சென்னை, ஏப்.4- துணை வேந்தர்களை நிய மிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதன் காரணமாக கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தடை நீக்கம்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கோடைகால நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றம், பிரதான வழக்கை விசாரிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதன்படி இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மா திகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அதிகாரம் உள்ளது
அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பதை மறைத்து, அரசியல் உள்நோக்கத்தோடு, சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யவேண்டும். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காக மாநில அரசுக்கு வழங்கியதை பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரண்பாடானது என கூற முடியாது.
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை பின்பற்றியே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பல்கலைக்கழகங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதன் காரணமாக கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை. அதனால், மனுதாரருக்கு அபராதம் விதித்து, இந்த வழக்கை தள்ளு படி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கை வருகிற 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

