தமிழ்நாடு முழுவதும்… 234 தொகுதிகளிலும்…
‘மு.க.ஸ்டாலின்’ அலை வீசுகிறது!
மு.க.ஸ்டாலின் தான் மறுபடியும் முதலமைச்சர்!
ஓசூர், ஏப். 15- “சுதந்திரத்துக்கு முன்பு, அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தல் உள்பட 18 தேர்தல்களை சந்தித்தவன் என்கின்ற அனுபவத்திலும், செல்கின்ற இடம் எல்லாம் மக்கள் – குறிப்பாக பெண்கள் காட்டுகின்ற அளவுகடந்த உற்சாகம், இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் காண முடியாதது. ஆகவேதான், இந்தத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும்… 234 தொகுதிகளிலும்… ஸ்டாலின் அலை வீசுகிறது! மறுபடியும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான் முதலமைச்சர் ஆவார்! இது ஆருடம் அல்ல; ஆசை அல்ல; அனுபவம்!” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
கழகத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு!
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.சத்யா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்காக, நேற்று (14.4.2026) ஓசூர் திராவிடர் கழக மாவட்டம் சார்பில், 5.30 மணிக்கு ராம் நகர், அண்ணா சிலை அருகில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்விற்கு ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமையேற்றார். பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர்அதிரடி க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். கழகத் தலைவர் 6.40 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அங்கேயே அவருடைய படத்தை திறந்து வைத்து, மரியாதை செய்தார். 6.45 மணிக்கு ஆசிரியர் உரையாற்றத் தொடங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தனது உரையில், பலமுனைப் போட்டிகள் இருந்தாலும், இரண்டு அணிகளுக்கிடையில் தான் உண்மையான போட்டி என்பதை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “தி.மு.க.தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஓர் அணி. அதற்கு எதிராக அ.தி.மு.க. உள்ளடக்கிய, பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது அணி ஆகும்” என்று விவரித்தார். இரண்டின் கொள்கைகள் என்ன என்பதையும் கேள்விக்கு உட்படுத்தி, பதிலும் சொன்னார். அதாவது, “பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையாக ‘எல்லோரும் சமம்’ என்பதை ஏற்று கொள்ளாது” என்றும், “தி.மு.க.வின் கொள்கையாக எல்லோரும் சமம்; எல்லோருக்கும் எல்லாம்” என்பதை உயிர் நாடிக் கொள்கையாக கொண்டிருக்கிறது” என்றும், விளக்கினார். அதனடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம்” என்பதைச் சொல்லிவிட்டு, இந்த ஜனநாயக நாட்டில் சிலருக்குத் ‘திராவிட மாடல்’ அரசின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். கடன் படாதவர்கள் யாராவது உண்டா?” என்றொரு பொருள் பொதிந்த கேள்வியை எழுப்பி, “தெரிந்தோ, தெரியாமலோ… அறிந்தோ, அறியாமலோ… தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் இந்தத் ‘திராவிட மாடல்’ அரசுத் திட்டங்களால், சட்டங்களால் பயன்பெற்று கொண்டுதான் இருக்கின்றனர்” என்று, தான் கேட்ட கேள்விக்குப் பதிலாக கூறினார்.
மேலும் அவர், ‘திராவிட மாடல்’ அரசு மகளிர் நலத் திட்டங்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயருக்கான காரணத்தை திராவிடர் இயக்க தத்துவப் பின்னணியுடன் கூறினார். முதலில், ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் உள்ள, ‘உரிமை’ என்பதில், ரூபாய் 1000/- என்பதையும் தாண்டி பெண்களின் சுயமரியாதைக்கு; ஈடில்லாத உழைப்பை அங்கீகரித்துள்ளது என்பதை பெருமிதத்துடன் விளக்கினார். மேலும் அவர், “இந்த அங்கீகாரத்தை பெண்கள் உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, நிபந்தனை இல்லாத ஆதரவை ‘திராவிட மாடல் அரசுக்கு தந்து கொண்டிருப்பதையும் நினைவூட்டினார். தொடர்ந்து அவர், “இந்த உரிமைத் தொகையையும், தேர்தலை முன்னிட்டு, மூன்று மாதங்களுக்கு தடுத்து நிறுத்தி திராவிட மாடல் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த நினைத்தவர்களை புறம் கண்டு நமது முதலமைச்சர் ரூபாய் 5000/- வழங்கிய பாங்கையும், பெரும் வியப்பினூடேயே தமிழ்நாட்டு முதலமைச்சரின் நிர்வாகச் சிறப்பை எடுத்துரைத்தார். அடுத்து, “திராவிட மாடல் அரசு கொடுக்கிறது! ஆரிய மாடல் அரசு தடுக்கிறது?” என்று இரண்டு அணிகளுக்கிடையான கொள்கைப் பூர்வமான வேறுபாட்டை மீண்டும் ஒருமுறை எண்பித்தார்.
தொடர்ந்து, மகளிருக்கான சொத்துரிமை எப்போது வந்தது? யாரால் வந்தது? அம்பேத்கர் அதற்காக என்ன செய்தார்? அவர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? அவரால் முடியாததை கலைஞர் எப்படி செய்தார்? பிறகு, எப்படி அது இந்தியா முழுவதும் சட்டமானது? என்பதையெல்லாம் சுருங்கச் சொல்லி விளக்கினார். இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் சொல்லி அந்தத் திட்டத்திற்கு திராவிட இயக்க கொள்கை பின்னணியை சுட்டிக்காட்டி வியக்க வைத்ததுடன், அ.தி.மு.க. செய்த துரோகங்களையும், பா.ஜ.க. செய்த ஓர வஞ்சனைகளையும் பட்டியலிட்டு, இதையெல்லாம் தாண்டி திராவிட மாடல் அரசு எல்லா துறைகளிலும் முதன்மை பெற்று விளங்குவதைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட திராவிட மாடல் அரசு மறுபடியும் வர வேண்டாமா? அதன் பயனை நாம் பெற வேண்டாமா?” என்று கேள்வி கேட்டு, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி, தனது உரையை நிறைவு செய்தார்.
பர்கூர்
அங்கிருந்து அடுத்த கூட்டம் கிருட்டினகிரி மாவட்டத்தில் நடைபெறும் இடமான பர்கூர் நோக்கிச் சென்றார். இக்கூட்டம் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தலைவர், இரவு 9 மணிக்கு வருகை தந்தபோது, முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். மக்கள் கடல் போல் திரண்டிருந்தனர். இந்நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை ஏற்றிருந்தார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருந்தார். அடுத்து, கழகத் தலைவர் வாகனத்தின் மீது மெதுவாக மேலே வந்த போது, மக்கள் குதூகலத்துடன் ஆரவாரமும், கையொலியும் செய்து மகிழ்ந்தனர். மக்களின் உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் கண்ட கழகத் தலைவர் தானும் அவ்வுணர்வுக்கு ஆளாகி, எடுத்த எடுப்பிலேயே, “தமிழ்நாடு முழுவதும்… 234 தொகுதிகளிலும்… ஸ்டாலினின் வெற்றி அலை வீசுகிறது!” என்று பிரகடனம் போல் அறிவிக்க, மக்களின் ஆரவாரமும், கையொலியும் கடல் அலைகள் போல் எழுந்து அடங்கின. மிகுந்த உற்சாகத்துடன் கழகத் தலைவர் தொடர்ந்து பேசினார். அதாவது, “சாதனைகளுக்கு மேல் சாதனை செய்தவர்களுக்கு வாக்கு கேட்க வந்திருக்கிறோம். ஆகவே, நமக்காக இந்த ஆட்சி மறுபடியும் வரவேண்டும். மேக்கப் ஸ்டார் எல்லாம் பேக்கப் ஆகி விட்டார்கள்” என்றும், “சட்டசபைக்குப் போக வேண்டியவர்கள் சட்டசபைக்கு போகட்டும். சினிமாவுக்கு போகிறவர்கள் சினிமாவுக்கு போகட்டும். சட்டசபையில் ஒருபோதும் விசில் அடிக்க முடியாது” என்று பூடகமாகவே கூறியும், பளிச்சென்று புரிந்து கொண்ட மக்கள், சிரித்து விட்டனர்.

மேலும் அவர், ஒன்றிய அரசால் தமிழ்நாடு எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டது? அதற்கு அ.தி.மு.க. எப்படியெல்லாம் துணை நிற்கின்றது? என்பதை எல்லாம் விவரித்தார். அதாவது, அண்மையில் நெல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாடு அரசு அதிலிருந்து பின்வாங்கும்படி, கடிதம் எழுதிய ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு எப்படிப்பட்ட துரோகத்தைச் செய்ய துணிந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, விவசாய பெருமக்களையும் மற்றவர்களின் எச்சரித்தார். ஓசூருக்கு பயணிகள் ஏராளமானோர் இருந்தும் விமான நிலையம் மறுக்கப்பட்டதையும், உத்தரப்பிரதேசத்தில் புதிதாகக் கட்டிய 5 விமான நிலையங்கள் பயணிகள் இல்லாததால் மூடி உள்ளதையும் ஒப்பிட்டு ஒன்றிய அரசை அம்பலப்படுத்தினார். இதற்கிடையில் முதலமைச்சருடன் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பர்கூர் திமுக வேட்பாளர் தே.மதியழகன், முதலமைச்சரை வழியனுப்பி விட்டு பர்கூர் தொகுதிக்கு வந்து கழகத் தலைவருடன் கலந்து கொண்டார். கழகத் தலைவர் வாகனத்துக்குள் சென்று அவரை வேட்பாளரை முறைப்படி வரவேற்று மரியாதை செய்து, மறுபடியும் இருவரும் வாகனத்திற்கு மேலே வந்தனர். அதைக் கண்டு ஆரவரம் செய்த பொதுமக்களிடம், “வேட்பாளர் வந்தவுடன் நான் கீழே சென்று மறுபடியும் இரண்டாம் முறையாக மேலே வந்தேன். அதுபோலவே, இரண்டாம் முறையாக திராவிட மாடல் அரசு வரும்” என்று மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே பொருத்தமாகக் கூறி, வேட்பாளரை பேச அழைத்தார். அவரும் சுருக்கமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கோரி, தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.
பங்கேற்றோர்
நிகழ்வில், தி.மு.க. மாவட்டத் துணை தலைவர் யுவராஜ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, தி.மு.க. மாநில கலை இலக்கியப் பேரவை துணைச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் பாபு, சி.பி.அய். மாநிலக் குழு உறுப்பினர் மாதையன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் சுரேஷ், தே.மு.தி.க. மாவட்டப் பொருளாளர் சரவணன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாநகரச் செயலாளர் ராமச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அப்துல் கப்பார் காதர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஜாகிர் ஆலம், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் முகமது உமர், எஸ்.டி.பி.அய்.மாவட்டத் தலைவர் ஷபியல்லா, மக்கள் நீதி மய்யம் மாவட்டத் தலைவர் ஜெயபால், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குணசேகரன், ஏ.அய்.எம்.அய்.எம். மாவட்டத் தலைவர் சையத் ஷபியுல்லா, ஆதித்தமிழர் பேரவை வெங்கடேஷ், தி.மு.க. பகுதிச் செயலாளர்கள் எம்.கே.வெங்கடேஷ், ஜி.ராமு, எம்.ராஜா, துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, ராமமூர்த்தி, லோகேஷ் ரெட்டி, மாநகர அவைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

