லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கான வருமான வரி விதிகள் பற்றிய புத்தகம் வெளியீடு

4 Min Read

சென்னை, ஏப். 13- வருமான வரி விதிப்பு குறித்த அடிப் படைச் சட்டம் 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்ட விதிகளோடு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்பொழுது அடுத்த ஆண்டுக்கான விதிமுறைகளில் திருத்தமும் சேர்க்கையும் உடன் சேரும்.

நிறுவன மற்றும் அமைப்பு ரீதியான வணிகமயத்தில், லாபம் ஈட்டும் நோக்கத்துடனும் செயல்படும் அமைப்புகளுக்கான வருமான வரிவிதிப்பு முறைகள் ஒருவகை. லாபம் ஈட்டலை நோக்கமாகக் கருதாமல், சேவையை, சமுதாயப் பணியினை முன்னிறுத்தி செயல்படும் அமைப்புகளுக்கான வரிவிதிப்பு முறைகள் மற்றொரு வகை.  வருமான வரி மற்றும் இதர வரிகள் பற்றிய தொழில்நுட்பப் பணியாற்றும் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (Chartered Accountant) எனப்படும் பட்டயக் கணக்காயர்களுள் மிகப் பலர் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் குறித்த வரிவிதிப்பு முறைகளில் கவனம் செலுத்தி தொழில் நடத்துவர். லாபம் ஈட்டலை நோக்கமாகக் கொள்ளாமல் செயல்படும் அமைப்புகளுக்கான வரி விதிப்பு முறைகளில் கவனம் செலுத்துபவர்கள் மிகச் சிலரே. அப்படிப்பட்ட வகையினரில், லாபம் நோக்கமற்ற அமைப்புகளுக்கான வருமான வரி விதிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகமொன்று அண்மையில் வெளியிடப்பட்டது. நடப்பு விவரங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு விதியும் எவ்வாறு மாறி, வளர்நிலை அடைந்துள்ளது என்பதையும் சேர்த்து புத்தகமாக வெளிவருவது அரிது. அப்படிப் பட்ட புத்தகத்தினை – Income Tax Provisions for NPOs – Journey from 1961 to 2025 என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகத்தினை எழுதியவர் ஆடிட்டர் ஆர்.ராமச்சந்திரன் ஆவார். ஆர்.ஆர் (RR) என பரவலாக பட்டயக் கணக்காயர் வட்டத்தில் அறியப்படுவர் ஆடிட்டர் ஆர். ராமச்சந்திரன்.

புத்தக வெளியீடு

ஆடிட்டர் இராமச்சந்திரன் எழுதிய புத்தகத்தினை வரிவகை தொழில் வல்லுனருக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு (All India Federation of Tax Practitioners – AIFTP) சென்னையில் வெளியீட்டு நிகழ்வினை நடத்தியது. சென்னை – எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் விடுதி (E – Hotel) அரங்கில் 7.4.2026 அன்று மாலை 6.30 மணி அளவில் நிகழ்ச்சி தொடங் கியது. கூட்டமைப்பின் தலைவர் டி.எம்.பட்டாட் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மாண்பமை நீதியரசர் சி.சரவணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் முனைவர் டி.சுதாகரராவ் அய்.ஆர்.எஸ். நிகழ்ச்சியில் மாண்பமை விருந்தினராகப் பங்கேற்றார். வருமான வரி ஆணையர் (மேல்முறையீடு) எஸ். மருதுபாண்டியன் அய்.ஆர்.எஸ். மற்றும் வருமான வரி ஆணையர் (விதிவிலக்கு) ஜே. பிரேமானந்த் அய்.ஆர்.எஸ். ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பட்டயக் கணக்காயர் எஸ். வெங்கட்ரமணி காணொலி மூலம் புத்தகம் பற்றியும், புத்தக ஆசிரியர் பற்றியும் உரையாற்றினார்.  நிகழ்ச்சிக்கான வரவேற்பு மற்றும் அறிமுக உரையினை வழக்குரைஞர் பாஸ்கர் வழங்கினார்.  நிறைவாக புத்தக ஆசிரியர் ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன் ஏற்புரை ஆற்றி நன்றி தெரிவித்தார்.

உரையாற்றியவர்களின் கூற்றுகள்:

நீதியரசர் சி. சரவணன்: பட்டயக் கணக்காயர் ஆர். இராமச்சந்திரன் எழுதிய இந்தப் புத்தகம் வரிவகை தொழில் வல்லுநர்களுக்கு மட்டுமின்றி, வரி நிர்வாகம் செய்திடும் அதிகாரிகளுக்கும், நீதித்துறை யினருக்கும் பயன்தருகின்ற வகை யில் அமைந்துள்ளது.

முனைவர் டி. சுந்தர்ராவ் அய்.ஆர்.எஸ்: புத்தகமானது, தெளிவான முழுமையான வருமான வரி சட்டக் கட்டமைப்பினை புரிந்திட வைக்கும் வகையிலும், நடைமுறைத் தேவைகளையும், நேர்கொள்ளும் சவால்களையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது தனிச்சிறப்பாகும்.

எஸ். மருதுபாண்டியன் அய்.ஆர்.எஸ்: வரிவகை தொழில் வல்லுநர்களுக்கும், மேல்முறையீட்டு அதிகாரத்தினருக்கும் உதவிடும் வகையில் வழக்கினை எடுத்து நடத் திடுவதற்கும் உரிய ஆணையினை பிறப்பிக்க உதவிடும் வகையில் முழுமையான வழிகாட்டிடும் நூலாக அமைந்துள்ளது.

ஜே. பிரேமானந்த், அய்.ஆர்.எஸ்: ஒரு புத்தகத்தின் மூலமாக அதன் ஆசிரியரை தெரிந்துக் கொள்ளுவது இயல்பானது. ஆனால் இந்த புத்தகத்தினை, அதனை எழுதிய ஆசிரியர் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.  அனைத்துத் தரப்பின ருக்குமான தேடுதல் குறிப்பினை வழங்குகின்ற புத்தகம் இது.

வி.எஸ். ஜெயக்குமார்: வருமான வரி விதி உருவாகிய வரலாற்றினை தெரிவிக்கும் இந்தப் புத்தகம் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குகி ன்றது.

ஆடிட்டர் இரா. இராமச் சந்திரன்: புத்தகம் எழுதிய பணியில் எனக்கு பெருந் துணையாக இருந்தது – வரித்துறை சார்ந்த முன்னோடி தொழில் வல்லுநர்களுடனான பழக்கம், அவர்கள் தந்த விளக்கம் ஆகியன உதவி புரிந்தன. வருமான வரி விதி குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் உரையாடும்பொழுது கிடைத்த விளக்கங்கள் பயன்தரும் வகையில் இருந்தன.  புத்தக உருவாக்கத்தில் என்னிடம் பயிற்சியில் உள்ள பழகுநர் – பயிற்சியாளர்கள் பெரும் உதவி புரிந்தனர். அத்துணை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நடத்திய கூட்டமைப்பின் பொறுப் பாளர்களுக்கு பெரும் நன்றி.

தமிழர் தலைவர் அவர்களின் வாழ்த்து மடல்

புத்தகம் பற்றியும், புத்தக ஆசிரியர் பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, மடல் எழுதியதை ஆடிட்டர் இராமச்சந்திரனின் மூத்த சகோதரர் இரா. சாமிநாதன் நிகழ்ச்சியில் வாசித்து நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்
கலந்து கொண்டோர்

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், வரி வகை மூத்த தொழில் வல்லுனர் பலரும், வருமான வரித்துறையிலும், இதர வரித்துறையிலும் பணியாற் றிடும் – பணியாற்றி பணி நிறைவு பெற்ற பலரும், வரிவகை பழகுநர் – பயிற்சி மாணவர்களும் கலந்து கொண்டனர். வரி வகை வழக்குகளை நடத்திடும் வழக்கு ரைஞர்களும் நிகழ்ச்சியில் பங் கேற்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் வீ. அன்புராஜ், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மற்றும் ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

வருமான வரி விதிகள் உருவான வரலாற்றினை விளக்கிடும் புத்தக வெளியீட்டு நிகழ்வானது, புத்தக வெளியீடுகளில் ஒரு மாறுபட்ட நிகழ்வாக இருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *