையைப் பாதுகாப்பதற்கான மாபெரும் ஆளுமை என்பதை உணர வைத்து, மற்றவர்கள் அடிமைகள் என்பதையும் உணர்த்தி, தமிழ்நாட்டில் ஜாதி, மத, பேதமில்லாமல் அனைவரும் அண்ணன், தம்பிகள் போல் இருப்பதையும், சிறுபான்மை பெரும்பான்மை எல்லாம் ஒருபான்மை தான் என்பதாகத்தான் திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி, ‘‘இந்த அமைதி தொடர; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவம் நிலை பெற; முஹம்மது முபாரக் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்று கேட்டு தனது உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தெளிவு பெற்றனர்.


