தந்தை பெரியார் கொள்கைகளை அழிக்க நினைப்போருக்கு எதிரான போர்தான் இந்தத் தேர்தல்!

3 Min Read

ராகுல்காந்தி

பொன்னேரி, ஏப்.18- பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இரண்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை அழித்து ஒழிக்கப் பார்க்கின்றன. அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடக்கும் இந்த மாநில வளர்ச்சியை சிதைக்கப் பார்க்கிறார்கள்.  தந்தை பெரியாரின் சிந்தையில் உதித்த சமூக நீதியை ஒழிப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் இந்தியா ஒரு சில முதலாளிகளின் நிறுவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

இது முதலில் கொள்கைக்கான போர். அரசியல் போர்  என்பது இரண்டாம்பட்சமே! இந்தப் போர் அதிகார அடக்குமுறைக்கும். சமத்துவ சமூகநீதிக்குமிடையேயான போரேயாகும்!

இந்தக் காலைவேளையில் எனது உரையைக் கேட்க வந்த அனைவருக்கும் நன்றி!

 

வரவேற்கத்தக்க கருத்து!

மதம் சார்ந்த நடைமுறைகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டவை

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

இந்தியா

புதுடில்லி, ஏப்.18- ‘மதப்பிரிவு சார்ந்த நடைமுறைகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டவை. நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தீர்ப்பு வழங்கும் போது, நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்கலாம் என, 2018இல் உச்ச நீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, 2019இல் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இந்த அமர்வு, சபரிமலை விவகாரத்தை மட்டும் அணுகாமல், மசூதிகளில் பெண்கள் அனுமதி, பார்சி பெண்களின் உரிமை போன்ற பொதுவான மத சுதந்திரம் குறித்து விசாரித்து வருகிறது. அரசியல் சாசனம் சார்ந்த ஏழு கேள்விகளை முன்வைத்து மூன்று நாட்கள் நடந்த விசாரணை நேற்றும்  (17.4.2026) தொடர்ந்தது.

அப்போது, ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், “சட்டம் என்பது அனைவருக்கும், ஒவ்வொரு நம்பிக்கைக்கும், மனசாட்சி சார்ந்த ஒவ்வொரு விசயத்திற்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சமூகத்தில் பிரிவினைகள் ஏற்படும்போது, அவற்றை ஒருங்கிணைப்பதே நீதிமன்றத்தின் முயற்சியாக இருக்க வேண்டும். ஒரு தனி நபர் மதத்தை கேள்வி கேட்க முடியும்; ஆனால், அது மரியாதைக்குரியதாகவும், உண்மையான நோக்கத்துடனும் இருக்க வேண்டும்,” என, வாதிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட வழக்குரைஞர் வெங்கடேஷ், “சட்டப்பிரிவு 25 மற்றும் 26இல் வரும் மதம், மத நடைமுறை போன்ற சொற்கள் வரையறுக்கப்பட்டவை. மத சுதந்திரம், நடைமுறை, சம உரிமை போன்றவைக்கு நீதிமன்றம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். மதச் சட்டங்களையும், மதச்சார்பின்மை நடைமுறைகளையும் ஒன்றாக கலந்து பார்க்க தொடங்கினால், அத்தியாவசிய மத நடைமுறைகளில் தலையீடு செய்யும் நிலை உருவாகும்.

”கொடை வழங்குதல் ஒரு தொண்டு செயல்; ஆனால், மதத்தின் அடிப்படையில் அது ஒரு நடைமுறை. தொண்டு விசயங்களில் நீதிமன்றங்கள் தலையிடலாம்; மத நடைமுறைகளில் முடியாது,” என்றார்.

வாதங்களைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: ஒரு நடைமுறை மத ரீதியாக தவறானது என, அந்த மதத்தைச் சாராத ஒருவர் கேள்வி எழுப்ப முடியுமா? மனசாட்சி என்பது ஒரு தனி நபருக்கு மிகவும் தனிப்பட்ட விசயம் என்பதால், அதைச் சுற்றி ஒரு பொதுவான அமைப்பை உருவாக்க நீதிமன்றத்தால் முடியாதா?

மதம் சார்ந்த விசயங்கள் நீதித் துறை ஆய்வுக்கு உட்பட்டவை. நம்பிக்கை சார்ந்த விவகாரங்களை விசாரிக்கும்போது, நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். மனசாட்சியின் சுதந்திரம் மற்றும் பரந்த அரசியல் அமைப்பு சட்டக் கட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் கிரி வாதங்களை முன்வைத்து வரும் நிலையில், வழக்கு விசாரணை தொடர்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *