மனிதனின் குறுக்குப் புத்தி
நாற்கால் விலங்காய்த் திரிந்த மனிதன் படிப்படியாக நாகரிகம் பெற்றான். பின்னிரு காலில் எழுந்து நின்றான். முன் காலிரண்டைக் கைகளாய்க் கையாளக் கற்றான். வேட்டையில் மட்டுமே உணவு பெற்றவன் விதைத்துண்ணும் வித்தை கண்டான். இவ்வாறு வளர்ந்த கூட்டத்தில்தான் வளர்ந்தது ஒரு குறுக்குப்புத்தி. சூழ்ச்சியிலும் உடல் வலுவிலும் தன்னிலும் குறைந்தவனைத் தன் வேலைக்கு ஏவத் தொடங்கினான். இது சுகமாக இருப்பதை அறிந்து சுவை கண்ட விலங்கானான். மெல்ல மெல்லத் தனி மனிதனின் இவ்விழிகுணம் ஒரு வகுப்பாரின் குணமாக வளர்ந்தது. மாந்தரில் ஒரு வகுப்பினர் பிறர் மீது மேலாண்மை செலுத்தத் தொடங்கினார்கள். பிறர் உழைப்பை உறிஞ்சும் வாழ்க்கை இனித்தது அவர்களுக்கு. உட்கார்ந்து தின்பது என்ற ‘சுக ஜீவனம்’ உங்களுக்குத் தெரிந்திருக்கும் அல்லவா?.
குறுக்குப் புத்தியின் நீட்டிப்பு
நம்மை விட வலிமை குறைந்தவன் தான் நாம் சொன்னதைக் கேட்பான். எனவே அவனை வலிமையற்றவனாகவே வைத்திருக்கவேண்டும். அறியாமையும் வறுமையும்தான் புத்தியிலும் உடல் பலத்திலும் ஒருவனை வலியற்றவனாக்கும் என்பதைக் குறுக்குப்புத்தியும் கூர்த்த புத்தியும் உடைய கூட்டம் சிந்தித்தது. எனவே மேலாண்மை செலுத்தியவர்கள் கீழ்நிலைப்பட்டவர்களைச் சொத்துரிமையற்றவர்களாக்கினார்கள். கூலிக்கு வேலை செய்பவர்களாக அவர்கள் தரத்தைக் குறுக்கினார்கள். கூலியையும் அரை வயிற்றளவாகக் குறைத்துக் கொடுத்தனர். வறுமை அவர்களின் உடல் வலிமையை வற்ற வைத்தது.
கீழ்ப்படுத்தப் பட்டவர்களுக்குக் கல்வியும் மறுக்கப்பட்டது. ஏகலைவர்கள் கட்டை விரல்கள் வெட்டியெறியப்பட்டன. உயர்நிலை மக்களுடன் கலந்து பழகும் வாய்ப்பும் அவர்கள் பொது அறிவை வளர்த்து விடும் என்பதால் ஊருக்கு வெளியே உள்ள ஒதுக்குப் புறச்சேரிகளில் குடியமர்த்தப்பட்டனர். நடந்தால் குற்றம்; பார்த்தால் பாவம்; தொட்டால் தீட்டு; எனச் சட்டம் போட்டு அவர்களைத் தள்ளி வைத்தனர். ஓய்வு கொடுத்தால் சிந்திக்கத் தொடங்கி விடுவான் என்பதால் ஓய்வே தராமல் ஓயாது உழைக்க வைத்தனர். இவ்வாறு வறுமை, அறியாமையால் தலைமுறை தலைமுறையாகத் தாழ்ந்து தாழ்ந்து அவன் அடிமைத் தன்மைக்கு முழுமையாய் ஆளானான்.
உள்ள எழுச்சிக்கும் மடைமாற்று
தலைமுறை தாண்டியும் தாழ்த்தப்பட்டவன் என்றும் சிந்திக்கக் கூடாதல்லவா? அவனை ஆசை காட்டியும் அச்சமூட்டியும் தலை தூக்காதவாறு பாதுகாத்தார்கள். கடவுள், மோட்சம், நரகம், முற்பிறப்பு என்பவை, இதிகாச புராணக் கதைகள், பாட்டுகள், கூத்துகளாக அவன் மூளையில் திணிக்கப்பட்டன ‘நம் முற்பிறப்புப் பாவம் காரணமாகவே கடவுள் நம்மைத் தாழ்நிலையில் படைத்துள்ளான்; அடுத்த பிறவியில் நாம் உயர்ந்தவராய்ப் பிறப்போம்’ என்ற மூடநம்பிக்கையில் முடங்கி மகிழச் செய்தனர். ‘கடவுளைக்கூட நேரில் காணத்தகுதியற்றவர் நாம்’ என்று தம் கீழ்மைக்குத் தாமே காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளச் செய்தனர். இவ்வாறு உள்ளம் ஒடுங்கியவனுக்குக் கள்ளும் போதையும் கொடுத்து அவன் உடலையும் ஒடுங்கச் செய்தனர்.
மிக மிகக் கொடிய அடக்குமுறை
சுய சிந்தனையும் உடல் வலிவுமுடைய தனி மனிதர் சிலர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் தோன்றினார்கள். அவர்கள் அடங்க மறுத்தார்கள்: எதிர்ப்புத் தெரிவித்தார்கள்; கேள்வி கேட்டார்கள்: கிளர்ச்சி செய்தார்கள். இத்தகைய தனிமனித எழுச்சி மேனிலைச் சமுதாயத்தால் மிகமிகக் கொடுமையாக அடக்கப்பட்டது. சாணிப்பால், மனிதக் கழிவு, குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்துதல், பாலியல் வன்முறை என அவர்கள் அடக்குமுறைக்கு அளவே இல்லை.
தாழ்த்தப்பட்டவரில் தலைவர் உருவானால்…
தாழ்த்தப்பட்டவரில் சுயமாக எழுந்த தலைமைப் பண்புடையார் சிற்சில சமயங்களில் தோன்றினர். பொதுசன ஆதரவால் புகழ் பெற்றனர். தம் இனத் தலைவராக ஏற்றம் பெற்றனர்: ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு எழுந்த தலைவர்கள் தங்கள் இன முன்னேற்றத்திற்காகப் போராட எழுந்தபோது மேனிலைச் சமுதாயம் அவர்களை நந்தனார் ஆக்கி தம்முடன் சேர்த்துக்கொண்டனர்; கொண்டாடினர். முடிவில் நந்தனார்களை நம்மவர் ஆக்கி அழிப்பதும் மேலாதிக்கத்தாருக்குக் கைவந்த கலை.
காதலுக்கும் கல்லறைதான்
மேற்குடியும் கீழ்க்குடியும் காதல் வயப்பட்டுக் கலந்த பொழுது மாறுகால், மாறுகை வாங்கி மதுரை வீரன் சாமியாக்கினார்கள். காவு கொடுத்துக் காத்தவராயன் சாமியாக்கிக் கல் நட்டார்கள். நூற்றாண்டுகள் கடந்த மேலாதிக்கத்தில் எழுந்த, எரிந்த கீழ்வெண்மணி, மேலவளவு, கீழவளவு. திண்ணியம், உத்தமபுரம். மரக்காணங்கள் கணக்கிலடங்கா.
படிநிலைச் சமுதாயம்
அடிமை நிலையின் பரிணாம வளர்ச்சி
மேலே கண்ட இத்தனை முறைகளிலும் கீழ்ப் படுத்தப்பட்டவர் அழுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் ஆங்காங்கே முட்டல்களும் மோதல்களும் எழுந்தன. புரட்சிகளும் பூகம்பங்களும் பொங்கின. இதில் வெற்றி பெற்ற புரட்சியாளர்களுக்காக மேலாதிக்கவாதிகள் கண்ட புது வழிதான் ‘படிநிலை’. ஆம்! ‘நான் முதல்படி. நீ இரண்டாம்படியை எடுத்துக்கொள். உன் இடத்திற்கு அடுத்தவன் வராமல் பார்த்துக்கொள்வது உன் பொறுப்பு’ என்ற உடன்பாடு, பழைய ஏற்பாட்டைத் திருத்திய புதிய ஏற்பாடு.
இப்போது மேல் தட்டாருக்கு இரட்டை வெற்றி! எப்போதும் முதல்படி தங்களுக்கே என்ற மேனிலை உறுதி செய்யப்பட்டது. எதிரியிடம் போராடும் பொறுப்பை இரண்டாம் படியாரிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியும் இருந்தது. இப்படியே காலப்போக்கில் மூன்றாம், நான்காம் படிகளும் உருவாக்கப்பட்டன. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பெயர் சூட்டல்கள், கடவுளின் தலைமுதல் கால்வரை எங்கெங்கே பிறந்தான் என்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2,3,4 ஆம் படிநிலைகளுக்குள் இடம் பிடிக்க ஏமாளித் தமிழர்களிடம் போட்டிகள், போர்கள். முதலிடம் பிடித்த பார்ப்பான் மட்டும் தன் இடத்தை எப்போதும் தக்க வைத்துக்கொண்டான். முதலிடத்திற்கு யாரும் போட்டியிட முடியாமல் அடி வருடல் தொடங்கிக் குடி கெடுத்தல் வரை தன் சூது மதியால் கோள்மூட்டிக் குளிர் காய்ந்தான்.
இப்படித்தான் நம் சமுதாயத்தில் இன்றுவரை ஆதி திராவிடர், ஆசாரி. வேளாளர், முதலியார். வன்னியர். கவுண்டர், தேவர், நாடார், ரெட்டியார், நாயக்கர் என எல்லாருக்கிடையிலும் நான் உயர்வா? நீ உயர்வா? எனப் பகையும் பொறாமையும் தொடர்கிறது. இடனறிதல், காலமறிதல், வலியறிதல் வகைப்பட்டு வெற்றி தோல்விகள் உறுதி செய்யப்படுகின்றன. முதலிடத்தில் உள்ள பார்ப்பானுக்கு மட்டும் யாருடனும் மோதலில்லை; அவன் முதலிடத்திற்குப் போட்டியிடும் மனத்துணிவு எவருக்கும் எழவே இல்லை. இதுதான் பார்ப்பனியம். இவ்வாறு படிநிலை ஜாதியமைப்பு, தமிழரிடையே வேற்றுமையையும் பிரிவையும் உறுதிப்படுத்தியது.
இதை எப்படி மாற்றுவது?
புண்ணாகிப் புரையோடிச் சிதைந்து சீழ் பிடித்த இந்தச் சமுதாயப் பிளவை எப்படிச் சீராக்குவது? என்ற பெரியாரின் சிந்தனை தான் அவரது பகுத்தறிவு வாதம். பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை அவரது சமூக நீதியின் வெளிப்பாடே.சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை எனச் சொல்லிக் கொண்டிருந்தார்களே, அதற்கு முன் மானமும் சுயமரியாதையும் தான் மனிதனுக்குப் பிறப்புரிமை. தன் விடுதலையே தாய்நாட்டு விடுதலையைக் காட்டிலும் இன்றியமையாதது என்பதைப் பெரியார் உணர்ந்தார்.
இந்த இழிவு, வெறும் வார்த்தையாலோ, பிரச்சாரத்தாலோ, மேல் ஜாதிக்காரர்களைக் கேட்டுக்கொள்வதாலோ நீங்காது.
தாழ்த்தப்பட்டவர், மேல் ஜாதிக்காரர் போல் குளித்து முழுகித் திருநீறு,நாமம் முதலியவை தரித்து உணவில் சைவர்களாக மாறி. சுவாமிகள் எனப் புதுப் பெயர் தரித்தாலும் இழிவு போகாது.
ஒருபுறம் கீதையையும் மனுதர்மத்தையும் ஆதரித்துக் கொண்டு, மறுபுறம் தீண்டாமை ஒழிப்பு வேலையில் ஈடுபட்டிருப்பவர்களை நம்பினாலும் நடக்காது. இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் அடியற்ற ஓட்டைக் குடத்தில் நீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே.
எனவே தீண்டத்தகாவர்கள் மதத்தை ஒழியுங்கள், மதத்தை விட்டு விலகியிருங்கள். உங்கள் மதம் போகாமல் உங்கள் தீண்டாமை போகாது.
தேசாபிமானம் என்கிற யோக்கியமற்ற சூழ்ச்சிக்கு நீங்கள் இரையாகக் கூடாது: அது சோம்பேறிகள், காலிகள் ஆகியோர் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோட்சம், நரகம் போன்ற மூடநம்பிக்கையாகும். உங்களுக்குத் தேவை சுயமரியாதை தான்.
பொது மக்கள் ராஜ்ஜியம் இல்லாத சுயராஜ்ஜியம் தேவையில்லை. மானமுடையவன் தான் மனிதன். அதுவே அவன் பிறப்புரிமை.
இவ்வாறெல்லாம் தன் சுய சிந்தனையில் எழுந்த கருத்துகளைப் பரப்புரை செய்தார். மனித உயர்வு தாழ்வைப் போக்க உரிய வழிமுறைகள் இவையே என அறிவித்தார்.

