[29-03-2023 நாளிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்]
நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் இட ஒதுக்கீடு வழியில் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு பிரிவு மக்கள் கோரும்போது, இதர பிரிவு மக்களது நலன்கள் பாதிக்காதபடி அந்த கோரிக்கையைக் கையாள்வது என்பதே ஓர் அரசாட்சி நுணுக்கக் கலையாகும். என்றாலும் கருநாடகத்தைப் போன்ற மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், பெரும்பான்மை மத மக்களின் ஆதரவு பெறும் நோக்கத்துடன் சிறுபான்மை மதப் பிரிவு மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுபவர்களாகத் தங்களை மக்கள் பார்ப்பதை விரும்புகிறார்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினருக் கான இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, ஆதிக்க ஜாதி மக்களான ஒக்காலிகர்களுக்கும், வீரசைவ லிங்காயத் சமூ கங்களுக்கும் கூடுதலாக தலா 2 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது என்ற கருநாடக அரசின் முடிவு, தேர்தல் ஆதாயம் பெறுவதற்காக மக்களிடையே மதரீதியில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியே ஆகும். அது மட்டுமன்றி, தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவில் பல்வேறு அச்சமூகங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவில்
4 உப பிரிவுகளையும் உண்டாக்கி இருக்கிறது.
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களில் உள்ள ஏழை மக்கள் இப்போது பொருளாதார ரீதியில் பலமிழந்து போயுள்ள ஏழை மக்களுக்கான 10 சதவிவிகித பொதுப் பிரிவிலான இட ஒதுக்கீட்டில் போட்டி போடவேண்டும். இவ்வாறு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது, 2015 ஆம் ஆண்டு மகாராட்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மதத்தின் அடிப்படையி;ல் இடஒதுக்கீடு அளிப்பது சட்டப்படி செல்லாது என்றாலும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்வது பற்றி, கருநாடக மாநில பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. இம்மாநிலத்தில் 1995 இல் முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யவே அளிக்கப்பட்டது என்று தற்போதைய பா.ஜ.க. அரசு கூறுகிறது.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை என்பது உண்மைதான். முஸ்லிம்களின் சமூகத்தில் அவர்களது பின் தங்கியுள்ள நிலை எந்த அளவு இருக்கிறது என்று ஒரு முறையான ஆய்வு மேற்கொள்ளப்படாமலேயே இட ஒதுக்கீடு அளித்திருப்பதாகக் கூறி, அத்தகைய இடஒதுக்கீடு பல நீதிமன்ற தீர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் பொருத்தமான அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட மத சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது இயலக் கூடியதே ஆகும். அவர்களை பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் பட்டியலில் சேர்த்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை சில மாநிலங்கள் அளித்து வருகின்றன. முஸ்லிம்களின் பெரும் பிரிவினர் கல்வி மற்றும் சமூக அளவில் குறிப்பிடத் தக்க அளவில் முன்னேறி உள்ளனர் என்ற காரணத்தைக் காட்டியோ அல்லது வேலை வாய்ப்புகளைப் பெறுவதிலும் அவர்கள் முன்னேறியுள்ளனர் என்று கூறியோ அவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் முயற்சி வீணானது – இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை முஸ்லிம் அமைப்புகளும் தலைவர்களும் எதிர்த்து உள்ளனர். அதே போல தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவு மக்களை மேலும் புதிய பிரிவுகளாகப் பிரித்து இருப்பதும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ஒரு முரண்பாடாகும். அவர்களுக்கான 17 சதவிகித இடஒதுக்கீடு; புதிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக அச்சமூகத்தினர் போராட முன்வந்துள்ளனர்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை இவ்வாறு தேர்தல் நேரங்களில் மிகப் பெரிய அளவில் மாற்றுவது மக்களிடையே சந்தேகத்தைக் கிளப்பி விடும் என்பதுடன், தேவையே இல்லாத எதிர்ப்பு உணர்வையும் போராட்டத்தையும் அது தூண்டியும்விடும்.
நன்றி: ‘தி இந்து’ 29-03-2023
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்