இந்திய நாடாளுமன்றத்தின் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்கள், தற்போது ‘வடக்கு மற்றும் தெற்கு’ மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் யுத்தமாக உருவெடுத்துள்ளது. 131ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த வரைவு குறித்த தகவல்கள் வெளியானது முதலே, தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையிலான அச்சம்!
இந்தத் திருத்தத்தின்படி, மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், வட மாநிலங்களின் பலம் அதிகரித்து, தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்குப் பெருமளவில் குறையும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறப்பாகச் செயல்பட்ட தென்னிந்திய மாநிலங்கள், அதன் காரணமாகவே நாடாளுமன்றத்தில் தென் மாநிலத்திற்கான பிரதிநிதித்துவத்தை இழப்பது அநீதி ஆகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் விடுத்த வேண்டுகோளின்படி, ஏப்ரல் 16ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது இதற்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஆதரவு தெரிவித்தது.
டில்லியில் கூடிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய இடப்பகிர்வு விகிதாச்சாரம் எக்காரணம் கொண்டும் மாறக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு: 2011ஆம் ஆண்டு பழைய தரவுகளைப் பயன்படுத்தாமல், 2026இல் நடத்தப்படவுள்ள மக்கள் தொகை மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் இதில் பறிபோகக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவைச் செயல்படுத்த ஆதரவு அளிக்கும் அதே வேளையில், அதன் பின்னணியில் தெற்கு மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக் கூடாது என வாதிடுகின்றனர்.

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த அச்சங்களை நிராகரித்துள்ளார். தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது அடிப்படை ஆதாரமற்றது என்றும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மசோதாவைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் தற்போதைய பங்களிப்பு அப்படியே பாதுகாக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஆனால், இதில் எள்ளளவும் உண்மை இல்லை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்ட பிற தலைவர்களும் தொகுதி மறுவரையறையைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சில நிபுணர்களின் கருத்துப்படி, தொகுதிகள் அதிகரிக்கும் போது தென்னிந்தியாவிலும் இடங்கள் உயரும் என்றாலும், வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் விகிதாச்சார அடிப்படையில் தெற்கு மாநிலங்கள் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவே அஞ்சப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், வட இந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்
கடும் எச்சரிக்கை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், ஒன்றிய அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
அநீதி இழைக்கப்படும் தென் மாநிலங்கள்: மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. வட மாநிலங் களின் அரசியல் பலத்தை உயர்த்தி, தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்க முயன்றால் தமிழ்நாடு அமைதியாக இருக்காது.
“இது ஏதோ தேர்தல் நேரப் பேச்சு என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் வீதிக்கு வந்து போராடும் சூழல் உருவாகும். தி.மு.க. ஒரு போராட்ட வரலாறு கொண்ட கட்சி. 1950-களில் நிலவிய அதே தீவிரமான உணர்வை இந்தியா மீண்டும் தமிழ்நாட்டில் காண நேரிடும். இது வெறும் மிரட்டல் அல்ல, தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை.”
கருப்புக்கொடிப் போராட்டம்: தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியைக் கண்டித்து, ஏப்ரல் 16 அன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் மீதும் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
பினராயி விஜயனின் கேள்வி
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 1976ஆம் ஆண்டின் தேசிய மக்கள் கொள்கையைப் பின்பற்றி மக்கள் தொகையைக் குறைத்த மாநிலங்களுக்கு ஏன் தண்டனை வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்குப் பரிசு களும், சுகாதார மற்றும் கல்வித் துறையில் சிறந்து விளங்கி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங் களுக்குப் பாதிப்பும் ஏற்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தொகுதி மறுவரையறையோடு இணைக்கத் தேவையில்லை என்றும், அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 80 இடங்களும் தமிழ்நாட்டில் 39 இடங்களும் உள்ளன. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 50% இடங்கள் அதிகரிக்கப்பட்டால், உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 120 ஆக உயரும். தமிழ்நாட்டின் இடங்கள் 39-லிருந்து 59 ஆக உயரும்.
முன்பு இரு மாநிலங்களுக்கும் இடையிலான இடங்களின் வித்தியாசம் 41 ஆக இருந்தது. புதிய வரைவு அமலுக்கு வந்தால், இந்த வித்தியாசம் 61 ஆக அதிகரிக்கும். இது வட இந்திய மாநிலங்கள் தனித்து ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியைப் பெற வழிவகுக்கும், இதனால் தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும்.
வட மாநிலங்களின் மக்கள்தொகை உயர்வைக் காரணமாக வைத்து, தென்னிந்தியாவின் அரசியல் ஆதிக்கத்தைக் குறைப்பது நியாயமானதல்ல. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மற்றவர்களின் நிலத்தையோ, வீட்டையோ அபகரிப்பது எப்படித் தவறோ, அவ்வாறே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி வளர்ச்சிப் பாதையில் செல்லும் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும் தவறானது.
வட இந்தியாவின் தார்மீகப் பொறுப்பு
தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில் வாய்ப்புகளைப் பெருக்கியதன் மூலம் வட இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்குப் புகலிடம் அளித்துள்ளன. சிறந்த நகரங்களையும், வாழ்வாதாரத்தையும் தெற்கு வழங்கியுள்ளது. எனவே, இன்று நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் அபாயத்தில் இருக்கும் தென்னிந்தியாவிற்கு ஆதரவாக வட இந்திய மக்களும், தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
வளர்ச்சியில் பின்தங்கிய வட மாநிலங்களின் நிர்வாகத் தோல்வியால் அதிகரித்த மக்கள் தொகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் பின்னணியில் கொண்டுவரப்படும் இந்த மறுவரையறை குறித்து ‘தி இந்து’ நாளிதழ் மற்றும் அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் வெளியிட்டுள்ள தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன:
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி: தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டால், ஹிந்தி பேசும் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் 38 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாக உயரும்.
தென்னிந்தியாவின் சரிவு: அதே சமயம் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு 24.3 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாகக் குறையும்.
தமிழ்நாடு: தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக அதிகரித்தாலும், விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டிற்கு 11 இடங்கள் இழப்பு ஏற்படும்.
கேரளா: 23 இடங்கள் கிடைக்கலாம். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் அதற்குக் கிடைக்க வேண்டிய 31 இடங்களில் 8 இடங்கள் குறையும்.
ஆந்திரா & தெலங்கானா: ஆந்திராவிற்கு 5 இடங்களும், தெலங்கானாவிற்கு 3 இடங்களும் இழப்பு ஏற்படும்.
ஒடிசா & மேற்கு வங்கம்: முறையே 4 மற்றும் 3 இடங்களை இழக்க நேரிடும்.
பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களில், அந்த மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை விட கூடுதல் இடங்கள் கிடைப்பதாக யோகேந்திர யாதவ் சுட்டிக் காட்டியுள்ளார். உதாரணமாக, மகாராட்டிராவில் தற்போது 48 இடங்கள் உள்ளன. விகிதாச்சாரப்படி 27 இடங்கள் அதிகரிக்க வேண்டும். ஆனால், 30 இடங்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கும், ஹிந்தி அல்லாத பிற மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் சமநிலையை முற்றிலுமாகச் சீர்குலைத்துவிடும். இந்திய அரசியலில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ள ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) மற்றும் அதன் அரசியல் பின்னணிகள் குறித்து யோகேந்திர யாதவ் மற்றும் கபில் சிபல் போன்றோர் முன்வைக்கும் விமர்சனங்களின் தொகுப்பு இது.
மாநிலங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவம் மாற்றம்!
புதிய தொகுதி மறுவரையறை யின்படி, மக்களவை இடங்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும்போது மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். உதாரணமாக:
மகாராட்டிரா: தற்போதுள்ள இடங்களை விட 3 இடங்கள் கூடுதலாகப் பெற்று 78 இடங்களாக உயரும்.
டில்லி: தற்போதுள்ள 7 இடங்கள் 16 ஆக உயரும். தற்போதைய மக்கள் தொகை விகிதாச்சாரப்படி 4 இடங்களே அதிகரிக்க வேண்டும் என்றாலும், டில்லிக்கு 5 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கின்றன.
உத்தரப் பிரதேசம்: தற்போதைய 80 இடங்கள் 138 ஆக உயரும். இது மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
ராஜஸ்தான் மற்றும் பீகார்: முறையே 8 மற்றும் 9 இடங்கள் கூடுதலாகப் பலன் பெறுகின்றன.
குஜராத், அரியானா, ஜார்கண்ட் மற்றும் அசாம்: இந்த மாநிலங்களும் கணிசமான கூடுதல் இடங்களைப் பெறுகின்றன.
ஜெரிமாண்டரிங் (Gerrymandering) – ஒரு அரசியல் சதி?
அரசியல் லாபத்திற்காகத் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதை ‘ஜெரிமாண்டரிங்’ என்பார்கள். எதிர்க்கட்சிகளின் வாக்கு பலத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இந்த எல்லை மாற்றங்கள் செய்யப்படுகிறதா என்ற கேள்வியை யோகேந்திர யாதவ் எழுப்பியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 131ஆவது திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவை. ஆனால், அரசு இந்த விசயத்தில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்கத் அரசு தவறிவிட்டது. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைச் சிதைக்கும் இந்த முயற்சியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு: ஒரு நாடகம்?
மகளிர் இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்காக ‘தொகுதி மறுவரையறை’ என்ற நிபந்தனையை முன்னிறுத்திய அரசு, தற்போது 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதைச் செயல்படுத்தத் துடிப்பது ஏன்? இது ஓர் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்றும், கடந்த 50 ஆண்டுகளாக மாறாமல் இருந்த மாநிலங்களின் இடப்பகிர்வு விகிதம் இப்போது சீர்குலைக்கப்படுவதாகவும் யோகேந்திர யாதவ் சாடியுள்ளார்.
உறுதிமொழி தரப்படாதது ஏன்? எதிர்க்கட்சியினர் கேள்வி!
இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அரசியல் சாசனத்தின் 82ஆவது பிரிவின்படி நடைமுறையில் இருக்கும் இந்த விதியை மாற்றி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை (Delimitation) செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு கொண்டு வரவிருக்கும் இந்த மாற்றத்தில், அரசியல் சாசனத்தின் 55, 81, 82, 170 மற்றும் 332 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் 1971-ஆம் ஆண்டுக்கான நிபந்தனை நீக்கப்படும்.
யோகேந்திர யாதவ் போன்ற அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல, 2011 அல்லது 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த மறுவரையறை அமையலாம். மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் (Ratio) அப்படியே பராமரிக்கப்படும் என்று பாஜக கூறினாலும், வரைவு சட்டத்தில் அதற்கான உறுதிமொழி எதுவும் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் அச்சமாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது குறித்துப் பேசுகையில், “தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாது என்பதற்கு பிரதமரிடம் உறுதிமொழி கோரினோம், ஆனால் பதில் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தென் மாநிலங்களுக்கு இந்த நடவடிக்கை “தண்டனையாக” அமைந்துவிடும் என்பதே அவர்களின் பிரதான கவலை.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ஆகியோரும் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று குரல் கொடுத்துள்ளனர்.
தொகுதி மறுவரையறை: ரேவந்த்தின் புதிய தீர்வும்!
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், தென் மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் ஓர் ஆக்கபூர்வமான மாற்றுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அவரது திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
“பாதிக்குப் பாதி (50:50) சூத்திரம்: புதிதாகச் சேர்க்கப்படும் தொகுதிகளில் 50 சதவீதத்தை மக்கள் தொகை அடிப்படையிலும், மீதமுள்ள 50 சதவீதத்தை பொருளாதார வளர்ச்சி (GDP) மற்றும் இதர முன்னேற்ற அளவுகோல்களின் அடிப்படையிலும் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படமாட்டாது. அதே சமயம், மக்கள் தொகை அதிகம் உள்ள வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.”
தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அதற்கு 26 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது, ஆனால் பீகார் போன்ற மாநிலங்களுக்கு 6 ரூபாய்க்கு மேல் திரும்பக் கிடைக்கிறது என்ற தரவுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இடைவெளியைக் குறைக்க வளர்ச்சி சார்ந்த தொகுதி ஒதுக்கீடு அவசியம் என்கிறார் அவர்.
தொகுதி மறுவரையறை என்பது வெறும் எண்கள் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு தேசத்தின் அதிகாரப் பகிர்வு சார்ந்தது. வட இந்திய மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கீழ் உள்ள வாக்காளர்களின் சுமை அதிகமாக இருப்பதை ரேவந்த் அங்கீகரிக்கிறார். இருப்பினும், ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்கவும், வளர்ந்த மாநிலங்களின் உரிமைகளை உறுதி செய்யவும் ‘கலப்பு மாதிரி’ முறையே சரியான தீர்வாக இருக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
உத்தரப் பிரதேசத்தை விடத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏற்கெனவே 40 இடங்கள் குறைவாக உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டால், இந்த வித்தியாசம் 60-ஆக உயரும் என அவர் சுட்டிக் காட்டுகிறார். வட இந்தியத் தலைவர்கள் தங்கள் மாநிலங் களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லத் தவறியதற்கு, தென்னிந்தியா விலை கொடுக்க முடியாது என்பது அவரது வாதம்.
நிதிப் பங்கீட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்பது அவர் உள்ளிட்ட பலரின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் தென்னிந்தியத் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்:
நவீன் பட்நாயக் (ஒடிசா): ஒடிசா மாநிலத்தின் கவலைகள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டால், மசோதாவை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சட்டப்பூர்வமான உறுதிமொழியின் அவசியம்!
தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் தென் மாநிலங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன.
ஒன்றிய அரசு தென் மாநிலங்களுக்கு அளிக்கும் “உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்ற வாய்மொழி உறுதிமொழி மட்டும் போதுமானதல்ல. அது சட்டப்பூர்வமாக மசோதாவில் இடம்பெற வேண்டும் என்பதே தற்போதைய எதிர்ப்பார்ப்பாகும். வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது கூட்டாட்சித் தத்துவத்தின் கடமையாகும்.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது வட இந்தியாவின் மக்கள் தொகையை மட்டும் சார்ந்த ஒன்றாக மாறிவிடக்கூடாது. வட இந்தியாவின் எண்ணிக்கைப் பலத்தைக் கொண்டு ஆட்சியில் அமருபவர்கள், தென்னிந்தியாவின் உரிமைகளையும் கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமையாகும். அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் உள்வாங்கி, யாருக்கும் அநீதி இழைக்காத வகையில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்பதே தென் மாநிலங்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மக்கள் ‘வடக்கு – தெற்கு’ என்ற பாகுபாடின்றி, எது நியாயம் என்பதை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நின்ற மாநிலங்கள், அதன் பிரதிநிதித்துவத்தில் பின்னுக்குத் தள்ளப்படுவது ஆரோக்கியமானதல்ல. யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் உண்மையான எதிர்ப்பார்ப்பு.

