புதுடில்லி, ஏப்.15–- வேளாண் விளைப்பொருட்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), விவசாயிகளின் உண்மையான உற்பத்திச் செலவை விட குறைவாக இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு மற்றும் தொடர்புடைய அமைப்புகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன:
சுவாமிநாதன் குழு பரிந்துரை: விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற, உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபத்தை சேர்த்து வழங்க வேண்டும்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லாதது, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கிறது. கடன் தள்ளுபடி: விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தாலுகா மற்றும் கிராம அளவிலும் அரசு கொள்முதல் மய்யங்களை அமைக்க வேண்டும்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், “கடந்த அய்ந்து ஆண்டுகளில் மகாராட்டிராவில் மட்டும் கடன் சுமையால் 17,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அரிசி மற்றும் கோதுமைக்கு நிர்ணயிக்கப்படும் விலை உற்பத்திச் செலவை விடக் குறைவாக உள்ளது. மேலும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் சிறுதானியங்களுக்கான சந்தை விலை செயற்கையாகக் குறைக்கப்படுவது விவசாயிகளை வறுமையில் தள்ளுகிறது” எனத் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்: “பொருளாதாரக் கொள்கையை உச்ச நீதிமன்றம் திருத்தி எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? மாநிலத்திற்கு மாநிலம் நிலம் மற்றும் மூலதனச் செலவுகள் மாறுபடுகின்றன. பெரிய நிலச்சுவான்தாரர்களும் நாட்டில் இருப்பதால், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான கொள்கையை வகுப்பது சாத்தியமற்றது.”
இருப்பினும், இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இது குறித்து ஒன்றிய அரசு, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மற்றும் விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (CACP) ஆகியவை விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கைத் தள்ளிவைத்தனர்.

