“சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே ஒன்றிய அரசுக்கு அக்கறை”

3 Min Read

உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர், மார்ச் 6 “சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே ஒன்றிய அரசு அக்கறை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி.

ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.147 கோடி” என துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கலைஞர் சிலை திறப்பு

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில், நேற்று (5.3.2026) காலை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி சிலை, தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ச.ராமநாதன் சிலை ஆகியவற்றை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில் கலைஞர் சிலை, ராமநாதனின் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடிய இடம் இந்த தமிழ்ச் சங்கம் தான். அதன்பின்னர் 1970-ஆம் ஆண்டில் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.

ஆனால், இது வெறும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தான், இதற்கு எழுந்து நின்று நாம் மரியாதை செலுத்த தேவையில்லை என ஒரு கூட்டமும், சிலர் சட்டப் பேரவையில் இந்த பாடலை பாடக் கூடாது என ஒரு கூட்டமும் சொல்கின்றனர்.

1911-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தச் சங்கம், தற்போது 100 ஆண்டுகளைக் கடந்து தமிழ்ச் சேவையை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.தமிழுக்கு வருகிற ஆபத்துகளை எதிர்ப்பது ஒரு பக்கம், தமிழின் பெருமையைப் பரப்புவது இன்னொரு பக்கம் என இந்தச் சங்கத்தின் பணிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

ஹிந்தித் திணிப்பு போராட்டம்

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என 1920-ஆம் ஆண்டில் முதலில் தீர்மானம் நிறைவேற்றியதும், தமிழ் மொழிக்கு தனிப் பல்கலைக் கழகம் தேவை என தீர்மானம் நிறைவேற்றிய இடமும் இதுவே. இதைவிட கூடுதல் சிறப்பு என்னவென்றால், 1937-ஆம் ஆண்டில் கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழியைத் திணிக்கும்போது அதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியதும் இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான்.

ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிரைப் பங்கேற்க வைத்தவர் இந்தப் பகுதியை சேர்ந்த அம்மையார் தர்மாம்பாள் என்பவர் தான். அப்போது தொடங்கிய ஹிந்தி மொழித் திணிப்பு தற்போது வரைக்கும் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல், தற்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஹிந்தி மொழியை திணித்து விட வேண்டும் என ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.3,500 கோடியை வழங்காமல் தடுக்கின்றனர்.

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதியை வழங்குவோம் என ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருத்துக்கு இடம் இல்லை என கூறிவிட்டார்.

அதேபோல் மிசா சட்டம் வந்தபோது, திமுகவுக்கு பொதுக்குழு கூட்டம் நடத்த தமிழ்நாட்டில் யாரும் இடம் தரவில்லை. அப்போது இடம் கொடுத்த ஒரே இடம் கரந்தை தமிழ்ச் சங்கம் தான். இந்த சங்கத்தின் மீது தலைவர் கலைஞருக்கு எப்போதும் பற்றும், பாசமும் உண்டு.

தமிழின் தொன்மையை வெளி உலகக்துக்கு எடுத்துரைக்கும் வகையில், வேறு சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய பன்னாட்டு விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் தமிழ்நாடு முதலமைச்சர்  தொடர்ந்து வழங்கி வருகிறார்.

தமிழில் உள்ள அரிய நூல்கள் பல இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் இன்றைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம், தமிழில் கொண்டுவர முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது.

தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு இன்றைக்கு ஏராளமான பணிகளைச் செய்து கொண்டு வருகிறோம். ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.147 கோடி.

‘தமிழ் தமிழ்’ என்று சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றுகின்ற வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *