இன்றைக்கு இந்தியாவில் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம்தான் நடந்து கொண்டுள்ளது. தந்தை பெரியார் கருத்தியல் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ‘ஆரியர் – திராவிடர் போராட்டம்’ தான் நடந்து கொண்டு இருக்கிறது.
ஒரு நூறாண்டுக் காலம் தமிழ்நாட்டை தந்தை பெரியாரும், அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும் செழுமையாகப் பக்குவப்படுத்தி வைத்திருந்ததால் தான் இந்துத்துவா என்னும் காவிப் பார்ப்பனிய சித்தாந்தம் கால் பதிக்க முடியவில்லை.
இன்னும் சொல்லப் போனால் ‘தொகுதி மறுவரையறை’ என்ற பெயரால் ‘நிரந்தரமாக இந்திய ஆட்சி அமைப்பில் நங்கூரம் பாய்ச்ச வேண்டும்’ என்ற நோக்கில் ஒன்றிய இந்துத்துவா பிஜேபி அரசால் தந்திரமாக கொண்டு வரப்பட்ட மசோதா நேற்று (17.4.2026) நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கு முதன்மைக் குரல் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியதுதான் அச்சாணியும் ஆணி வேருமாகும்!
‘திராவிட மாடல்’ ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, இந்துத்துவா ஆட்சி நடக்கும் பிஜேபியின் ஒன்றிய மற்றும் மாநில ஆட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
2021ஆம் ஆண்டு ‘திராவிட மாடல்’ அரசு அமைந்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் இளைஞர்கள், மகளிர் ஆகியோரின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில் தொடங்கிட ஊக்கமளிக்கத் தொடங்கினார். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, கிருட்டிணகிரி முதலிய பல்வேறு இடங்களில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் முதலிய நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்குத் தேவையான நில வசதிகள் உள்பட அனைத்தையும் திராவிட மாடல் அரசு வழங்கும்; அத்துடன், அறிவும் ஆற்றலும் நிறைந்த கல்வி, தொழில்நுட்பத்தில் சிறந்த மனிதவளமும் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன என்பதை எடுத்துக் கூறி தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இவற்றின் பயனாக, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளின் தொழில் முகவர்களுடன் 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 12.16 லட்சம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளுடன் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. இவற்றின் மூலம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் – முதற்கட்டமாக 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் 3,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘வின்பாஸ்ட்’ மின் வாகனத் தொழிற்சாலை;
ரூ.1003 கோடியில் பிள்ளைப்பாக்கம் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை; அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை; ரூ.3,250 கோடியில் மீண்டும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஃபோர்டு (Ford) தொழிற்சாலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 36 லட்சம் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை – 2021, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை – 2024 – முதலிய 19 புதிய தொழிற்கொள்கைகள் வகுக்கப்பட்டு: தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி, 45,000 ஏக்கர் நில வங்கி உருவாக்கப்படும் என அறிவித்து; அந்த இலக்கை விஞ்சிடும் வகையில் சிப்காட் நிறுவனம் 54,015 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு புதிய தொழில்களுக்கு நிலங்களை வழங்கியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 12,198 ஏக்கர் பரப்பளவில் 30 புதிய சிப்காட் தொழில் வளாகங்களை உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருக்குவதில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்க முடியும் எனும் உயரிய நோக்கத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு தமிழ்நாட்டில் புதிய டைடல் பூங்காக்களை உருவாக்கி வருகிறது.
தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி 45,000 ஏக்கர் நில வங்கி உருவாக்கப்படும் என அறிவித்து; அந்த இலக்கை விஞ்சிடும் வகையில் சிப்காட் நிறுவனம் 54,015 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு புதிய தொழில்களுக்கு நிலங்களை வழங்கியுள்ளது.
புதிய தொழில் தொடங்குவதற்காக முன் வரும் தொழில் முகவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வரும் ‘திராவிட மாடல்’ அரசு வரிச்சலுகை முதலியவற்றை வழங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்களை ஊக்கப்படுத்திடும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் தமிழ்நாடு நிறுவியுள்ளது.
‘திராவிட மாடல்’ அரசு அமைவதற்கு முன் தமிழ்நாட்டில் 48 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மட்டுமே இருந்தன. 2021-க்கு பின் 10 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தற்பொழுது மொத்தம் 58 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில்களை புதிதாக தொடங்குவதற்கும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதிகள் செய்வதற்கும் வரிச் சலுகைகள் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு.
இவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் பெற்றுள்ளது. இதே நேரத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற குஜராத் மாநிலத்தில் 2020இல் செயல்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எண்ணிக்கை 20 மட்டுமே; தற்போது 27 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அங்கு உள்ளன. அதே போல மகாராட்டிர மாநிலத்தில் 2020இல் 37 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தற்போது 41 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2020இல் 14 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், தற்போது 23 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 2020இல் 5 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், தற்போது 8 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் அமைந்துள்ளன. ஏறத்தாழ இதே நிலை தான் ஏனைய மாநிலங்களிலும் உள்ளன.
இவை எல்லாவற்றையும் விட, தமிழ்நாடு மிக அதிக எண்ணிக்கையில் 2020இல் 48 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை கொண்டிருந்தது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சிறப்புப் முயற்சிகளால் 5 ஆண்டுகளில் 10 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் புதிதாக அமைக்கப்பட்டு மொத்தம் 58 சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் கொண்டு தமிழ்நாடு இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகவே திகழ்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பேரவையில் வழங்கிய 2026-2027 நிதிநிலை அறிக்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான வரிகளைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தற்போதுள்ள உபரித் திறனை உள்நாட்டுச் சந்தைக்குப் பயன்படுத்தி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கும் அரசு ஊக்கம் அளித்திட திட்டமிட்டுள்ளது.
இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் முனைப்பான கவனம் செலுத்தி, தொடர்ந்து பல தொழிற்சாலைகளை பல்வேறு அமைப்புகள் மூலம் நிறுவி வருவதால் தமிழ்நாடு பல முனைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகிறது.
ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி, பொருளாதார வளர்ச்சியில் 11.19 ‘இரண்டு இலக்க வளர்ச்சி’ கண்டு இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடம் என்னும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஓய்வில்லா உழைப்பிற்குக் கிடைத்த மகத்தான வெற்றியென்றே அனைவரும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாம் சில எடுத்துக்காட்டுகள் அவ்வளவே! விரிக்கின் (விரிவாகச் சொன்னால்) பெருகும்!
இதிலிருந்தே, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் காவி மாடல் ஆட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்வீர்!
5 ஆண்டுகளிலேயே இத்தனை சாதனைகள் என்றால் அடுத்து 5 ஆண்டுகள் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடரும் நிலையில், அதன் சாதனைகள் முன்னிலும் பல மடங்கு எவரெஸ்டு வளர்ச்சியை எட்டும் – மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கூட்டும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்!
