இம்பால், ஏப்.18 மணிப்பூரில் கடந்த சில நாட்களாக போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மீண்டும் தீவிரமான மோதல்கள் வெடித்துள்ளன. குறிப்பாக பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்குள்ள ட்ரொங்லாபி பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மக்கள் வீதிகளில் போராடினர்.
இதைத்தொடர்ந்து திங்கெங்கே மற்றும் நிங்தவுகாங் பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும். பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். போராட்டக்காரர்களால் ஒரு வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டம்- ஒழுங்கை பராமரிக்க மறு உத்தரவு வரும் வரை பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங் உத்தரவிட்டுள்ளார்.
