எந்தப் பெண்ணுக்கும்
பெரியாரைப் பிடிக்காது
உலகிலேயே பெண்ணடிமைத் தனத்தில் முதல் இடம் பெற்ற நாடு பாகிஸ்தான்தான். இரண்டாவது இடம் ஆப்கானிஸ்தான். மூன்றாம் இடம் இந்தியாவிற்கு. இவ்வடிமை நிலைக்கு இந்த நாடுகளின் முஸ்லீம். இந்து மதங்களே மூல காரணம் என்பது எந்தப் பெண்ணும் அறியாத செய்தி. எனவேதான் எந்தப் பெண்ணுக்கும் பெரியாரைப் பிடிக்காது. கல்வி வேறு, அறிவு வேறு எனப் பெரியார் சொன்னதை நூற்றுக்கு நூறு மெய்ப்பித்துக் காட்டியவர்கள் நம் பெண்களே. I.A.S., I.I.T. படித்த பெண்கள்கூடத் தம் குடும்பத்தில் தங்கள் தனித்தன்மையை, உரிமையை அறியாதவர்கள் தாம். பேராசிரியர், வழக்கறிஞர் பெண்களும் குடும்ப வாழ்வில் தம் பங்கு வாதத்தையோ நியாயத்தையோ நிலை நாட்டாதவர்கள் தாம்.
ஒவ்வொரு தமிழனுக்கும் பிறப்பிலேயே சூத்திரன் – தாழ்த்தப்பட்வன் -பிற்படுத்தப்பட்டவன் என்ற அடிமை விலங்கை மேலாண்மைச் சமூகத்தார் பூட்டியிருந்தனர். இந்த அடிமை நிலையால் ஏற்பட்ட அறியாமை காரணமாக வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சொர்க்கம் நரகம் ஏழேழு பிறவிகள், பாவ புண்ணியங்கள் போன்ற மூட நம்பிக்கை விலங்கையும் தானே பூட்டிக்கொண்டான். இந்த இரு விலங்குகளாலும் பிணைப்புண்ட தமிழன், தன் ஆற்றாமையால் எழுந்த ஆத்திரத்திற்கு வடிகாலாகத் தன் குடும்பப் பெண்களைத் தனக்கடிமை ஆக்கினான். ஒரு தமிழ்ப்பெண் – தந்தை, தமயன், தம்பி, கணவன், மகன் என ஆண் வர்க்கம் அனைவர்க்கும் அடிமை ஆனாள். பிறப்பால் அடிமை, அறியாமையால் அடிமை, பெண்பாலால் அடிமை என மூன்று விலங்குகள் பூட்டிய தமிழச்சி, நடைபிணமாக, மயக்க நிலையில் இயந்திரகதியாக இயங்கிக்கொண்டிருந்தாள், அவளுக்கு முரட்டு மருத்துவம் பார்க்கத் துணிந்தார் பெரியார். வாளால் அறுத்துச் சுடும் வன்மருத்துவரை யாருக்குப் பிடிக்கும்?
கற்புக்கரசி இங்கே!
கற்புக் கரசன் எங்கே?
பெண்ணுக்குக் கற்பு வேண்டாம் ஆம்! உன் கணவனுக்குக் கற்பு வேண்டாம் என்றால் உனக்கெதற்கு? பதிவிரதன், கற்பரசன் இல்லாத கட்டத்தில் பதிவிரதை, கற்புக்கரசி ஏன்?
உனக்கு ஒரு திருமணம். உன் கணவனுக்கு மட்டும் மூன்று, நான்கு திருமணமா? உனக்கு மட்டும் ஒரு கணவன்! உன் கணவனுக்கு இரண்டு மனைவியரா? நீயும் இரண்டு திருமணம் செய்து கொள். அவன் விரும்பியவர்களுடன் எல்லாம் கூடி வாழ்கிறான். நீயும் திருமணம் செய்து கொள்ளாமல் விரும்பியவனுடன் கூடி வாழ்.
ஒருவனுக்கு நீ அடிமை என்பதைக் காட்டப் பெண்ணுக்குத் தாலி யென்றால், ஆணுக்கும் தாலி போடு…. இல்லாவிட்டால் உன் தாலியைக் கழற்றி எறி.
பிள்ளை பெற்று வளர்க்கும் பாசத்தால்தானே கணவனுக்கு அடங்கி ஒடுங்கிக் காலம் கழிக்கிறாய்? அவன் ஒரு பிள்ளையைச் சுமந்து பெற்றிருந்தால்தானே வலி தெரியும்: பொறுப்பு வரும். எனவே பெண்ணே! இனி நீ பிள்ளை பெறாதே.
இப்படிப் பெண்களைத் திடுக்கிட வைத்தார் பெரியார். சமூக ஒழுக்கத்திற்குக் காப்பாக விளங்கும் கற்பையும் திருமணத்தையும் பெரியார் ஏற்றுக் கொண்டவர் தாம்.
சுகாதாரம், சரீரம், பொது ஒழுக்கம் பொறுத்து நான் கற்பை ஆதரிக்கிறேன். ஆனால் கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப் படுவதில்லை. ‘ஒரு பிறவிக்கு ஒரு நீதி’.
என்ற கற்புமுறை ‘அடியோடு ஒழிக்கக்கப்பட வேண்டும்’ என்றார் பெரியார்.
கற்பின் பெயராலும் திருமணம் என்ற உரிமையாலும் ஒரு பாலினம், தன்னிலும் உடலால் வலிமை குறைந்த மற்றொரு பாலினத்தை வாழ் நாள் அடிமையாக அடிமையாக – 24 மணி நேர வைத்திருப்பது சரியா?.
என்பதுதான் பெரியார் எழுப்பிய வினா.
பெண் ஏன் அடிமையானாள்?
பெண்ணே! பெண்ணின் அடிமை நிலைக்கும் காரணம் பெண்களே என்பதைப் புரிந்து கொள். பெண் அடிமை நிலையை நீக்க ஆண் முன்வர மாட்டான். பெண்தான் தன் அடிமை நிலை போக்கப் போராட வேண்டும்.
எனப்புத்தி புகட்டினார். பெண்களின் அழகையும் அங்கங்களையும் வருணிப்பது பெண்ணுக்குப் பெருமை ஆகாது. இது தமக்கு அவமானம், அடிமைத்தனம் எனப் பெண் உணர்ந்தாளா? தன்னைப் பொன்னாலும் பூவாலும் அலங்கரித்துக் கொண்டு பிறர் கவனத்தைத் தம் மீது திருப்புவது இழிவு, அநாகரிகம் என எந்தப் பெண்ணுக்காவது தோன்றாதது ஏன்? என்ற பெரியாரின் கேள்விகளில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டால் பெண்ணுக்காகப் போராடிய ஒரே ஆண் பெரியாரே என்பது புரியும்.
பிள்ளை பெறாவிட்டால்
பெண்ணுக்கு என்ன நஷ்டம்?
பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுதலை பெற வேண்டும். இது இயற்கைக்கு விரோதம் என்று சொல்வார்கள். உலகில் மற்ற உயிரினங்கள் இயற்கை வாழ்வு நடத்தும்போது, மனிதன் மட்டுமே இயற்கைக்கு மாறாகத் தன்னை மாற்றிச் செயற்கை வாழ்வையே பெரும்பாலும் நடத்தி வரும்பொழுது இந்த விசயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. பெண். பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால் உலகம் விருத்தியாகாது என்பார்கள். மானிட வர்க்கம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
என்ற மிகக் கடுமையான கேள்விகளைக் கேட்டுப் பெண்ணைத் திணற வைத்தார்.
நீ பிள்ளை பெறாவிட்டால் உலகம் அழிந்துவிடும் என்றால் உன்னை அழித்துக் கொண்டிருக்கும் உலகம் அழிந்தால் உனக்கென்ன?
என்று கேட்ட பெரியாரைப் புரிந்து கொண்டால் அன்றே பெண் விடுதலை பெறுவாள். அது கொஞ்சம் கடினம்தான்.
பெரியார் கண்ட இனிவரும் உலகம்
சூரிய மண்டல உண்மைகளை முதலில் வெளியிட்ட கோபர்நிக்கஸ். நட்சத்திரங்களும் சூரியனுக்கு ஒப்பானவை எனக் கண்டறிந்த புரூனோ, உலகம் உருண்டை என்பதை உலகிற்கு உணர்த்திய கலிலியோ, பரிணாம வாதத்தைப் படைத்தளித்த டார்வின் போன்ற அறிவியல் அறிஞர்கள் மதத்தை அழிக்கும் மிகப் பெரிய கருவி விஞ்ஞானம் தான் என்பதை உலகிற்கு உறுதி செய்தார்கள். சமூக விஞ்ஞானியான பெரியாரும், அறிவியல் வளர்ச்சியால் உலகில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அன்றே பதிவு செய்தார். (குடும்பக்கட்டுப் பாடு முதல் பொதுச்சமையலறை வரை) அவை படிப்படியாக இன்று நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பதையும் நாம் கண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாகப் பெண்கள் பிள்ளை பெற வேண்டாம் என்ற பெரியாரின் சொற்கள் அறிவியல் உண்மை ஆகத் தான் போகிறது. வயிற்றைச் சுமக்க வேண்டாம்; வளைகாப்பு நடத்த வேண்டாம். கணவனின் விந்தணுவையும், மனைவியின் கருமுட்டையையும் சோதனைச் சாலையில் கொடுத்து விட்டுச் சென்று குறிப்பிட்ட நாளில் குழந்தையை DOOR DELIVERY பெற்றுக் கொள்ளும் காலம் மிக விரைவில் வரத்தான் போகிறது.
பெரியாரின் எதிர்ப்பின் பின்புலம் காண்பீர்
கடவுள் கருத்து, நாட்டுப்பற்று, தாய்மொழிப்பற்று, பெண்ணுரிமை என்பவை குறித்த பெரியார் கொள்கையில் இருந்த உண்மையொளியையும், நேர்மைத் திறத்தையும் மேலே விவரித்தோம். பெரியாரின் ஒரே கொள்கையான சமநிலைச் சமுதாய உணர்வு தான் இந்த நான்கு கொள்கைகளுக்குள்ளும் ஊடுருவியிருந்ததை நாம் நன்கு உணரலாம். மனிதருள் கீழ் மேல் கற்பிக்கத் துணை நின்ற கடவுளை எதிர்த்தார். மனிதரை உயர்வடையச் செய்யாமல் தாழ் நிலையில் அழுத்தி வைக்கத் துணை நீற்கும் மொழியை எதிர்த்தார். சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க மறுக்கும் காங்கிரசை, காந்தியை,நாட்டு விடுதலையை அவர் எதிர்த்தார்.
மண்ணில் மண்ணாய் மக்கிக் கிடக்காதே; உன் ஒளி மங்கிக் கிடக்காதே
எனச் சுட்டிக் காட்டவே பெண்ணடிமை நிலையை எதிர்த்தார். பெண் ஆணுக்கு அடிமை தான் என்ற உணர்வை உள்ளுணர்வாய் வளர்த்துக் கொண்டிருக்கும் வல்லாளர்களுக்குப் பெரியார் என்றும் எதிரி தான்.
எனவே பெரியார் குறித்துக் காமாலைப் பார்வை யாய்க் காண்பதைக் கைவிட்டு உண்மையொளி வீசும் தூய விழி திறந்து பெரியாரை ஆய்வு செய்வோம். அவர் கருத்து, மனிதகுல மாண்பை வளர்க்கும் வழி காட்டுமா என விவாதித்து விளக்கம் பெறுவோம். பெரியார், சீசரின் மனைவி அல்லர்; திறனாய்விற்கு விலக்குப் பெற, அவரிடமும் குறை காணும் உரிமையையும். பகுத்தறிவையும் பெற அவரே நம்மை வழி நடத்தியிருக்கிறார்.

