தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறோம்: கார்கே
புதுடில்லி, ஏப்.16 தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்போம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டில்லியில் ‘இண்டியா’ கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. எனினும் அது கொண்டு வந்த முறையை எதிர்க்கிறோம் என்றார். அதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அரசு இப்படி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவை ஒற்றை மதத்திற்குள் அடக்க முடியாது
உச்சநீதிமன்ற நீதிபதி
இந்தியாவை ஒரே ஒரு மத அடையாளத்திற்குள் அடக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா தன்னை ஒருபோதும் `இந்து நாடு’ என அறிவித்து கொண்டதில்லை என தெரிவித்தார். மேலும், இந்து என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை; ‘இந்து’ என்ற சொல்லே, சிந்து நதிக்கு அப்பால் வசிக்கும் மக்களை குறிக்க வெளிநாட்டினரால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு சொல்லாகும் என்றார்.
10-ஆம் வகுப்பு முடிவு
சாதித்த மாணவிகள்!
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர். இந்தாண்டு மொத்தம் 24,71,777 பேர் தேர்வெழுதிய நிலையில், மொத்த தேர்ச்சி விகிதம் 93.70% ஆக உள்ளது. இதில் மாணவர்கள் 92.63% தேர்ச்சியும், மாணவிகள் 94.99% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். அதேசமயம் கடந்தாண்டு திருநங்கைகளின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு சரிந்துள்ளது.
பசிக் கொடுமையின் உச்சம்!
சூடானில் இலை தழைகளை தின்று உயிர் வாழும் மக்கள்
கார்ட்டும், ஏப்.16 சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போர், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில் நிலைமை படுமோசமாக உள்ளது.
அங்குள்ள மக்கள் பசியைத் தாங்க முடியாமல் மரங்களின் இலை தழைகளையும், கால்நடை தீவனங்களையும் தின்று உயிர் பிழைக்கும் அவல நிலையில் உள்ளனர்.
கிட்டத்தட்ட 2.89 கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். போர்க்களத்தில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும், உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டும் உள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் உணவு தேடி வெளியே செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.
பன்னாட்டு உதவி நிறுவனங்களுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள சமூக சமையல் கூடங்களும் மூடப்படும் நிலையில் உள்ளன.
உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 3 பேர் பதவியேற்பு
சென்னை, ஏப்.16 உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 3 நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக நேற்று (15.4.2026) பதவியேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா க்ளேட் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இவர்கள் 3 பேருக்கும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று (15.4.2026) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மூவரும் உறுதிமொழி எடுத்து, உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்.

