கற்றுச் சிந்தித்தவர்கள் சிந்திக்கக் கற்பித்தவர்
இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட மிக உயர்ந்த மனித நேயச் சிந்தனையாளராகப் பெரியார் பேரொளி வீசத் தொடங்கிய அதே காலக்கட்டத்தில் உலக நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தோன்றிச் சிறந்த இரண்டு பகுத்தறிவுச் சிந்தனையாளர்களாகிய அறிஞர் இங்கர்சால், பேராசிரியர் பெட்ரண்ட் ரசல் ஆகியோரை இங்கு ஒப்பு நோக்குவது பொருத்தமானது. மதத்திற்கு எதிராகவும், மனித சுதந்திரத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய அவ்விரு பேரறிவாளர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் பெரியார் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பகுத்தறிவாளர் இங்கர்சால்
இங்கர்சால், 1833ல் அமெரிக்காவில் பிறந்தவர். சட்ட வல்லுநர், கேட்பார் பிணிக்கும் பேச்சாளர், எவர்க்கும் அஞ்சாத கொள்கைப் பரப்புநர். தம் இளமையிலேயே பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்டு,
எனது ஞானஸ்தானம் சுத்தமாகக் குளிப்பது தான், அது தங்கள் ஞானஸ்தானத்தை விடச் சிறந்தது
எனக் கூறிப் பெரியாரின் இளமைக் குறும்பை நினைவுபடுத்தியவர். அமெரிக்காவில் நிலவிய அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்தவர்.
கடவுளை நேசிப்பதை விட மனிதர்களை நேசிப்பது மிகச் சிறந்தது
என்ற அறிஞர் இங்கர்சாலின் கூற்று. பெரியாரின்
கடவுளை மற, மனிதனை நினை
என்ற கருத்துத் தானே!
உலகத்தில் மிகவும் முக்கியமானது சுதந்திரம். அது உணவைவிட உடையை விட செல்வம், கலையை விடச் சிறந்தது. எல்லா மதங்களைக் காட்டிலும் சிறந்தது. இத்தகைய சுதந்திரத்தைக் காப்பாற்ற நான் அனைத்தையும் இழக்கவும் சித்தமாக இருக்கிறேன்.
என்ற இங்கர்சாலின் முழக்கம் பெரியாரின் முழக்கத்தைப் போலவே மிகப் பொருந்தி ஒலிப்பது இவ்விருவரின் உணர்ச்சி ஒத்த நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.
பேராசிரியர் பெட்ரண்ட் ரசல்
‘நான் ஏன் கிருத்துவன் அல்ல?’ என்ற நூலை எழுதிய பெட்ரண்ட் ரசல். இங்கிலாந்தில் பிறந்தவர். பல்கலைக் கழகப் பேராசிரியர். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர் (1876-1975) தம் கருத்துக்களை வலியுறுத்தப் பெரியாரைப் போல் தெருவில் இறங்கிப் போராடியவர்; சிறை கண்டவர். தம் வாழ் நாள் முழுவதும் வசைகளுக்கு ஆளானவராகவே வாழ்ந்திருந்தாலும் ‘நோபல் பரிசு’ பெற்ற பெருமைக்குரியவர் பெட்ரண்ட் ரசல்.
கிறிஸ்து என்பவர் நல்லொழுக்கமிக்கவர் என்பதை நான் ஒப்புக் கொண்டாலும் மனித சமூகத்திலேயே அதிக நல்லவர் என்பதையும் அதிக அறிவாளி என்பதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை
என்ற ரசலின் வார்த்தைகள், கிருத்துவை அவர் தேவனாகவோ, தேவகுமாரனாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்த்துவதுடன் கிருத்து நம்மைப்போல் சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைந்த ஒரு நல்லவர் என்பதையும் புரிய வைக்கின்றன.
கிருத்துவின் இரண்டாவது வருகை என்ற நம்பிக்கையைப் பெட்ரண்ட் ரசல் ஏற்க மறுத்தார். நரகம் என்பதில் நம்பிக்கை வைத்ததன் மூலம் கிருத்து பழிக்குப் பழி வாங்கும் பண்பினரோ என ஐயமுற்றார் ரசல்.
கீழ்த்திசையைப் போலவே மேற்றிசையிலும் மதம் மனிதனை முட்டாளாக்கியும், மூடநம்பிக்கைகளால் முடமாக்கியும் வைத்திருப்பதை இப் பேராசிரியரின் சிந்தனை புலப்படுத்துகிறது. இந்து மதமோ, கிருத்துவ மதமோ-மதம் அபின் தான் என்ற கார்லைல் கூற்றுப் பொய்யாகாது.
மதத்திற்கு அடிப்படை பயமே: பயத்திலிருந்து மனித சமுதாயத்தைக் காப்பாற்றவே விஞ்ஞானம் வந்துள்ளது
நாம் நமது காலிலேயே நிற்க வேண்டும். சுயேச்சையை விரும்பும் எந்த மனிதனுக்கும் கடவுள் கருத்து லாயக்கில்லாதது.
என்றார் ரசல். இவை போற்றிக் காக்க வேண்டிய பொன்னுரைகள் அல்ல. புரிந்து கடைப்பிடிக்க வேண்டிய பொருளுரைகள்.
‘ஆசையும் அச்சமும் தான் மதத்திற்கு அடிப்படை’
என்ற பெரியாரின் நினைவுபடுத்துகிறார். வார்த்தைகளைத்தானே இப்பேராசிரியரும்
‘கடவுளைப் படைத்தவன் முட்டாள்’
‘கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்’
‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’
எனப் பெரியார் விரிவுரை எழுதியதைத்தான் ரசல்,
‘கடவுள் கருத்து லாயக்கில்லாதது’
எனக் குறுகத்தரித்துள்ளார்.
மேனாட்டுப் பகுத்தறிவு வாதங்கள் உயர் அரங்கங்களில் மேட்டுக்குடியார்களின் விவாதப் பொருளாக மட்டுமே விளங்கி வந்தன. பெரியார் மட்டுமே, தம் பகுத்தறிவு வாதத்தைப் பட்டி தொட்டிகளின் பொட்டல் திடல்களில் பாமரனுக்கும் எடுத்துச் சொன்னவர்
என்ற அண்ணாவின் சொற்கள் தாம் பெரியாரின் பெருந்தொண்டை நமக்குப் புரிய வைக்கின்றன.

